நமது நாட்டில் கல்வி என்று வரும் போது எந்த ஒரு பிரச்சனையையும் கல்வி அமைச்சு தீர்த்து வைத்திருப்பதாக எதையும் சொல்வதற்கில்லை.
எல்லாமே இழுபறி தான். நமக்கு அது இழுபறி. கல்வி அமைச்சு அதனை ஒரு விஷயமாகவே கருதுவதில்லை என்பது தான் அவர்களின் நிலைப்பாடு!
நாம், கல்வி தகுதி அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று கரடியாய் கத்துவோம். அவர்களோ "அப்படித்தானே இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்!
ஆக நடப்பது கோட்டா அடிப்படையில் என்று நாம் சொல்லுவதும் அமைச்சோ 'இல்லை! இல்லை! தகுதி அடிப்படியில் தான்!' என்று அவர்கள் சொல்லுவதும் இப்படித் தான் போய்க்கொண்டிருக்கிறது நமது கல்விக் கொள்கை.
ஏற்கனவே நமக்கு ஓர் அனுபவம் உண்டு. கல்வி அமைச்சு பல ஆண்டுகளுக்கு முன்னர் 'இனி அடுத்த ஆண்டிலிருந்து தகுதி அடிப்படையில் தான்' என்று அறிக்கை விட்டது. என்ன நடந்தது? மலாய் மாணவர்களின் வெற்றி அதிகரித்து இந்திய மாணவர்களின் வெற்றி மிகப் பெரிய அளவில் சரிந்தது! நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிபோனது தான் மிச்சம்.
அதிகாரம் நமது கையில் இல்லை. அதனால் வெற்றியைத் தோல்வி எனலாம். தோல்வியை வெற்றி எனலாம். அதற்கான அதிகாரம் அரசியலர் கையில் இருக்கிறது. அதனால் தகுதியைப் பற்றி அதிகம் பேசினால் வருகிற ஆண்டுகளில் நமது பிள்ளைகள் தகுதி இல்லாதவர்களாக ஆக்கப்படுவார்கள்!
ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அதிகாரத்தில் உள்ள பெரும்பாலோர் கோட்டா முறையில் கல்வி கர்று பதவிக்கு வந்தவர்கள். அவர்கள் கோட்டா முறையைத்தான் ஆதரிப்பார்கள். தகுதி என்று பேச ஆரம்பித்தால் அவர்களின் வாரிசுகள் அடிபட்டுப் போவார்கள்! அதனால் இதற்கு எந்த ஒரு முடிவையும் காண முடியாது! தங்களது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்றால் கோட்டா என்று ஒன்று வேண்டத்தான் வேண்டும்! அது தான் நியாயம் என்பது தான் அவர்களது வாதம்! தகுதி, திறமை என்று பேசினால் தனியார் கல்லூரிகள், வெளி நாடுகள் தான் நமது இலக்காக இருக்க வேண்டும்! அது தான் நமது ஆசையைப் பூர்த்தி செய்யும்.
அரசாங்கத்தின் கொள்கை மிக எளிதாக இருக்கிறது. வெளிநாட்டுக் கல்வி நாட்டை வழிநடத்த. உள்நாட்டுக்கலவி அரசாங்க காலி இடங்களைப் பூர்த்தி செய்ய! ஆனால் பிரச்சனை என்னவென்றால் அரசாங்க வேலைகளைக் கூட புரிந்துகொள்ளும் பக்குவம் பலருக்கு இல்லை என்பது தான். அதனால் தான் பலர் அரசியல்வாதிகளாக மாறிவிடுகின்றனர்!
இந்தப் பிரச்சனைத் தீருமா என்றால் 'ஊகூம் தீராது' என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. இதுவே போதும் என்று நாம் மன நிறைவு அடைய வேண்டியது தான். இது தான் நாட்டின் கல்விக் கொள்கை என்றால் அதனை நாம் மீற என்ன நியாயம் இருக்கிறது? நாம் என்ன அணுகுண்டுகளையும் ராக்கெட்டுகளையுமா தயாரிக்கப் போகிறோம்? அம்மி குத்த இந்தத் தகுதி போதும்!
No comments:
Post a Comment