சமீபகாலமாக மித்ரா அமைப்பு தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்கொடையாக மடிக்கணினிகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.
சுமார் 6,000 கணினிகள், 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களில் அனைத்தும் கொடுத்து முடிக்கப்படும் என்று மித்ரா நம்புகிறது. நல்ல முயற்சி. பாராட்டுகிறோம்.
வழங்கப்படும் கணினிகள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை. என்று கூறப்படுகிறது. (refurbished) ஆக அது புதிதல்ல. அதனால் ஒன்றும் பாதகமில்லை. மேம்படுத்தப்பட்ட கணினிகள் கூட நீண்ட நாள்கள் உழைக்கவே செய்யும். ஏதோ ஒன்றிண்டு பழுது அடையலாம். ஆனால் அதனைச் சரிசெய்து கொடுப்பது கணினி நிறுவனத்தின் பொறுப்பு. பழுதுபார்ப்பதில் சிக்கல் இருந்தால் அதனை விற்காமல் இருப்பதே நல்லது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி அமைச்சு இலவச கணினிகளைப் பள்ளிகளுக்குக் கொடுத்தது. அதன் பின்னர் அந்தக் கணினிகள் என்ன ஆயின என்றே புரியவில்லை! அரசாங்கம் கொடுத்த அந்த மடிக்கணினிகள் சும்மா கண்துடைப்பு வேலை. எதனையும் பயன்படுத்த முடியாத நிலை. பழுது பார்ப்பதற்கு அனைத்தும் கணினி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்தன! இது முற்றிலும் ஏமாற்று வேலை.
மித்ராவிக்கு இது போன்று கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக இதனை நினைவுறுத்துகிறேன். நண்பர் ஒருவர் டிக்டாக்கில் ஒரு புகாரைக் கொண்டு வந்துவிட்டார். இது வேலை செய்யவில்லை அது வேலை செய்யவில்லை என்று கணினி பாகங்களை எடுத்துக்காட்டி புகார் கூறிக் கொண்டிருந்தார். இன்னும் சிலர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பேசாமல் கணினி நிறுவனங்களைத் தேடி ஓடுவார்கள்!
எது எப்படியிருந்தாலும் கணினி நிறுவனம் தான் அதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். ஆனால் மித்ரா தான் அதற்கான ஏச்சு பேசுசுக்களை வாங்க வேண்டும். அதோடு டத்தோ ரமணன் அவர்களின் புகழை வானளாவ கொண்டு செல்ல ஒரு சிலர் தயாராக இருக்கிறார்கள்!
ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும். தவறு நடந்தால் அதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். சப்பைக்கட்டு வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையைப் பெரிதாக்கத் தான் முயற்சி செய்வார்கள். கொடையாகக் கொடுக்கும் போது குற்றமற்றதாக இருக்க வேண்டும். புரிந்தால் சரி!
No comments:
Post a Comment