Monday 20 November 2023

ஏன் இந்தப் புறக்கணிப்பு?


 பொதுவாக மலேசியா வாழ் இந்தியர் கடைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நாம்,  தமிழர்களின் கடைகளைப் பற்றி சொல்லவில்லை  தமிழர்களின் கடைகளில் நிச்சயம் தமிழ் இருக்கும். ஆனால் தங்களது வளர்ச்சிக்குத் தமிழர்களையே நம்பியிருக்கும்  தமிழரல்லாதாரின் கடைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  தமிழர்கள் அந்தப் புறக்கணிப்பை  பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான்  அவர்கள்  அதனைச்  செய்கிறார்கள்.

நாம் இவர்களை வழிக்குக் கொண்டுவர ஒரே ஒரு விஷயத்தைச் செய்தால் போதும். மிக எளிதான் வழி தான்.  யாரிடமும் சண்டைக்குப் போக வேண்டாம். சச்சரவுகள் வேண்டாம். பேசினால்  தேவையற்ற பேச்சுகள் வரும். ஒரே வழி தான். வாடிக்கையாளராவதை நிறுத்துங்கள். அங்கே போக வேண்டாம். அப்படி என்ன தான்  உயர்ந்த, தரமான கடையாக இருந்தாலும் அங்கே போவதை நிறுத்துங்கள். அவ்வளவு தான்.

நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் அது மட்டும் தான். அவர்களின் கடைகளுக்குப் போவதை நிறுத்தினால்  அவர்கள் தானாக வழிக்கு வருவார்கள்!  பல உணவகங்கள் தமிழையே மறந்து விட்டார்கள்.  அவர்களுக்கு மற்ற இனத்தவர்  மீது அவ்வளவு நம்பிக்கை.  அதனாலென்ன? அவர்கள் நம்மை மறந்தால் நாம் அவர்களை  மறப்போம்!

ஒரு சிலர் ஆரம்பகாலத்தில் தமிழோடு சேர்ந்து வளர்வார்கள். வளர்ந்தபிறகு தமிழர்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை இல்லாமல் போய்விடும்.  அப்போதுதமிழை மறந்துவிடுவார்கள்.

ஆனால் நமது கொள்கை ஒரே கொள்கையாகத்தான்  இருக்க வேண்டும். தமிழ் இல்லையேல் நமது ஆதரவு இல்லை. ஒரு நண்பர்  இனிப்பு பலகாரவகைகளை  வைத்து கடையொன்றை ஆரம்பித்தார். .  நான் அந்தக் கடையின் வாசலைக்கூட மிதிக்கவில்லை. காரணம் தமிழ் இல்லை.  ஒரு வேளை அவருக்கு இனிப்பு என்பதால் மற்ற இனத்தவரின் ஆதரவு கிடைக்கும் என நினைத்தார போல் தோன்றுகிறது . கடை கை மாறிவிட்டது. இன்று அதே இடத்தில் அதே வியாபாரம். வேறொருவர். நன்றாக ஓடுகிறது.  தமிழ்  உண்டு.

யாரிடமும் சண்டை வேண்டாம். நாம் ஆதரவு கொடுக்க வேண்டாம்.  நம்மை மதிக்காதவர்கள் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன?

நம்மிடம் உள்ளது ஒரே பதில் தான். நாங்களும் பதிலடி கொடுப்போம்!

No comments:

Post a Comment