அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக சுகாதார அமைச்சரின் மாற்றம் தான் பெரிதாகப் பேசப்படுகின்றது. சுகாதார அமைச்சில் தான் கொரொனா பெருந்தொற்றுக் காலத்தில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் அதற்கும் தற்போதைய சுகாதார அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நமக்குத் தெரியும். அமைச்சருக்கும், பிரதமருக்கும் என்ன அங்காளி, பங்காளி சண்டையோ, தெரியவில்லை!
அதே போல காலஞ்சென்ற ஓர் அமைச்சரின் அமைச்சும் இன்னும் காலியாகத் தான் இருக்கின்றது. அதற்கும் ஓர் அமைச்சர் நிரப்படுவார். ஒரு வேளைப் புதியவர் ஒருவரைக் கொண்டு அந்தப் பதவி நிரப்பபடலாம்.
இத்தனையும் சொன்ன பிறகு இந்தியரின் நிலைமை என்ன? நிச்சயம் இப்போது நான் கேட்காவிட்டாலும் பின்னர் இந்தக் கேள்வி எழும்பத்தான் செய்யும். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதில் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது காலங்காலமாக நமக்கு உள்ள கேள்வி. அதாவது எல்லாகாலங்களிலும் அமைச்சரவை மாற்றமோ அல்லது அமையும் போதோ மலேசிய இந்தியர்கள் திருப்தி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இப்போதும் அது தொடர்கிறது.
அமைச்சரவை அமைந்த போதும் நமக்கு அது திருப்தி அளிக்கவில்லை. இப்போது மட்டும், இந்த மாற்றத்தினால், அப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போகிறது?
இன்றைய இந்தியர் பிரச்சனையை நமது பிரதமர் நன்கு அறிந்தவர் என்று தேர்தலுக்கு முன்னர் அவரும் சொன்னார் நாமும் சொன்னோம். பிரதமர் ஆன பிறகு இந்தியர்களைப்பற்றி நினக்க அவருக்கும் நேரமில்லை நமக்கும் பொறுமையில்லை! ஆனாலும் பொறுமையோடு இருக்கிறோம். ஏதாவது அதிசயங்கள் நிகழாதா என்று வழக்கம் போல எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒன்று நிச்சயம். இந்த மாற்றத்தினால் இந்தியர்களுக்கு எந்த அதிசயங்களும் நிகழப்போவதில்லை. நம்மை அரசாங்கத்தில் பிரதிநிதிப்பவர்கள் வழக்கம் போல மௌனம் காப்பார்களே தவிர அவர்கள் பேசப்போவதில்லை. இது தான் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தினால் இந்திய சமூகத்திற்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. நாம் வழக்கம் போல ஆகாசத்தைப் பார்த்து 'சப்பு' கொட்ட வேண்டியது தான்!
No comments:
Post a Comment