நமது சமூகத்தை எப்போதும் பிரித்து வைத்துப் பார்க்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
நாம் எதைச் செய்தாலும் அதனைக் குறை சொல்லும் போக்கு ஒரு சாராரிடையே இருப்பதை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை.
பேராசிரியருக்கு நிதி திரட்டுவதை ஒரு சிலர் விரும்பவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கும் சேர்த்துத் தான் அவர் பேசினார். அது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் வழக்கம் போல் அவர்கள் தமிழர்களைப் பிரித்து வைக்கும் போக்கிலேயே செயல்படுகின்றனர்.
இன்னும் பேராசிரியரைத் தவறான கண்ணோட்டத்துடனேயே அவர்கள் பார்க்கின்றனர். இந்தத் தமிழர் சமூகம் அவரை ஒதுக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்.
இந்த நிதி திரட்டுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது நமக்கு விளங்குகிறது. பின்னர் யார் அந்தப் பணத்தைக் கட்டுவது? நீங்களும் பேச மாட்டீர்கள். யார் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன, நாம் நல்லா இருந்தா அது போதும் என்பது உங்களது நிலைப்பாடு. அந்த சுயநலத்தை நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் நாங்கள் பொதுநலத்தை நினைப்பவர்கள். அதனால் தான் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் குரல் கொடுக்கிறோம்.
அதனைத்தான் பேராசிரியர் இராமசாமியும் செய்தார். அப்போது அது உங்களுக்கும் பயனளித்தது. ஆனால் இப்போது? அவருக்குக் கிடைத்த தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எல்லா இந்தியர்களுமே நினைக்கின்றனர் நீங்கள் உள்பட. ஆனால் பணம் என்று வரும் போது நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறீர்கள். அதனால் என்ன? நீங்கள் சும்மா இருக்கலாமே? ஏன் மற்றவர்களைத் தூண்டி விடுகிறீர்கள்? ஏன் அவருக்கு எதிராகத் தமிழர்களைத் தூண்டிவிடுகிறீர்கள்?
மக்களுக்காக அவர் பேசினார். மக்கள் தான் அந்தப் பணத்திற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுவாக அனைத்து இந்தியர்களும் அவரை ஆதரிக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில பொறுப்பற்ற மனிதர்கள் நமக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
நான் இந்த தமிழ்ச்சமூகத்திற்குச் சொல்லுவதெல்லாம் நாம் அனைவரும் சேர்ந்து பேராசிரியருக்கு நமது ஆதரவைத் தரவேண்டும். அத்தோடு நிதியையும் தாராளமாக வழங்க வேண்டும். ஒருவன் எதிர்க்கின்றான் என்றால் அவன் தமிழன் இல்லை என்று புரிந்து கொண்டால் சரி.
பேராசிரியர் அவர்களுக்கு எதிராகப் புரளிகளைக் கிளப்பும் யாரையும் நம்பாதீர்கள்.
No comments:
Post a Comment