பினாங்கு மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம்மை இன்னும் கொதி நிலையிலேயே வைத்திருக்கிறது.
கல்வி அமைச்சர் தனது மன்னிப்பை வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஏன்? நாடாளுமனறத்திலும் கூறிவிட்டார் ஆனாலும் என்னவோ அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நம்முடைய கேள்வி எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தான். கல்வி அமைச்சை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். அப்புறம் கல்வி அமைச்சர் அதற்காக மன்னிப்புக் கேட்பார். சொல்லி வைத்து இப்படி செய்கிறார்கள் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். மன்னிப்பு என்பதெல்லாம் இப்போது மிகச் சாதாரணமாகி விட்டது. அது ஒன்றும் பிரச்சனையாக இல்லை.
மன்னிப்பு என்பது ஆரம்பகாலத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. மன்னிப்பு என்றால் மன்னிப்புக் கேட்டுவிட்டு அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகிவிடுவார். இப்போது அந்த நிலை இல்லை. அதனால் மன்னிப்புக்கு எந்த மரியாதையும் இல்லை. அதனால் மன்னிப்பு சாதாரண விஷயமாகி விட்டது. அமைச்சரும் பலமுறை, வேறு பிரச்சனைகளுக்காக, மன்னிப்புக் கேட்டிருக்கிறார்! மன்னிப்பு என்பதெல்லாம் சும்மா துடைத்து வீசிவிட்டு போகிற விஷயமாக ஆகிவிட்டத
நம்முடைய பயம் எல்லாம் நமக்குச் சாமி கும்பிடுவதிலும் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வருமோ என்பது தான். கல்வி அமைச்சிலும் நாத்திகர்கள் இருக்கலாம். நமக்குத் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. பலருடைய உண்மை முகம் நமக்குத் தெரிய நியாயமில்லை. எந்தப் புற்றில் எந்த பாம்போ? அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் எல்லாம் ஆத்திகர்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
நமது கலாச்சாரமோ வேறு. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற பழமொழியெல்லாம் நமக்கு ஊறிப்போன ஒன்று. அதனால் நாம் எதனைச் செய்தாலும் கடவுள் வாழ்த்து என்பது நமது பாரம்பரியம். அதனை நம்மால் விடவும் முடியாது.
எப்படிப் பார்த்தாலும் இந்தச் செயலை அப்படி எல்லாம் அலட்சியமாக விட்டுவிட முடியாது. நம்மைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது தான் முக்கியம். அமைச்சர் மன்னிப்புக் கேட்பதால் செய்தவனுக்குச் செப்புக்காசு கூட செலவில்லை! ஆமாம் அவனுக்கு அதனால் என்ன நட்டம்?
எதிலெதிலோ கை வைத்தாகி விட்டது. இப்போது கடவுளும் பிரச்சனையாகி விட்டார். பார்ப்போம். பினாங்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று!
No comments:
Post a Comment