Thursday, 30 November 2023
தகுதியா ? கோட்டாவா?
Wednesday, 29 November 2023
சீனப்பள்ளியில் இத்தனை இந்திய மாணவர்களா?
SJK (C) Ton Fah, Beranang.
Tuesday, 28 November 2023
முனைவர் பட்டம் நோக்கி நஜிப்!
தனது கல்வியைத் தொடர்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப். நல்ல செய்தியாகத்தான் நான் நினைக்கிறேன்.
அவரைப்பற்றி நாம் என்னன்னவோ படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியர்களுக்கு அவர் செய்த சில நல்ல காரியங்களை நினைத்தும் பார்க்கிறோம். உண்மையில் அவர் தான் இந்தியர்களுக்கு உருப்படியான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதை மறப்பதற்கில்லை.
அவர் செய்த ஊழல் காரியங்களுக்காக இன்றளவும் நாம் அவரைக் குறை சொல்லவில்லை. அவர் மனைவியைத்தான் விரல்கள் சுட்டுகின்றன. அன்பு மனைவிக்காக அவர் செய்த துர்காரியம்.
அதை விடுவோம். இப்போது சிறையில் இருக்கும் நஜிப் தனது கல்வியைத் தொடர்கிறார் என்பது தான் செய்தி.
தான் செய்த குற்றத்திற்காக பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் நஜிப் "எதுவும் எனக்குத் தடையாக இருக்கப் போவதில்லை" என்று தனது பொருளாதாரக் கல்வியை மீண்டும் தொடர்கிறார். பிரிட்டன் நோட்டிங்ஹாம் பல்கலைகழகத்தின், 1974 ஆண்டில் பட்டம் பெற்ற, முன்னாள் மாணவரான நஜிப் ஒரு பொருளாதார பட்டதாரியாவார். இப்போது யு.கே.எம். எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்ழகத்தில் பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்வது இருக்கப்போகும் நாள்களில் அவர் சோம்பிக்கிடக்கப் போவதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இதற்கு முன்பும், இப்போதும் கூட, காஜாங் சிறையில் இருக்கும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பலர் பல துறைகளில் கல்வி கற்றுப் பட்டமும் பெற்றிருக்கின்றனர். ஏன் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தலைவர் லிம் கிட் சியாங் கூட தனது சட்டக்கல்வியை இதே சிறைச்சாலையில் தான் படித்தவர். அதனால் நஜிப் தனது பொருளாதார முனைவர் பட்டத்துக்காக படிப்பதில் ஒன்றும் அதிசயமல்ல. வீணே நேரத்தை வீணடிப்பதைவிட கல்வியைத் தொடர்வது நல்ல காரியம்.
இது போன்று கல்வி கற்பவர்களை நாமும் வரவேற்போம். நடந்து போன காரியங்களை நினைத்துப் புலம்புவதைவிட வரப்போகும் நல்ல காரியங்களை நினைத்து அகமகிழ்வோம்!
Monday, 27 November 2023
அமைச்சரவை மாற்றமா?
Sunday, 26 November 2023
கடவுளுக்கும் ஆபத்தா?
Saturday, 25 November 2023
"உரிமை" தொடக்க விழா!
இந்தியர்களுக்கான ஓரு புதிய கட்சி உருவாகிவிட்டது.
வாழ்த்துகள்! பெரும் எதிப்பார்ப்புடன் தொடங்கப்பட்டிருக்கிறது உரிமை என்னும் அரசியல் கட்சி. 15-வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் நமது நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எப்படி நாம், இந்தியர்கள் ஒன்று சேர்ந்தோமோ, அதே வேகத்தில் தொப்பென்று என்று போட்டோமோ, இப்போது அதே வேகத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கவும் தயார் நிலையில் உள்ளோம். கட்சி ஆரம்பித்தும் விட்டோம்.
என்னைக் கேட்டால் இந்த வேகம் நமக்குத் தேவை தான். இனியெல்லாம் அறுபது எழுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை! உடனுக்குடன், சூடோடு சூடாக, நாம் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ம.இ.கா. பணம் உள்ளவர் கட்சி. பி.கே.ஆர். மலாய்க்காரர் கட்சி. ஜ.செ.க. சீனர்கள் கட்சி. பிரதமர் அன்வார் சமீபத்தில் கூறியது போல இனி பி.கே.ஆர். கட்சி மலாய்க்காரர் தான் நமக்குத் தலைமை தாங்கப் போகிறார்கள். இந்தியர் யாரும் தலைவராக வர வாய்ப்பில்லை! ஆக இந்தியர் பிரச்சனைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை.
இந்த நிலையில் உரிமை என்னும் இந்த இந்தியர் கட்சியைத்தான் நாம் நமம்புகிறோம். பல்லின மக்களைக் கொண்ட கட்சிகளை நாம் நம்பினோம்/ ஆனால் அந்தக் கட்சிகள் நம்மை மனிதனாகக் கூட மதிக்கவில்லை. அது நமது குற்றம் அல்ல. பல்லின கட்சிகள் இந்தியர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மலேசியர்களுக்காகத்தான் பேச வேண்டும். ஆனால் அப்படி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலாய்க்காரர்களுக்காகப் பேசுகிறார்கள். சீனர்களுக்காகப் பேசுகிறார்கள். இந்தியர் என்று வரும் போது அது பற்றி யாரும் வாய் திறப்பதில்லை!
இதைத்தான் சமீப காலமாக கண்டு வருகிறோம். ஏன்? பிரதமரே மலாய்க்காரர் பிரச்சனைப் பற்றி பேசினால் தான் அவர்களின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என பகிரங்கமாகவே பேசுகிறார்! ஆக, ஒன்றைப் புரிந்து கொண்டோம். இனி யாரையும் நம்புவதாக இல்லை. நம் கையே நமக்கு உதவி.
நாம் ஏன் 'உரிமை' கட்சி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். பத்தோடு பதினொன்று என்று போயிருக்கலாமே? அப்படியல்ல. பேராசிரியர் இராமசாமி அவர்களின் மீது உள்ள நம்பிக்கை. அவர் ஒரு நல்ல சேவையாளர் என்கிற பெயர் எடுத்தவர். இப்போது நமக்குத் தேவை எல்லாம் நமது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்கள் தான். அதனால் தான் நம்து தமிழ் மக்கள் அவரை நம்புகிறார்கள். அவர் மீது யாரேனும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
உரிமை கட்சி என்பது நமது எதிர்காலம். யாராவது துணிந்து இறங்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்த்தோம். பேராசிரியர் வாராத வந்த மாமணியென வந்திறங்கியிருக்கிறார். அவருக்கு ஆதரவு வழங்குவது நமது கடமை. மற்றபடி நமது கடமைகளை நாம் செய்வோம்! நாமும் முன்னேற வேண்டும். நாடும் முன்னேற வேண்டும்!
Friday, 24 November 2023
என்ன? கடவுளையும் கைவிடவேண்டுமா!
Thursday, 23 November 2023
பாலஸ்தீன மாணவர்கள்!
பாலஸ்தீன மாணவர்கள் சுமார் 600 பேர் அரசாங்க கல்லூரிகளில் பயிலும் நிலையில் 200 பேர் தனியார் கல்லூரிகளில் பயில்கின்றனர் - அவர்கள் அனைவருக்கும் கட்டணமின்றி பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். மக்கள் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர். எந்தவொரு சுதந்தரமுமில்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் அங்குள்ள மாணவர்களுக்காவது கொஞ்சம் நல்லது செய்வோமே என்கிற அக்கறையில் அங்குள்ள மாணவர்களுக்கு நமது கல்லூரிகளில் இடம் கொடுத்து அந்த மாணவர்களுக்கு உதவி செய்கிறது அரசாங்கம்.
இந்த உதவி என்பது முற்றிலுமாக மனிதாபிமானம் கொண்ட உதவி என்று தான் சொல்ல வேண்டும். இந்த உதவி மட்டும் தான் இந்த நாடு செய்கின்ற - அந்த மக்களுக்குச் செய்கின்ற - முழு உதவி. இது மட்டும் தான் அவர்களுக்கு முழுமையாக போய்ச் சேருகிறது என்பதை நம்பலாம். பொருளாதார உதவி, பண உதவி என்பதெல்லாம் இங்குள்ள அரசியல் முதலைகள், திருடர்கள் - இவர்கள் தின்னது போக மீந்தவை தான் அங்குப் போய்ச் சேரும். அதனைத்தான் சமீபகாலமாக கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஒருவனுக்கும் கை சுத்தமில்லை என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன!
இப்போது அதிகமான மலேசிய இந்தியர்கள் இந்த உதவியை ஓரளவு எதிர்க்கின்றனர். "இடமில்லை என்பதால் தானே இந்திய மாணவர்கள் கல்லூரிகளில் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்படுகின்றனர். அப்படியிருக இப்போது எப்படி 800 இடங்கள் அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன?" என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆனால் கல்வி அமைச்சு இதுவரை "அது மலாய் மாணவர்களுக்கான இடங்கள். அந்த இடங்களைத்தான் இப்போது பாலஸ்தீன மாணவர்களுக்காக ஒதுக்கியிருக்கிறோம்" என்று எந்த அறிக்கை மூலமூம் சொல்லவில்லை. சொல்லவில்லை என்றால் அது இந்திய மாணவர்களுக்கான இடங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டன என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படித்தான் நாமும் நினைக்கிறோம்.
எப்படியோ நமது இடங்கள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் பாலஸ்தீன மாணவர்கள் பயன் அடைகிறார்களே என்று நினைக்கும் போது அது மகிழ்ச்சி தான். அது போன்ற பெருந்தன்மை நமக்கு மட்டும் தான் உண்டு. அதை அரசாங்கமும் அறிந்திருக்கிறது. மலாய் மாணவர்களின் 800 இடங்களை அங்கிருந்து பறித்துக் கொடுக்க முடியாது என்பதால் தான் இப்படிச் செய்கிறார்கள்! அப்படி எல்லாம் செய்தால் மலாய்க்காரர் ஆதரவு அரசாங்கத்திற்கே இல்லாமல் போய்விடும்! மதமாவது மண்ணாவது என்கிற நிலை ஏற்பட்டுவிடும்!
பாலஸ்தீன மாணவர்களின் எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்வோம்!
Wednesday, 22 November 2023
யாரைத்தான் நம்புவதோ!
Tuesday, 21 November 2023
புதிய இந்தியர் கட்சி!
Monday, 20 November 2023
ஏன் இந்தப் புறக்கணிப்பு?
பொதுவாக மலேசியா வாழ் இந்தியர் கடைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
நாம், தமிழர்களின் கடைகளைப் பற்றி சொல்லவில்லை தமிழர்களின் கடைகளில் நிச்சயம் தமிழ் இருக்கும். ஆனால் தங்களது வளர்ச்சிக்குத் தமிழர்களையே நம்பியிருக்கும் தமிழரல்லாதாரின் கடைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தமிழர்கள் அந்தப் புறக்கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான் அவர்கள் அதனைச் செய்கிறார்கள்.
நாம் இவர்களை வழிக்குக் கொண்டுவர ஒரே ஒரு விஷயத்தைச் செய்தால் போதும். மிக எளிதான் வழி தான். யாரிடமும் சண்டைக்குப் போக வேண்டாம். சச்சரவுகள் வேண்டாம். பேசினால் தேவையற்ற பேச்சுகள் வரும். ஒரே வழி தான். வாடிக்கையாளராவதை நிறுத்துங்கள். அங்கே போக வேண்டாம். அப்படி என்ன தான் உயர்ந்த, தரமான கடையாக இருந்தாலும் அங்கே போவதை நிறுத்துங்கள். அவ்வளவு தான்.
நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் அது மட்டும் தான். அவர்களின் கடைகளுக்குப் போவதை நிறுத்தினால் அவர்கள் தானாக வழிக்கு வருவார்கள்! பல உணவகங்கள் தமிழையே மறந்து விட்டார்கள். அவர்களுக்கு மற்ற இனத்தவர் மீது அவ்வளவு நம்பிக்கை. அதனாலென்ன? அவர்கள் நம்மை மறந்தால் நாம் அவர்களை மறப்போம்!
ஒரு சிலர் ஆரம்பகாலத்தில் தமிழோடு சேர்ந்து வளர்வார்கள். வளர்ந்தபிறகு தமிழர்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். அப்போதுதமிழை மறந்துவிடுவார்கள்.
ஆனால் நமது கொள்கை ஒரே கொள்கையாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் இல்லையேல் நமது ஆதரவு இல்லை. ஒரு நண்பர் இனிப்பு பலகாரவகைகளை வைத்து கடையொன்றை ஆரம்பித்தார். . நான் அந்தக் கடையின் வாசலைக்கூட மிதிக்கவில்லை. காரணம் தமிழ் இல்லை. ஒரு வேளை அவருக்கு இனிப்பு என்பதால் மற்ற இனத்தவரின் ஆதரவு கிடைக்கும் என நினைத்தார போல் தோன்றுகிறது . கடை கை மாறிவிட்டது. இன்று அதே இடத்தில் அதே வியாபாரம். வேறொருவர். நன்றாக ஓடுகிறது. தமிழ் உண்டு.
யாரிடமும் சண்டை வேண்டாம். நாம் ஆதரவு கொடுக்க வேண்டாம். நம்மை மதிக்காதவர்கள் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன?
நம்மிடம் உள்ளது ஒரே பதில் தான். நாங்களும் பதிலடி கொடுப்போம்!
Sunday, 19 November 2023
நீதி, நியாயம் வேண்டும்!
உள்ளூர் துரித உணவகங்கள் இப்போது தங்களது அடையாளங்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதுவும் அவசர அவசரமாக!
என்னதான் எழுத்துகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து இதனை மலேசியப் பொருள் என்று சொன்னால் .....சரி!.........நம்புபவர்கள் நம்பட்டும்! ஆனால் நமக்குப் பாலஸ்தீனம் தான் கடைசிவரை! அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த துரித உணவகங்கள், சரி, ஏதோ ஓர் கோட்பாட்டை கடைப்பிடிக்கின்றன. ஆனால் அதோடு அந்தப் பிரச்சனை முடிந்து விடவில்லையே. உணவகங்கள் மட்டும் தானா! பானங்கள் நம்மைச் சுற்றிச்சுற்றி வருகின்றனவே, அவைகளை என்ன செய்ய முடியும்? நம்மால் கொஞ்சமாவது தியாகம் செய்ய முடியுமா? அவைகளின் பெயர்களை மாற்ற முடியுமா? ஒரு மண்ணும் வேண்டாம். வெறும் தண்ணிரை பாட்டல்களில் கொண்டு செல்லுகிறார்களே அதையாவது செய்ய முடியுமா? பெரும்பாலும் வெயில் தாங்க முடியாமல் வெறும் தண்ணீரை அருந்தும் அந்த மனிதர்கள் தான் உயர்ந்தவர்கள். அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
எத்தனை பேர் அதனைச் செய்ய முடியும்? கொஞ்சம் தாகம் என்றாலே உடனே கோக், பெப்சி என்று அலைவது யார்? நியாயம் பேசும் அரசியல்வாதிகள் தானே அனைத்தையும் செய்கிறார்கள் ஆமாம், இந்த நிறுவனங்களை எல்லாம் நடத்தும் உள்ளூர் முதலாளிகள் யார்? அதுவும் அரசியல்வாதிகள் தானே!
இந்த அரசியல்வாதிகள் மட்டும் கொஞ்சமும் நம்ப முடியாத ஓர் உயிரினம்! ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள் தான் அரசியல்வாதிகள்! இவர்களை நம்பி எதனையும் செயல்படுத்த முடியாது!
இது போன்ற விஷயங்களில் நம் விருப்பத்திற்கு ஏற்ப நம்மால் நடந்துகொள்ள முடியாது. இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. வெளிநாடுகளுடனான நட்புறுவு, உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகள் என்று பல பிரச்சனைகள் இருக்கின்றன. உலகங்கிலும் எல்லா நாடுகளும் ஏதோ ஒரு வகையில் பொருளாதார ரீதியில் பின்னிப்பிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றை நாம் தடை செய்தால் அதன் விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டும்.
மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசாங்கம் முடிவு செய்தால் பிரச்சனைகள் ஏற்படும். நான், நீங்கள், நம் மக்கள் அனைவரும் சேர்ந்து எது நல்லது எது கெட்டது என்று ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்!
நீதி, நியாயம் வெற்றி பெற வேண்டும்!
Saturday, 18 November 2023
மூட்டையைக் கட்டு'பா!
MON CHINESE BEEF ROTI RESTAURENT
Friday, 17 November 2023
திறமையா? சிறுமையா?
திறமைக்கு மரியாதையா? அல்லது சிறுமைக்கு மரியாதையா?
இத்தனை ஆண்டுகள் நாம் திரை மறைவில் பேசிக் கொண்டிருந்ததை போட்டு உடைத்திருக்கிறார் மலக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மாணவர் நவீன் முத்துசாமி.
நீங்கள் என்ன தான் சொல்லுங்கள் 'எங்களை - இந்தியர்களை - கல்வித் துறையில் யாரும் ஜெயிக்க முடியாது' என்பது தான் அவரின் செய்தி. நாங்கள் எவ்வளவு தான் கீழ்நிலையில் இருந்தாலும் கல்வி என்று வரும் போது நாங்கள் உயர்ந்து நிற்போம்!
அரசியல்வாதிகள் பேசப்பயப்படுவதை சரியான இடத்தில், கற்றவர் அவையில் பேசியிருப்பது கொடுக்கப்பட்ட செய்தி காதில் உறைக்கும் என நம்பலாம். இது நாள்வரை உறைக்காதது இனிமேலா உறைக்கப் போகிறது? என்கிற கேள்வியும் உண்டு!
கல்விக்காக கோடிக்கணக்கில் நம் நாடு செலவு செய்கிறது. ஆனால் அந்தக் கல்வி தரமான கல்வியா என்பதில் அனைவருக்கும் ஐயம் உண்டு. எல்லாமே ஒரு தரமற்ற கல்வி என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை. இந்தக் கல்வி மூலம் என்ன சாதித்தோம்? அரைகுறை அரசாங்கப் பணியாளர்களைத்தான் உருவாக்கினோம். அரசாங்க அலுவலகங்களுக்குப் போனால் எந்த ஒரு வேலையும் உடனடியாகச் செய்து கொடுக்கும் ஆற்றல் அங்கு இல்லை! அவர்கள் வேலை தான் என்ன என்பதே இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை!
நமது நாட்டு அரசியல்வாதிகளின் தரத்தை என்றாவது யோசித்தோமா? நல்ல அரசியல்வாதிகளை நம்மால் பார்க்க முடிகிறதா? நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் அரசியல்வாதிகள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? இலஞ்சத்தை முன் வைத்துத் தான் அரசியலையே ஆரம்பிக்கிறார்கள்! பேசும்போது கடவுளை முன் வைக்கிறார்கள். செயல்படும்போது இலஞ்சத்தை முன் வைத்து கடவுளை பின் தள்ளிவிடுகிறார்கள்! படிக்காதவன் கூட கடவுளுக்குப் பயப்படுகிறான். அரைகுறை கல்வி கற்றவன் கடவுளையே நடுங்க வைக்கிறான்! அரைகுறை கல்வி ஆபத்தான கல்வி, ஐயமில்லை!
இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதுவும் உயர்கல்வியில் எந்த இனப் பாகுபாடும் கூடாது என்பதும் முக்கியம். ஆனால் என்ன நடக்கிறது? அதைத்தான் நவீன் கூறியிருக்கிறார். மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அது கட்டாயமாக மறுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பாத ஏதோ ஒரு துறை ஒதுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பிய துறை மறுக்கப்படுகிறது.
ஏதோ ஓரிரண்டு ஆண்டுகள் மறுக்கப்படலாம். ஆனால் இங்கு நிலைமை வேறு. காலங்காலமாக மறுக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொர் ஆண்டும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகள் கல்வி அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல். இதனை என்னவென்று சொல்லுவது?
இதைத்தான் நவீன் முத்துசாமி, பட்டமளிப்பு விழாவில் கொஞ்சம் வெடித்திருக்கிறார்! சரியான இடத்தில் சரியாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்! பார்ப்போம்! ஏதாவது நகர்கிறதா என்று!
Thursday, 16 November 2023
அமைதி நிலவ பிரார்த்திப்போம்!
இஸ்ராயேல்- பாளஸ்தீனத்தில் நடைபெற்று வரும் சண்டை இன்னும் ஓய்ந்தாக சொல்ல முடியவில்லை.
சண்டை நிறுத்தம் அவ்வப்போது 'வருகிறது-போகிறது' என்கிற ரீதியில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
சண்டை எங்கோ நடக்கிறது என்றாலும் அந்தப் பாதிப்பு இங்கு, நமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை தான். அதனால் நாடுகளிடையே சண்டை என்று ஏற்படும் போது அது உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மறுப்பதற்கில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் ஏதோ ஓர் அளவில் பின்னிப்பிணைந்து இருக்கின்றன.
ஆனால் இங்கு நாம் பொருளாதார பாதிப்பு மட்டும் பற்றி பேசுவது சரியாகாது. மனித உயிர்களின் பாதிப்பு தான் நம்மை மிகவும் பாதிக்கிறது. அப்பாவி மக்கள மீது குண்டுகளை வெடித்து சாகடிப்பதும் துப்பாக்கிச் சூடு நடத்தி பொது மக்களையும், குழந்தைகளையும், வயதானவர்களையும் கொன்று குவிப்பதும் மிகவும் கொடுரமான செயலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
மிகவும் சக்தி வாயந்த நாடான இஸ்ரேயல் பலவீன நிலையில் உள்ள ஒரு நாட்டை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்று அழித்தது ஒரு வகையில் கோழைத்தனம். சண்டை போட வேண்டுமென்றால் தங்களுக்குச் சமமான எதிரிகளோடு சண்டை போட வேண்டும். ஆனால் இஸ்ரேல் போன்ற கோழை நாடுகள் வலிமையற்ற நாடுகள் மீது தான் போர் தொடுக்கும் என்கிற உண்மை இப்போது தான் தெரிகிறது.
பாலஸ்தீனத்தின் ஒரு தலைமுறை பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது மிகவும் கொடுரமான செயல்.
ஆனால் இந்த முறை நடைபெறும் இந்த சண்டையில் இஸ்ராயேலும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டது. இது நாள் வரை இல்லாத ஒரு பாடம். இஸ்ராயேல் மக்கள் இது நாள்வரை சண்டை போடுபவர்களாக இருந்தார்கள். ஆனால் இந்த முறை அடி வாங்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது! அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆமாம் அவர்களிடையேயும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர். குண்டுகள் அவர்களின் நகரங்களிலும் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. இதற்கு முந்தைய சண்டையில் இதனையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. இப்போது தான் சண்டையின் கொடூரம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.
சண்டை வேண்டாம். சமாதானமே வேண்டும் என்பது தான் நமது நிலை. உட்கார்ந்து பேசுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள். பேசி தீர்க்க முடியாதது ஏதுமில்லை. இரு நாடுகளுக்கான அமைதிக்காகப் பிரார்த்திப்போம்!
Wednesday, 15 November 2023
காசநோய் கட்டுப்பாட்டிலா?
காசநோய் (TB) எத்துணைக் கொடூரமான நோய் என்பது அதனை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
ஒரு காலத்தில் அந்த நோய் 'கட்டுப்பாட்டுக்குள்' என்று சொல்ல முடியாது அது முற்றிலுமாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்ட நோய். அதன் பின் அந்த நோயைப் பற்றியான செய்திகள் ஏதும் இல்லை என்பதே அந்த நோய் இனி இல்லை என்று நாம் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.1990 களில் வங்காளதேசிகளின் படையெடுப்பு நிகழ்ந்தது! அந்த நாட்டில் உள்ள அத்தனை நொயாளிகளும் நாட்டிற்குள் புகுந்தனர். மீண்டும் பல நோய்கள். அதில் காசநோய் தவிர்க்க முடியாதது. அதுவும் உள்ளே புகுந்துவிட்டது! அப்போது பாதிக்கப்பட்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அந்த நண்பன் இப்போதும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான்!
அந்த காலகட்டத்தில் காசநோய்க்கான காரணகர்த்தாவாக சொல்லப்பட்டவர்கள் வங்காளதேசிகள். அவர்களை நாட்டுக்குள்ளே அனுமதித்தவர்கள் அதாவது சரியான மருத்துவ பரிசோதனை இன்றி இங்கு வேலை செய்ய அனுமதி கொடுத்தவர்கள் நமது மலேசிய தூதரகம்!
வங்காளதேசிகள் எப்படி நாட்டை ஆக்கிரமித்தோர்களோ அதே போல அவர்களின் 'இலவச காசநோயும்' நம்முடனே ஒட்டிக்கொண்டது. இப்போது நாம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்!
ஒரு சில இடங்களில் இந்த நோய் பரவலாகிக் கொண்டு வருகிறது என்பது உண்மைதான் என்றாலும் ஆனால் அது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. அமைச்சு அதனைக் கண்காணித்து வருவதாகக் கூறி வருகிறது. அமைச்சிடம் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. அவர்கள் சொல்லுவதை நாம் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் தவறான தகவல்கள் கொடுக்க நியாயமில்லை. அவர்கள் நோக்கமெல்லாம் தேவையில்லாமல் பயப்படாதீர்கள் என்பது மட்டும் தான்.
நம்முடைய கடமையெல்லாம் நோய் வராமல் இருக்க, அதனைத் தடுக்க, என்ன செய்யவேண்டுமென்று அதனைத் தெரிந்து கொண்டு அதன்படி நடப்பது தான் நம்முடைய வேலை. இல்லையா? தேவையற்று பயப்பட வேண்டாம். காசநோய் ஒரு தொற்றுநோய். அது எப்படி வேண்டுமானாலும் பரவலாம். அதனைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனை மட்டும் செய்வோம்.
காசநோய் கட்டுப்பாட்டில் என்கிறது சுகாதார அமைச்சு. நம்புவோம்! நலமாக வாழவோம்!
Tuesday, 14 November 2023
இனிய இந்தோனேசியா!
இந்தோனேசிய மாணவர்கள்
இந்தோனேசியாவைப் பற்றி நம்மிடையே பல்வேறு கருத்துகள் உலவுகின்றன.
ஒரு காலத்தில் அவர்களை நாம் ஏளனமாக பார்த்த நாள்கள் உண்டு. ஒரே காரணம் தான். அந்தக் காலத்திலிருந்து அவர்கள் இங்கு பலவேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது நாம் பார்த்ததெல்லாம் அவர்கள் கட்டுமானத் தொழில்களில் தான் அவர்களைப் பார்க்க முடிந்தது. இங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் அவர்களால் கட்டப்பட்டவைகள் தாம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
இன்றைய நிலையில் அவர்கள் இல்லாத துறையே இல்லை. எல்லாவற்றிலும் அவர்களின் பங்குண்டு.
ஒரு காலத்தில் அவர்கள் நாட்டைக் கொஞ்சம் கீழாகப் பார்க்கும் போக்கு இருந்தது. முன்னேறாத நாடு என்பது தான் நமது பார்வை. ஆனால் இன்று இந்தோனேசியா அன்று நாம் எடைபோட்டது போல இன்று அந்த நாடு இல்லை. அது தான் இப்போதுள்ள வேறுபாடு.
உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு அடுத்த நிலையில் தான் நாம் இருக்கிறோம்! இதில் தாய்லாந்து நாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்! நமது நிலை அந்த இரு நாடுகளைவிட கீழ்நிலை தான்!
இன்று நமது மாணவர்கள் மருத்துவம் படிக்க இந்தோனேசியா போகிறார்கள். இதுவே நமக்கு ஒரு தண்டனையாகத்தான் கருத வேண்டும். ஒரு காலத்தில் நமது மருத்துவமும் அவர்களது மருத்துவமும் சமமான படிப்பாகக் கருத முடிந்ததா? இப்போது பாருங்கள். அனைத்தும் தலை கீழாக மாறிவிட்டது! மருத்துவக் கல்வியில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் தாழ்ந்து நிற்கிறோம்!
நமது நாட்டு கல்வி முறை அவர்களது கல்வி முறையைவிடத் தாழ்ந்து நிற்கிறது! நாம் உயர்வதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இருப்பதே போதும் என்கிற மனநிறைவு நமக்கு ஏற்பட்டுவிட்டது! நமது மாணவர்களால் அதற்கு மேல் படிக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நமது விரிவுரையாளர்கள் அதற்கு மேல் எங்களிடம் சரக்கு இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்! இது போதும் என்கிற மனநிறைவு வந்துவிட்டதால் வெளிநாடு போய் படிக்க வேண்டும் என்றால் போய்ப் படியுங்கள் என்று அரசாங்கமே கூறுகிறது.
ஆக மலேசியர்கள் நல்ல கல்வி வேண்டுமென்றால் வெளிநாடு போங்கள் என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பாட்டுவிட்டதாகத்தான் கருதுகிறேன். அதற்கு எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு மருத்துவக் கல்வியைப் பற்றி கூறியிருக்கிறேன். நான் கல்வியாளன் அல்ல. மேலோட்டமாக ஒரு பார்வை. அவ்வளவு தான்.
கல்வி மட்டும் அல்ல வேறு துறைகளிலும் நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். ஏதாவது மாற்றங்கள் வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Monday, 13 November 2023
ஞாபகம் வருதே!
ஓரு பழைய ஞாபகம். நான் வேலை செய்கின்ற காலத்தில் "ரமேஷ் சந்தர்" என்கிற பெயர் மிகவும் பரிச்சயம்.
நான் தோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த போது புள்ளியல் துறையிலிருந்து தொடர்ச்சியாக மாதம் மாதம் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும். ஒன்று நாங்கம் அனுப்ப வேண்டி வரும். அல்லது அங்கிருந்து ஏதாவது வரும். ஆக, ஏதாவது தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்.
அப்போதெல்லாம் அதன் தலைவராக இருந்தவர் ரமேஷ் சந்தர். வருகின்ற அனைத்து அறிக்கைகளிலும் அவருடைய கையெழுத்து போடப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும் போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும். நம் ஆள் பெரிய பதவியில் இருக்கிறாரே என்னும் பெருமை இருக்கும். அவர் ஓர் வட இந்தியராக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. எப்படியோ சக இந்தியர். பெருமை தான்!
இன்னொருவரும் உண்டு. அவருடைய பெயரை ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. வருமான வரித்துறையில் முதன்மைப் பதவியில் இருந்தவர்.அவர் தமிழராகத்தான் இருக்க வேண்டும்.
இருவருமே பெருமைக்குரியவர்கள். தகுதியின் அடிப்படையில் இருந்தவர்கள். அவர்களுக்குப் பின்னர் யாரும் அப்படியொரு பதவிக்கு வந்ததாகத் தெரியவில்லை.
நினைத்துப் பார்க்கிறேன்! அவ்வளவு தான்!
Sunday, 12 November 2023
கணினி அன்பளிப்பு!
சமீபகாலமாக மித்ரா அமைப்பு தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்கொடையாக மடிக்கணினிகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.
சுமார் 6,000 கணினிகள், 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களில் அனைத்தும் கொடுத்து முடிக்கப்படும் என்று மித்ரா நம்புகிறது. நல்ல முயற்சி. பாராட்டுகிறோம்.
வழங்கப்படும் கணினிகள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை. என்று கூறப்படுகிறது. (refurbished) ஆக அது புதிதல்ல. அதனால் ஒன்றும் பாதகமில்லை. மேம்படுத்தப்பட்ட கணினிகள் கூட நீண்ட நாள்கள் உழைக்கவே செய்யும். ஏதோ ஒன்றிண்டு பழுது அடையலாம். ஆனால் அதனைச் சரிசெய்து கொடுப்பது கணினி நிறுவனத்தின் பொறுப்பு. பழுதுபார்ப்பதில் சிக்கல் இருந்தால் அதனை விற்காமல் இருப்பதே நல்லது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி அமைச்சு இலவச கணினிகளைப் பள்ளிகளுக்குக் கொடுத்தது. அதன் பின்னர் அந்தக் கணினிகள் என்ன ஆயின என்றே புரியவில்லை! அரசாங்கம் கொடுத்த அந்த மடிக்கணினிகள் சும்மா கண்துடைப்பு வேலை. எதனையும் பயன்படுத்த முடியாத நிலை. பழுது பார்ப்பதற்கு அனைத்தும் கணினி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்தன! இது முற்றிலும் ஏமாற்று வேலை.
மித்ராவிக்கு இது போன்று கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக இதனை நினைவுறுத்துகிறேன். நண்பர் ஒருவர் டிக்டாக்கில் ஒரு புகாரைக் கொண்டு வந்துவிட்டார். இது வேலை செய்யவில்லை அது வேலை செய்யவில்லை என்று கணினி பாகங்களை எடுத்துக்காட்டி புகார் கூறிக் கொண்டிருந்தார். இன்னும் சிலர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பேசாமல் கணினி நிறுவனங்களைத் தேடி ஓடுவார்கள்!
எது எப்படியிருந்தாலும் கணினி நிறுவனம் தான் அதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். ஆனால் மித்ரா தான் அதற்கான ஏச்சு பேசுசுக்களை வாங்க வேண்டும். அதோடு டத்தோ ரமணன் அவர்களின் புகழை வானளாவ கொண்டு செல்ல ஒரு சிலர் தயாராக இருக்கிறார்கள்!
ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும். தவறு நடந்தால் அதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். சப்பைக்கட்டு வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையைப் பெரிதாக்கத் தான் முயற்சி செய்வார்கள். கொடையாகக் கொடுக்கும் போது குற்றமற்றதாக இருக்க வேண்டும். புரிந்தால் சரி!
Saturday, 11 November 2023
ஓர் ஆண்டு நிறைவு விழா!
Friday, 10 November 2023
பிரதமர் தவிர்க்கிறாரா?
பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியர்களைப் புறக்கணிக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் மேல் சமீபகாலமாக சாட்டப்படுகின்றது.
அவர் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் சில நிகழ்வுகளை நம் முன் வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் 'ஆமாம்! அது உண்மை தான்!' என்று ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது என்பதும் சந்தேகமில்லை!
தமிழர்களின் மாபெரும் விழாவாம் தைப்பூசத் திருவிழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒன்று. அடுத்து தீபாவளி கொண்டாட்டத்தில் அவர் பங்குப் பெறவில்லை என்பது மற்றொன்று.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது அவரின் உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் ஐ.ஜே.என். இருதய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். பொய் சொல்ல ஒரு நியாயமுமில்லை!
தீபாவளி கொண்டாட்டத்தின் போதும் அதே குற்றச்சாட்டு. அவர் கலந்து கொள்ளவில்லை. இன்று பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல்லாயிரகணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சாப்பிட உணவு இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, உறங்க இடமில்லை, சிகிச்சை பெற மருத்துவமனை இல்லலை - அனைத்தையும் இழந்துவிட்டு நிராயுதபாணியாக நிற்கின்றனர் பாலஸ்தீன மக்கள். இன்னும் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன இஸ்ராயேல் படைகள்.
இந்த நிலையில் எந்த ஒரு மனிதரும் சாதாரண சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது. சாதாரண மனிதர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடு இல்லை. ஆனால் கொஞ்சம் அழுத்தம், பற்று, பாசம் உள்ளவர்களுக்கு இதனைப் பெரும் கொடுமையாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
பிரதமர் கலந்து கொள்ளாததை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனைப் பெரிதுபடுத்தி, என்னமோ உலகமே அழிந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை எழுப்ப வேண்டாம்.
நமது எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். 'கலந்து கொண்டால் நல்லது கலந்து கொள்ளாவிட்டால் அதைவிட நல்லது' அவ்வளவு தான். எது நடந்தாலும் அது நன்மைக்குத்தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
பிரதமர் இந்தியர்களைப் புறக்கணிக்கிறாரா? ஒரே வழி நீங்களும் அவரைப் புறக்கணியுங்கள்!
Thursday, 9 November 2023
பயணங்கள் பணிவாக இருக்கட்டும்!
பெருநாள்களில் பயணங்கள் 'கொஞ்சம் அப்படி இப்படி' இருக்கத்தான் செய்யும் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு உங்கள் விருப்பத்தை நெடுஞ்சாலை காட்டாதீர்கள். நேரம் ஒரே மதிரியாக இருப்பதில்லை. கரணம் தப்பினால் மரணம் ஆவ்வளவு தான்!
பெரும்பாலோர் வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறோம். பல மாதங்களாக பார்க்க முடியாத, சந்திக்க முடியாத உறவுகளைச் சந்திக்கப் போகிறோம். மனதிலே மகிழ்ச்சி. உள்ளத்திலே உவகை. சொந்த ஊருக்குப் போவதிலே யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லை?
அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்பது தான் நமக்கும் ஆசை. தேவை இல்லாமல் கார்களைக் கன்னா பின்னா என்று ஓட்டுவது வேண்டாத வேலை. அதுவும் இளைஞர்கள், புதிதாக உரிமம் எடுத்த இளைஞர்கள் முடிந்த மட்டும், தங்களது திறனைக் காட்ட இந்த நேரத்தைப் பயன்படுத்தப் பார்ப்பார்கள்! இதைத்தான் வேண்டாத வேலை என்கிறோம். கூட்ட நெரிசலில் உங்களக்குக் கட்டுப்பாடுகள் தேவை.
ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் எத்தனை எத்தனை விபத்துகள். எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள். கணவர்களை இழந்தோர், மனைவியரை இழந்தோர் - கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுமை காக்கலாம். ஆனால் முடிவதில்லை.
நெடுஞ்சாலைகள் மட்டும் அல்ல எந்த சாலைகளாக இருந்தாலும் வாகனங்களைப் பயன்படுத்தம் போது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள். குடிக்க வேண்டாம் என்று சொன்னால் கஞ்சா அடிப்பதும் சேர்த்துத்தான். கஞ்சா சாப்பிடுவதும் இன்று சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது!
விபத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இந்தியர் சம்பந்தப்பட்ட விபத்து என்றால் அது குடிகார விபத்து! மலாய்க்காரர் சம்பந்தப்பட்ட விபத்து என்றால் அது கஞ்சா விபத்து! சீனர்கள் என்றால் இரண்டுமே! இப்படித்தான் இந்த விபத்துகளை நாம் புரிந்து கொள்ளுகிறோம்!
அதனால் தான் நாம் சொல்லுகிறோம். குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள். அது பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தும். சாலை என்பது குடிப்பவர்களுக்கானது அல்ல. குடித்துவிட்டால் பேசாமல் போய் ஓய்வு எடுங்கள். சாலை உங்களுக்கானது அல்ல!
சாலைகளைப் பயன்படுத்துகிறீர்கள். பொறுமையோடு, பொறுப்போடு சாலைகளை பயன்படுத்துங்கள். உங்கள் உயிர் மீது உங்களுக்கு அக்கறை இல்லையென்றால் தது உங்கள் பிரச்சனை. ஆனால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள் என்பது தான் நமது செய்தி.
Wednesday, 8 November 2023
குடியற்ற தீபாவளி!
தீபாவளி இன்னும் சில நாள்களில் வரும். வருடத்திற்கு ஒரு முறை தான் தீபாவளி. அதனால்.........,?
அதனால் என்ன? தீபாவளி நம் கையில். அது நமது கட்டுப்பாட்டில். ஆனால் நடப்பது என்ன? மது அருந்திவிட்டால் நடப்பது என்னவென்று தெரியவில்லை! யார் கைகளுக்கோ போய்விடுகிறது!
இன்னும் சிலர் தீபாவளி வரை காத்திருப்பதில்லை. அதற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் முன்னமையே திட்டம் தீட்டிவிட்டனர். என்னவென்று? இந்த ஆண்டு தீபாவளியை சிறையில் தான் கொண்டாட வேண்டுமென்று திட்டம் தீட்டிவிட்டனர். அவர்களோடு அது முடியப்போவதில்லை. குடும்பமும் சேர்ந்து சிறையில் கொண்டாடுவது தான் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்குச் செய்யும் பிறவிக்கடன்!
நண்பர்களே! தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. பெருநாட்கள் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. குழந்தைகளுக்கு இன்னும் அதிகம் குதுகூலத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் நமக்குப் பெருநாட்கள் தேவை. ஆண்டுக்கொருமுறை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். யாரும் நம்மைத் தடுக்குப் போவதில்லை.
ஒன்றே ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை பெருநாட்கள் மது இல்லா பெருநாட்களாக அமையட்டும். அதை முற்றிலுமாகத் தவிர்க்க முயலுங்கள். பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து குடிக்கின்ற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். சிறியவர்கள் முன் பெரியவர்கள் குடிப்பதை நிறுத்தப்பழக வேண்டும். சிறியவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பெரியவர்கள் வற்புறுத்துவதை வெறுக்க வேண்டும். அது என்ன பழக்கம்? காட்டுமிராண்டிகளிடையே கூட இப்படி ஒரு பழக்கம் இருக்க நியாயமில்லை. நம்மைவிட வயது குறைந்தவர்களைக் குடிக்க வற்புறுத்துவது மிக மட்டமான பழக்கம் என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.
நமக்குத் தீபாவளி வேண்டும். ஏன்? எல்லாப் பெருநாட்களும் வேண்டும். ஆனால் அவைகள் மது இல்லாத பெருநாள்களாக இருக்க வேண்டும். அதுவே நமது சிறப்பான தீபாவளியாக அமையும்.
Tuesday, 7 November 2023
உரு மாற்றம்!
இந்திய சமூக உருமாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் மித்ரா அப்போது அதன் முக்கிய கொள்கையாக இந்தியர்களில் சிறு வியாபாரிகளை அதிகம் ஊக்குவிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
ஆனால் இப்போது, தலைவர் டத்தோ ரமணன் காலத்தில், அதன் நோக்கம் உருமாறி கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கல்விக்கு நாம் எதிரியல்ல. கல்வியை வைத்துத்தான் நமது சமுகங்களில் ஒன்று, பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. அதனால் கல்வி என்றென்றும் நமக்கு மூன்னுரிமையில் தான் இருக்கும். அதனை பின்னுக்குத் தள்ளிவிட முடியாது.
ஒன்று செய்யலாம். கல்வி சம்பந்தமான அனைத்துப் பொறுப்புகளையும் மித்ராவே எடுத்துக் கொள்ளட்டும். முற்றிலுமாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். கல்வி என்று வரும் போது அதனை மித்ராவே கையாளட்டும். இன்று அரசாங்கக் கல்லூரிகளில் புறக்கணிக்கப்படும் நமது இந்திய மாணவர்களைத் தனியார் கல்லூரிகளில் பயில மித்ரா உதவட்டும். அதன் வழி பல மாணவர்கள் பயன் அடைவர். பணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளினால் பலர் மேற்கல்வியைத் தவிர்க்கின்றனர். மித்ரா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான இன்றைய ஒதுக்கீடு போதாது என்பது நிச்சயம். தேவைக்கேற்ப இன்னும் அதிகரிக்க வேண்டிய சூழல் உண்டு.
மித்ராவின் தலைவர் ஏன் உரு மாற்றுகிறார் என்பது நமக்குப் புரிகிறது. பெரிய வணிகர்களுக்கு உதவுவது எளிது. பெரிய நிறுவனம். பெரிய பணம். பிரச்சனை முடிந்தது. ஆனால் சிறு வணிகர்கள். சிறிய தொகை. பிரச்சனைகளோ பெரிது! என்ன செய்வது? இது தான் சிறு வணிகர்களின் இன்றைய நிலை. எல்லாரும் ஆயிரம், இரண்டாயிரம் வெள்ளிகளுக்குத் தான் ஆளாய் பறக்கிறார்கள்! உதவ ஆளில்லை. மித்ராவும் ஒதுங்குகிறது!
இந்த நிலையில் மித்ரா அவர்களுக்கு ஒரு சிறு தொகையாவது ஒதுக்க வேண்டும். இன்றை நிலையில் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறு தொழில்கள் செய்ய மித்ரா அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். சிறு தொழில் செய்ய முன் வருபவர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்கள் சிறு தொழில்களில் அதிகம் அக்கறை காட்டுபவர்களாக இருக்கிறார்கள். உதவுவது மித்ராவின் கடமை. வேறு அமைப்புகள் இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் "மித்ரா" என்று தான் அபயக்குரல் எழுப்புவார்கள்.
தெக்கூன் போன்ற அமைப்புகள் இன ரீதியில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அப்படி இல்லைதான். ஆனால் சாதாரண நிலையில் உள்ளவர்கள் அவர்களோடு ஒத்துப்போக முடியாது என்பது தான் உண்மை. அதனால் மீண்டும் மித்ரா தான் ஞாபகத்திற்கு வரும்!
இப்படி உரு மாற்றம் செய்தால் மக்கள் என்ன செய்வது?
Monday, 6 November 2023
இதனை எதிர்பார்க்கவில்லை!
இப்படி ஒரு தீர்ப்பை நாம் எதிர்பார்க்கவில்லை.
ஓர் இளம் அரசியல் தலைவர். நல்ல சிந்தனையாளர். நல்ல இளைஞர். மலேசியர்களின் வருங்காலம் என்று பாராட்டப்பட்டவர். அத்தனையும் புஸ்வாணமாகி விட்டதே என்று நினைக்கும் போது 'யாரைத்தான் நம்புவதோ' என்பது உண்மையில் நமக்குப் புரியவில்லை!
ஆமாம்! மூடா கட்சியின் தலைவர் சைய்ட் சாடிக்கைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம். மிகக் கடுமையான தண்டனை என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. அப்படி என்னதான் தண்டனை? ஒரு கோடி வெள்ளி அபராதம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, இரண்டு பிரம்படிகள்.
இரண்டு பிரம்படிகள் என்னும் போது அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தண்டனை உண்டு என்பதை முதன் முதலாகக் கேள்விப்படுகிறோம்! நாம் என்னவோ கொலைகாரன், கொள்ளைக்காரர்களுக்குத்தான் இந்தத் தண்டனை என்று நினைத்தோம். ஒரு கோடி வெள்ளி அபராதம் என்றால் - கொள்ளை தான் காரணமாக இருக்கலாம்.
நமக்கு உள்ள வருத்தமெல்லாம் இந்த இளம் வயதில் இவருக்கு இப்படி ஒரு தண்டனையா என்பது தான். நல்ல எதிர்காலம் உள்ள தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாம் ஒரு நொடியில் சுக்கு நூறாகிவிட்டதைக் காணும் போது 'சே! என்னடா அரசியல்! இப்படியெல்லாம் இளைஞர்களைச் சீரழிக்கிறதே' என்று தான் எண்ணத் தோன்றுகிறது!
ஓர் இளைஞனின் அரசியல் ஆரம்பமே இப்படியா இருக்க வேண்டும்? அம்னோ அரசியல்வாதிகள் என்றால் நமக்குத் தெரியும். ஏன்? ம.இ.கா. வுக்கும் நிறைய பங்குண்டு. அவர்கள் அரசியலில் நல்ல் பக்குவம் பெற்றவர்கள். அதனால் பலவற்றிலிருந்து அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் சயது சாடிக் இன்னும் அரசியல் பக்குவம் பெறாதவர், எப்படியோ சரியாக மாட்டிக் கொண்டார்!
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது தான் நியதி. சிறியவர் பெரியவர் என்கிற பாகுபாடு இல்லை. அதுவும் ஊழல் செய்வது தெய்வக் குற்றம். மனிதகுலத்திற்கே எதிரி. மன்னிக்கப்பட முடியாதவர்கள். கூடாதவர்கள்.
எப்படியோ சயது சாடிக் மேல்முறையீடு செய்வார். அதன் பின்னர் தான் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதுவரை அவர் நிரபராதி தான்!
Sunday, 5 November 2023
இது என்ன கூத்து?
Saturday, 4 November 2023
புரளி பண்ணாதீர்!
Friday, 3 November 2023
நாம் ஒற்றுமையானவர்கள் தான்!
நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று யார் சொல்லுகிறார்? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். யாரோ ஒரு சிலர் நாம் ஒற்றுமையாய் இருக்கக் கூடாது என்பதிலே ரொம்பவும் அக்கறை காட்டுகின்றனர் என்பது தான் உண்மை. இந்த சமூகம் எல்லாகாலங்களிலும் ஒற்றுமையாய்த் தான் இருந்து வருகிறது என்பதிலே ஐயமில்லை!
Thursday, 2 November 2023
ஸாகிர் நாயக் அவதூறு வழக்கு!
பேராசிரியர் டாக்டர் இராமசாமி- ஸாகிர் நாயக் அவதூறு வழக்கில் என்ன நடந்தது என்பதை இப்போது பெரும்பாலோர் அறிந்திருக்கின்றனர்.
பேராசிரியர், ஸாகிர் நாயக்கிற்கு , பதினைந்து இலட்சம் ரிங்கிட் இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸாகிர் நாயக் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அளவுக்கு இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தினரை இழித்தும் பழித்தும் பேசியவர் என்பதை நாம் அறிவோம். அதிகமாக இந்துக்களையும், இந்தியர்களையும் கேவலமாகப் பேசியவர். அவரும் ஓர் இந்தியர் அதுவும் வட இந்தியர் என்பதையும் மறக்க வேண்டாம்.
அதற்காகவே அவருக்கு எதிராகப் பேசிய பேராசிரியர் மீது ஸாகிர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் எதிரோலி தான் இந்த இழப்பீடு.
இப்போது இந்த இழப்பீடான 15 இலட்சத்தை ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை.
எது எப்படியோ அவர் மீது ஒரு சிலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது அர்சியல் ரீதியாகவும் இருக்கலாம். காரணம் நமக்குப் புரியும். அன்றும் சரி இன்றும் சரி இந்தியர்களுக்காக யாரும் வாய் திறக்காத ஒரு காலகட்டத்தில் அவர் இந்தியர்களுக்காகப் பேசினார். இந்து மதத்தினரூக்காகப் பேசினார். இப்பவும் பேசியும் எழுதியும் வருகின்றார்.
அந்த வழக்கிற்காக பொது மக்களிடமிருந்து நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை மலேசியர் தமிழர் உதவும் குரல் தொடங்கியிருக்கிறது. இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேல் நிதி திரட்டியும் இருக்கிறது. இன்னும் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.
பேராசிரியர் இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் குரலாக ஒலித்தவர். எனக்காகவா? உனக்காகவா? என்கிற கேள்விகள் வேண்டாம். தனிப்பட்ட முறையில் எனக்காக ஒன்றுமில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் நம் அனைவருக்குமாகவும் அவர் பேசினார். நம் வருங்கால தலைமுறைகளுக்காக அவர் பேசினார்.
ஒன்றை சாவசகமாக மறந்துவிட வேண்டாம். அன்று ஸாகிருக்கு எதிராக பேராசிரியர் குரல் எழுப்பவில்லை என்றால் இன்றும் ஸாகிர் தனது வீரதிரச் செயல்களைக் காட்டிக் கொண்டிருப்பார்! அவர் வாயை அடைத்தவர் பேராசிரியர் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் தான் இன்று மௌனியாக இருக்கின்றார்!
நம் ஒற்றுமையை நாம் காட்ட வேண்டும். அப்படிக் காட்டுவதன் மூலம் தான் இது போன்ற ஈனச்செயல்கள் மேலும் நடக்காமல் இருக்கும்.
உங்களுடைய நன்கொடைகளை மேலே குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி வையுங்கள்.
நல்லதே நடக்கும்!
Wednesday, 1 November 2023
தீபாவளி சிக்கனம்!
வருடத்திற்கு ஒரு முறை வருவது தீபாவளி. எம்மாம் பெரிய விஷேசம். அதனை எப்படி சிக்கனமாகக் கொண்டாடுவது? இதெல்லாம் நடக்கிற காரியமா? அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பெருநாளை, வருஷத்திற்கு ஒரு முறை வரும் பெருநாளை ஆடிப்பாடி அகமகிழ்வது தானே முறை! அதனால் கூடி மகிழ்வோம்! கொண்டாடுவோம்! குதுகளிப்போம்!