Wednesday 8 November 2023

குடியற்ற தீபாவளி!

 

தீபாவளி இன்னும் சில நாள்களில் வரும். வருடத்திற்கு ஒரு முறை தான் தீபாவளி. அதனால்.........,?

அதனால் என்ன?  தீபாவளி நம் கையில்.  அது நமது கட்டுப்பாட்டில். ஆனால் நடப்பது என்ன?   மது அருந்திவிட்டால் நடப்பது என்னவென்று தெரியவில்லை!   யார் கைகளுக்கோ போய்விடுகிறது!

இன்னும் சிலர் தீபாவளி வரை காத்திருப்பதில்லை.  அதற்கு முன்னரே  ஆரம்பித்து விடுகின்றனர்.  அவர்கள் முன்னமையே திட்டம் தீட்டிவிட்டனர். என்னவென்று? இந்த ஆண்டு தீபாவளியை சிறையில் தான் கொண்டாட வேண்டுமென்று  திட்டம் தீட்டிவிட்டனர். அவர்களோடு அது முடியப்போவதில்லை.  குடும்பமும் சேர்ந்து சிறையில்   கொண்டாடுவது தான் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்குச் செய்யும் பிறவிக்கடன்!

நண்பர்களே!  தீபாவளி  ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. பெருநாட்கள் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. குழந்தைகளுக்கு இன்னும் அதிகம்  குதுகூலத்தை ஏற்படுத்துகிறது. 

அதனால் நமக்குப் பெருநாட்கள் தேவை.  ஆண்டுக்கொருமுறை  மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். யாரும் நம்மைத் தடுக்குப் போவதில்லை.

ஒன்றே ஒன்றை  மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை பெருநாட்கள் மது இல்லா பெருநாட்களாக அமையட்டும். அதை முற்றிலுமாகத் தவிர்க்க முயலுங்கள். பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து குடிக்கின்ற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.  சிறியவர்கள்  முன் பெரியவர்கள் குடிப்பதை  நிறுத்தப்பழக வேண்டும்.  சிறியவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பெரியவர்கள் வற்புறுத்துவதை  வெறுக்க வேண்டும்.  அது என்ன பழக்கம்?  காட்டுமிராண்டிகளிடையே கூட இப்படி ஒரு பழக்கம் இருக்க நியாயமில்லை. நம்மைவிட வயது குறைந்தவர்களைக் குடிக்க வற்புறுத்துவது  மிக மட்டமான பழக்கம் என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.

நமக்குத் தீபாவளி வேண்டும்.  ஏன்? எல்லாப் பெருநாட்களும் வேண்டும். ஆனால் அவைகள் மது இல்லாத பெருநாள்களாக இருக்க வேண்டும். அதுவே  நமது  சிறப்பான தீபாவளியாக  அமையும்.

No comments:

Post a Comment