Saturday, 11 November 2023

ஓர் ஆண்டு நிறைவு விழா!

 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமர் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு விழா அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வருகிற டிசம்பர் மாதம் 8,9,10  மூன்று நாள்கள் நடைபெற விருக்கின்றது.

இந்த ஓர் ஆண்டாக  நடைபெற்ற சாதனைகள், வேதனைகள் அனத்தும்  விவாதிக்கப்படும் என நம்பலாம்.  

சாதனைகள் என்றால், நமக்குத் தெரிந்த வரை, இலஞ்சம் ஓரளவு ஒழிந்திருக்கிறது  என்று சொல்லலாம்.   பெரிய அளவில் இல்லை என்று  தான் நான் நினைக்கிறேன். ஏதோ ஓரு பயம் அதிகாரிகளிடையே உண்டு என்பது மட்டும் நிச்சயம். இலஞ்சம் ஊழல் காரணமாக பலர் விசாரணையில் இருக்கின்றனர், உள்ளேயும்  தள்ளப்பட்டிருக்கின்றனர்! அன்வாரின் அரசாங்கத்தில் முதன்மையான, கொஞ்சம் நினைத்துப் பார்க்கக் கூடிய  ஓர் அம்சம் என்றால் அது இலஞ்சம் மட்டும் தான். வேறு சிலவும் இருக்கலாம்!

வேதனைகள் என்றால் விலைவாசி ஏற்றம் தான் கண்முன்னால் நிற்கிறது. கட்டுப்படுத்த முடியாத விலையேற்றம்! அரசிவிலை ஏற்க முடியாத அளவுக்கு விலை ஏறிவிட்டது. முட்டை விலை ஏறியது இன்னும் ஏறிக்கொண்டே இருக்கிறது!  கட்டுப்படுத்த முடியாது என்றே தெரிகிறது!வெறும் ஐம்பது காசு  விற்ற ஒரு சிறிய  ஓமப்போடி பேச்கெட் இப்போது 1.50 காசு! என்னடா சோதனை! ஒரு தோசை 2.50 காசு!  கோழி விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஒரு நிலையான நிலையில்  எதுவும் இல்லை!

நமது சமூகத்தின்  நிலையையும் கொஞ்சம் பார்க்கலாம்.  மெட் ரிகுலேஷன் கல்வி சேர்க்கையில்  இந்த ஆண்டு குறைந்திருக்கிறது.  பலகலைக்கழகத்திலும்  அதே கதை தான். மருத்துவம் பயில இரண்டே இரண்டு மாணவர்கள்  தான் தகுதி பெற்றவர்களாம். மற்ற இன  மாணவர்களின் தகுதி  வானளாவ உயர்ந்துவிட்டதாம்! மேற்கல்வி பயில அரசாங்கத்தின் உதவி கிடைப்பதில்  எந்த புள்ளிவிபரமும் இல்லை. 

வேலை வாய்ப்பு கிடைப்பதில் இந்தியர்கள் பின் தள்ளப்படுகின்றனர்.  அவர்களுக்குப்பதிலாக வங்காளதேசிகள் நிரப்பபடுகின்றனர். சிறு வியாரங்கள் செய்ய நம் இனத்தாருக்கு அனுமதி இல்லை. ஆனால் வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள், மியான்மாரைச் சேர்ந்த  ரோஹிங்யா அகதிகள்   அனைவரும் எல்லா இடங்களிலும் சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர்.  இந்தியர்கள்  என்றால்  உடனே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவர்களின் பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. வெளிநாட்டு வியாபாரிகள்  என்றால் அமைதி காக்கின்றனர்!

நம்மைப் பொறுத்தவரை இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தைவிட  இன்றைய அரசாங்கம் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும்  செய்துவிடவில்லை.  இது கடந்து ஓர் ஆண்டுகாலம் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு வேளை அடுத்த நான்கு ஆண்டுகளில்  எதும் சாதனைகள் செய்யலாம்.  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஓர் ஆண்டு இலஞ்சத்தின் நிறைவு விழா!

No comments:

Post a Comment