நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று யார் சொல்லுகிறார்? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். யாரோ ஒரு சிலர் நாம் ஒற்றுமையாய் இருக்கக் கூடாது என்பதிலே ரொம்பவும் அக்கறை காட்டுகின்றனர் என்பது தான் உண்மை. இந்த சமூகம் எல்லாகாலங்களிலும் ஒற்றுமையாய்த் தான் இருந்து வருகிறது என்பதிலே ஐயமில்லை!
பேராசிரியர் ராமசாமி அவர்களின் வழக்குக்காக நிதி திரட்டப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நம் மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதற்கு மேல் ஏன்? எதற்காக? என்பதையும் நம் மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வழக்கம் போல் ஒருசிலர் அதனைக் கேலி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் அவர்கள் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் அறிவாளிகள் என்று நாம் நினைப்போமாம்! இந்தக் கதையெல்லாம் நமக்குத் தெரியும்.
ஒன்று மட்டும் நிச்சயம். ஜ.செ.க. வில் உள்ள இந்தியத் தலைவர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. பரவாயில்லை. பேசாமல் இருந்தாலே அவர்களுக்கு நல்லது. சீன முதலாளிகளை மீறி அவர்களால் செயல்பட முடியாது. அது மட்டும் அல்ல. அந்தக் கட்சி இந்தியர்களை ஒதுக்கி வைத்துவிட்டது என்பது வெளிச்சத்திற்கும் வந்துவிட்டது.
பி.கே.ஆர். நிலைமை என்ன? இந்தக் கட்சியில் உள்ள இந்தியத் தலைவர்கள் எந்தப் பிரச்சனையிலும் பட்டும் படாமலும் இருப்பவர்கள். பேசவே மாட்டார்கள். இவர்கள் மலாய் முதலாளிகளுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள். வம்பு வேண்டாம் என்று காலத்தைக்கடத்திக் கொண்டிருப்பவர்கள்!
ஆக, ஒன்று மட்டும் தெளிவு. நாம் யாரையும் நம்ப வேண்டாம். இந்தச் சமுதாயமே 'மாபெரும் தலைவன்' என்று யார் யாரையோ நம்பி கடைசியில் அவர்களால் கைவிடப்பட்ட சமுதாயம். இனி யாரையும் நம்ப வேண்டாம்.
நமது பிரச்சனைகளுக்கு நாம் தான் தீர்வு காண வேண்டும். அதைத்தான் இந்தப் பிரச்சனையில் நாம் பார்க்கிறோம். நம்மால் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். நம்மால் முடியும். இதுவும் முடியும் இன்னமும் முடியும். நமக்காகக் குரல் கொடுத்த ஒருவருக்கு நியாயமற்ற தண்டனை தான். ஆனால் நம்மால் இது மட்டும் அல்ல எதுவாக இருந்தாலும் எதிர்நோக்க முடியும்.
நாம் ஒற்றுமையானவர்கள். ஒற்றுமை நமது பலம்!
No comments:
Post a Comment