Friday 17 November 2023

திறமையா? சிறுமையா?

 

திறமைக்கு மரியாதையா? அல்லது சிறுமைக்கு மரியாதையா?

இத்தனை ஆண்டுகள் நாம் திரை மறைவில் பேசிக் கொண்டிருந்ததை போட்டு உடைத்திருக்கிறார் மலக்கா தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்  பேசிய மாணவர்  நவீன் முத்துசாமி.

நீங்கள் என்ன தான் சொல்லுங்கள் 'எங்களை - இந்தியர்களை -  கல்வித் துறையில் யாரும் ஜெயிக்க முடியாது' என்பது தான் அவரின் செய்தி. நாங்கள் எவ்வளவு தான் கீழ்நிலையில் இருந்தாலும் கல்வி என்று வரும் போது நாங்கள் உயர்ந்து நிற்போம்!

அரசியல்வாதிகள் பேசப்பயப்படுவதை  சரியான இடத்தில்,  கற்றவர்  அவையில்  பேசியிருப்பது கொடுக்கப்பட்ட செய்தி காதில் உறைக்கும் என நம்பலாம். இது நாள்வரை உறைக்காதது இனிமேலா உறைக்கப் போகிறது?  என்கிற கேள்வியும் உண்டு!

கல்விக்காக கோடிக்கணக்கில் நம் நாடு செலவு செய்கிறது. ஆனால் அந்தக் கல்வி  தரமான கல்வியா என்பதில் அனைவருக்கும் ஐயம் உண்டு. எல்லாமே ஒரு தரமற்ற கல்வி என்பதில்  சந்தேகமே வேண்டியதில்லை. இந்தக் கல்வி மூலம் என்ன சாதித்தோம்? அரைகுறை அரசாங்கப் பணியாளர்களைத்தான் உருவாக்கினோம். அரசாங்க அலுவலகங்களுக்குப்  போனால்   எந்த ஒரு வேலையும் உடனடியாகச் செய்து கொடுக்கும் ஆற்றல் அங்கு இல்லை! அவர்கள் வேலை தான் என்ன என்பதே இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை!

நமது நாட்டு அரசியல்வாதிகளின் தரத்தை என்றாவது  யோசித்தோமா?  நல்ல அரசியல்வாதிகளை நம்மால் பார்க்க முடிகிறதா? நாட்டின் முன்னேற்றத்திற்காக  பாடுபடுபவர்கள் தான் அரசியல்வாதிகள்.  அவர்கள் என்ன செய்கிறார்கள்?   இலஞ்சத்தை முன் வைத்துத் தான்  அரசியலையே ஆரம்பிக்கிறார்கள்!  பேசும்போது கடவுளை முன் வைக்கிறார்கள். செயல்படும்போது  இலஞ்சத்தை முன் வைத்து கடவுளை பின் தள்ளிவிடுகிறார்கள்!   படிக்காதவன் கூட கடவுளுக்குப் பயப்படுகிறான்.  அரைகுறை கல்வி கற்றவன்  கடவுளையே நடுங்க வைக்கிறான்!  அரைகுறை கல்வி ஆபத்தான கல்வி, ஐயமில்லை!

இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதுவும் உயர்கல்வியில் எந்த இனப்  பாகுபாடும் கூடாது என்பதும் முக்கியம். ஆனால் என்ன நடக்கிறது? அதைத்தான் நவீன் கூறியிருக்கிறார்.   மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அது கட்டாயமாக மறுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பாத ஏதோ ஒரு  துறை ஒதுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பிய துறை  மறுக்கப்படுகிறது.

ஏதோ ஓரிரண்டு ஆண்டுகள்  மறுக்கப்படலாம். ஆனால் இங்கு நிலைமை வேறு. காலங்காலமாக மறுக்கப்படுகிறது. இதற்காக  ஒவ்வொர் ஆண்டும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகள் கல்வி அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல்.  இதனை என்னவென்று சொல்லுவது?

இதைத்தான் நவீன் முத்துசாமி, பட்டமளிப்பு விழாவில் கொஞ்சம் வெடித்திருக்கிறார்! சரியான இடத்தில் சரியாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்!   பார்ப்போம்! ஏதாவது நகர்கிறதா என்று!

No comments:

Post a Comment