Thursday 23 November 2023

பாலஸ்தீன மாணவர்கள்!

 

பாலஸ்தீன மாணவர்கள் சுமார் 600  பேர் அரசாங்க கல்லூரிகளில் பயிலும்  நிலையில்  200 பேர்  தனியார் கல்லூரிகளில் பயில்கின்றனர் - அவர்கள் அனைவருக்கும்  கட்டணமின்றி பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்தில்  என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். மக்கள் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர். எந்தவொரு சுதந்தரமுமில்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்  தான் அங்குள்ள மாணவர்களுக்காவது கொஞ்சம் நல்லது செய்வோமே என்கிற அக்கறையில்  அங்குள்ள மாணவர்களுக்கு  நமது  கல்லூரிகளில் இடம் கொடுத்து அந்த மாணவர்களுக்கு உதவி செய்கிறது அரசாங்கம்.

இந்த உதவி என்பது முற்றிலுமாக மனிதாபிமானம் கொண்ட உதவி என்று தான் சொல்ல வேண்டும். இந்த உதவி மட்டும் தான்  இந்த நாடு செய்கின்ற  - அந்த மக்களுக்குச் செய்கின்ற -  முழு உதவி.  இது மட்டும் தான் அவர்களுக்கு முழுமையாக போய்ச் சேருகிறது என்பதை நம்பலாம்.  பொருளாதார உதவி,  பண உதவி என்பதெல்லாம் இங்குள்ள  அரசியல் முதலைகள், திருடர்கள் - இவர்கள் தின்னது போக மீந்தவை தான் அங்குப் போய்ச் சேரும்.  அதனைத்தான் சமீபகாலமாக  கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஒருவனுக்கும் கை சுத்தமில்லை என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன!

இப்போது அதிகமான மலேசிய இந்தியர்கள்  இந்த உதவியை ஓரளவு எதிர்க்கின்றனர்.  "இடமில்லை என்பதால் தானே இந்திய மாணவர்கள் கல்லூரிகளில் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்படுகின்றனர். அப்படியிருக இப்போது எப்படி 800 இடங்கள் அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன?" என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள். 

ஆனால் கல்வி அமைச்சு இதுவரை "அது மலாய் மாணவர்களுக்கான  இடங்கள். அந்த இடங்களைத்தான் இப்போது பாலஸ்தீன மாணவர்களுக்காக  ஒதுக்கியிருக்கிறோம்" என்று எந்த அறிக்கை மூலமூம் சொல்லவில்லை.  சொல்லவில்லை என்றால் அது இந்திய மாணவர்களுக்கான  இடங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டன என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.  அப்படித்தான் நாமும் நினைக்கிறோம்.

எப்படியோ நமது இடங்கள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம்  ஆனால் பாலஸ்தீன மாணவர்கள்  பயன் அடைகிறார்களே  என்று நினைக்கும் போது அது மகிழ்ச்சி தான்.  அது போன்ற பெருந்தன்மை நமக்கு மட்டும் தான் உண்டு. அதை அரசாங்கமும் அறிந்திருக்கிறது. மலாய் மாணவர்களின் 800 இடங்களை   அங்கிருந்து பறித்துக் கொடுக்க முடியாது என்பதால் தான்  இப்படிச் செய்கிறார்கள்! அப்படி எல்லாம் செய்தால் மலாய்க்காரர் ஆதரவு  அரசாங்கத்திற்கே இல்லாமல் போய்விடும்! மதமாவது மண்ணாவது  என்கிற நிலை ஏற்பட்டுவிடும்!

பாலஸ்தீன மாணவர்களின் எதிர்காலத்திற்காக  பிரார்த்தனை செய்வோம்!

No comments:

Post a Comment