Wednesday 1 March 2023

அலட்சியம் வேண்டாம்!

 

தமிழர்களில் இரு பிரிவினர் தான் இருக்கிறார்கள். ஒன்று குடிகாரர் கூட்டம் இன்னொன்று குடிகாரர் அல்லாத கூட்டம்!

குடிகாரன் அல்லாதவனால் பிரச்சனை இல்லை. இந்த குடிகாரர் கூட்டம் தான் நமது சமூகத்தில் பிரச்சனையான கூட்டம்.  அவனிடம் நாம் பேச முடியாது. அவன் "உங்க அப்பன் ஊட்டு காசா?" என்று  நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்பான்!  "என்னோடு காசு நான் குடிப்பேன்!  உனக்கு எங்கே வலிக்குது?" என்று கேட்கும் போது நாம் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது?

சரி! இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இவனுக்குப் பெண்டாட்டி, பிள்ளைகள் எதுவும் ஞாபகத்திற்கு வருவதில்லை! குடித்து குடித்து இளம் வயதிலேயே வியாதிகள் வந்து, கையிழந்து, காலிழந்து கடைசியில் வீட்டில் நிரந்தரமாக உட்கார்ந்து விடுவான்! பெண்டாட்டி தான் வேலை செய்து காப்பாற்ற வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் கூட பிரச்சனைகள் வரும். மிகவும் கடினமான சூழல் வரும் போது ஊடகங்களை நாட வேண்டி வரும். ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்தது போல வெளியே காட்டிக்கொள்வார்கள்!

நாம் கேட்பதெல்லாம் பணத்தின் மீது உனக்கு என்ன அவ்வளவு அலட்சியமா என்பது தான். குடிக்கும் போது பணத்தின் அருமை தெரியவில்லை. குடித்துக் கும்மாளம் அடித்து கடைசியில் படுத்து விட்டால் பின்னர் யார் காப்பாற்றுவது? குடித்து வேறு வழியில்லாமல் போகும் போது இந்த சமுதாயம் இவர்களுக்கு, இந்த குடிகாரர்களுக்கு, உதவி செய்ய வேண்டுமாம்!

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியைப் படித்தோம்    பிச்சை எடுக்கும் ஒருவர் இறந்து போனார். அவர் வாழ்ந்த இடத்தைச் சோதித்துப் பார்த்ததில் சில ஆயிரம் வெள்ளிகள் இருந்தனவாம்! ஒரு பிச்சைக்காரர் கூட தனது கடைசி காலத்தில் பணம் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்.  ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டிக்காக்க வேண்டியவன் குடித்து  ஓட்டாண்டியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான்! என்ன சொல்ல?

இந்த குடிகார கூட்டத்தை நினைக்கும் போது வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பணம் இருக்கும் போது குடித்துக் கும்மாளம் போடுவதும் அனைத்தையும் இழந்த பிறகு "சமுதாயமே உதவு" என்று கெஞ்சுவதும் - இப்படி ஒரு வேடிக்கையான வாழ்க்கை இவர்களுடையது.

நண்பர்களே!  பணம் ஒவ்வொருடைய வாழ்க்கைக்கும் மிகவும் தேவையானது.  பணத்தின் மீது அலட்சியம் காட்ட வேண்டாம். பணத்தின் மீது அலட்சியம் காட்டினால் பணமும் உங்கள் மீது அலட்சியம் காட்டிவிடும். நீங்கள் பெரிய கோடிசுவரனாக ஆக முடியாவிட்டாலும் உங்களின் தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்க வேண்டும். வீடு வாசல் சொந்தமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் அனைவரையும் படிக்கவைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் நமக்குத் தேவை என்பதை நமது சமுதாயம் உணர வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்! பணம் நமக்கு வேண்டும்! நலமாக வாழ பணம் வேண்டும்! நம்பிக்கையோடு வாழ பணம் வேண்டும்!

No comments:

Post a Comment