Saturday, 28 June 2025

அது என்ன 'பெராட்டா ரொட்டி'?

நாங்கள் முதன் முதலாக  இந்த ரொட்டியைச் சாப்பிட  ஆரம்பித்த போது  அப்போது அதனை பெரட்டா ரொட்டி என்று தான் சொன்னோம்.  அதன் பின்னர் தமிழ் நாட்டில் பரோட்டா  என்று சொல்லுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.  அதுவே இப்போது நம் நாட்டி; ரொட்டி சனாய் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பரோட்டா  ரொட்டி எனது பள்ளி பருவத்தில் ஏறக்குறைய 1956  களில்  மற்றொரு மாணவருடன்,  சாப்பிட ஆரம்பித்தேன்.  அதுவே தினசரி மதிய உணவாக மாறிவிட்டது! மத்தியான பள்ளி என்பதால்  வீடு போய் சேரும்வரை  பசி தாங்கும்.  தேவையெல்லாம் 10 காசும்  வெறும் தண்ணீரும் தான்! 

சிரம்பானில் 1956 களில் தான் அதுவும் அலீஸ் கஃபே என்னும்  தமிழ் முஸ்லிம்  நண்பரின் உணவகத்தில் தான்  பரோட்டா  விற்கப்பட்டது.அப்போது தான் பரோட்டா சிரம்பானில் அறிமுகம் என நினைக்கிறேன். இப்போதும்  அந்த உணவகம் உள்ளது    அப்போது பரோட்டாவை  புறக்கணித்த இந்திய உணவகங்கள்  பின்னர்   அள்ளி அணைத்துக் கொண்டன!

இப்போது  ரொட்டி சனாய் என்கிற பெயரில் நமது நாட்டின் காலை நேர தேசிய உணவாக மாறிவிட்டது.




அறிவோம்:  இன்று மெட் ரிகுலேஷன் கல்வி பற்றி நம் மக்களால்  பெரிதளவு விமர்சனம் செய்யப்படுகிறது.  இது வழக்கமான  ஒன்று தான்.  ஆனாலும்  என்ன செய்ய? கல்வி மீதான புரிதல்  இன்னும் நம் மக்களுக்கு  வரவில்லை. பொது மக்களால்  குரல்  எழுப்பப்பட்டு  ஏதோ கொஞ்சநஞ்ச  பிச்சை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் பெற்றோர்களோ  'தூரம்' எனக் காரணம் காட்டி. குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்கள்!  யாரைக் குற்றம் சொல்லுவது? கொடுப்பவனுக்கு அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது!

Friday, 20 June 2025

எனது முதல் ஆங்கிலப் புத்தகம் (45)

 

எனது முதல் ஆங்கிலப் புத்தகம்  இது தான்.  அந்தக் காலத்திய பதிப்பு இப்படித்தான் இருந்தது.

அப்போது பள்ளியில் பரிட்சை முடிந்த நேரம்.  சிரம்பானில் ?பிளாஸா" தியேட்டர் ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது ஆங்கிலப்படங்கள்  ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் பழைய படங்களாகவே இருக்கும். கட்டணமும் குறைவாக இருக்கும். அந்தத் தியேட்டரின் வெளியே ஒரு சிறிய புத்தகக்கடை.  அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்களாகத்தான் விற்பனையில்  இருக்கும். 

அங்கு வாங்கப்பட்டது தான் இந்த எனது முதல் ஆங்கிலப் புத்தகம் Dale Caenegie  எழுதிய  How to  Win Friends  and Influence People.  அதன் பின்னர் பல ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் டேல் கார்னெகி  எழுதியவை.  அப்போது சிரம்பானில்  ஆங்கிலப்  புத்தகக்கடைகள்   ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை விட்டால் திமியாங் 'கத்தே'  தியேட்டரில் ஒரு சிறிய புதகக்கட்டை. சிரம்பானில் ஒரே தமிழ் புத்தகக்கடை என்றால் . அன்றும் இன்றும், என்றும் அது  பவுல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள "ரெங்கசாமி புத்தக நிலையம்" தான். அங்கு தான் எனது அனைத்துத்  தமிழ் புத்தகங்களையும் வாங்கினேன்.  

இதுவரை நான் வாங்கிய புத்தகங்கள் சுமார் ஆயிரம் இருக்கலாம். ஓர்  நூல்நிலையத்திற்குப்  பல புத்தகங்கள் போய்விட்டன.. இப்போது என்னிடம் இருப்பவை எல்லாம் சுய முன்னேற்றம்  (self-improvement)  புத்தகங்கள்  மட்டுமே.. அந்தப் புத்தகங்கள் என்னை ஈர்த்தது போல வேறு புத்தகங்கள் என்னை ஈர்க்கவில்லை!

ஒரு  மனிதனின்  உயர்வுக்குப்  புத்தகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் புத்தகங்கள் கைகொடுக்கும்.



அறிவோம்:  "யானை படைகண்டு சேனை பல வென்று"  என்று கவியரசு கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருப்போம்.  உலகிலேயே யானை படை வைத்திருந்தவர் சோழப்பேரரசர்  ராஜராஜ சோழன் மட்டும் தான். வேறு எந்த அரசரும் யானை படை வைத்திருந்ததாக  வரலாறு இல்லை.

Tuesday, 17 June 2025

நான் வாங்கிய முதல் புத்தகம் (44)

                                                   அறிஞர் அப்துற் றகீம்

நான் புத்தகப்பிரியன். என்னுடைய புத்தகங்கள் எல்லாம்  நானே காசு கொடுத்து வாங்கியவை.  தெரிந்தோ தெரியாமலோ எனது ஆரம்பகால புத்தகங்கள் அனைத்தும் தன்முனைப்பு (motivation)புத்தகங்களாகவே  அமைந்துவிட்டன. இத்தனைக்கும் அந்த நேரத்தில்  தப்பறியும் கதைகள், மர்மக்கதைகள் என்றுதான் எனது சுற்றுவட்டாரம் அனைத்தும்  மூழ்கியிருந்தன! நானும் தான்! ஆனால் ஒன்றில் மட்டும் நான் தீர்க்கமாக இருந்தேன். இதுவரை நான் சினிமா புத்தகங்களையோ, துப்பறியும் புத்தகங்களையோ நான் லாசு போட்டு வாங்கிப் படித்ததில்லை!  அந்தக்கால கட்டத்தில் துப்பறியும் கதைகளை எழுதி வந்த  அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் நான் இப்போதும் அறிவேன்.

அறிஞர் அப்துற் றகீம்  எழுதிய புத்தகம் தான் "வாழ்க்கையில் வெற்றி". ஆனால் அன்றைய நிலையில்  அவருடைய மொழிநடை   எனக்குப் புரியவில்லை! பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய  புத்தகங்கள் அனைத்தையும் வாங்கினேன்.   அப்போது மிக எளிய நடையில் தமிழ்வாணன் எழுதி வந்தார்.  அவருடைய நடை தான் என்னைக் கவர்ந்தது. தமிழ்வாணனின் வார இதழான  "கல்கண்டு"  தான் நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாசித்திருக்கிறேன். அவர் எழுதிவந்த துணிவே துணை கட்டுரைகள்  எனக்குப் பிடித்தமானவை.



அறிவோம்:   மிளகாய் என்பது மிகவும் காரசாரம் என்பதை நாம்  அறிவோம். மிளகாய் வகைகளில் பலவகை உண்டு.  காரம் அதிகம், குறைவான காரம் அல்லது காரமே இல்லை என்பது தான்  அதன் குணம். Chili  என்கிற நாட்டிலிருந்து வந்ததால் மிளகாயின் பெயர் ஆங்கிலத்தில் Chilli யாக மாறிவிட்டது!  மிளகாய் தமிழர்களின் உணவு  அல்ல. நமது பாரம்பரியம்  என்பது மிளகு தான். மிளகாய் வருவதற்கு முன்னர் நாம் மிளகைத்தான் பயன்படுத்தினோம். இரண்டுமே காரம் தான்.  ஆனால் மிளகு எந்தத் தீங்கையும் செய்யாது.  மருத்துவ குணமிக்கது.

Friday, 13 June 2025

முதல் பல் பிடுங்கிய அனுபவம்! (43)

ஒரு காலகட்டத்தில், அன்றைய சிரம்பான் பட்டணத்தில் , பல் சொத்தையாகப்  போய்விட்டால்  பல் பிடுங்குவதில்  நிறைய  பிரச்சனைகள் எழும் என்பது  இப்போது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மருத்துவமனைகளுக்குப் போனவர்கள் கூட  அவதிப்பட்ட கதைகள் தான் அதிகம். வெளியே  போலி பல் மருத்துவர்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். இவர்கள்  பரவலாகப் பல இடங்களில்  தொழில் செய்து வந்தனர். ஆனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

எனக்கு 21 வயதில் பூச்சிப்பல  குடைந்தெடுத்தது!  அப்போது முறையாக தொழில் செய்து வந்தவர்  Dr.Cheah  எனகிற பல மருத்துவர். ஆஸ்திரேலியாவில்  கல்வி கற்றவர். அவர் ஒருவர் தான் உண்மையான பல் மருத்துவர். போய் அவரிடம் பல்லைக் காட்டினால் போதும்  பல்லைப்பிடுங்கி விட்டுத் தான்  மறுவேளை! !  நான் முதன் முதலில் பிடுங்கிய பல் கடவாப்பல்  அப்போது ஒரு பல்லை பிடுங்குவதற்கு ஐந்து வெள்ளி கட்டணம். .  தொடர்ந்தாற் போல என் பற்களை அவர் தான் பிடுங்கினார்!  ஒருசில ஆண்டுகளுக்குப்  பின்னர் தான்  நமது இந்திய மருத்துவர்கள் வர  ஆரம்பித்தனர். என்னுடைய இருந்த  பற்களைக்  காப்பாற்றினர்! இது தான்  நிலை.அன்றைய சிரம்பானில்!

இப்போது பல் மருத்துவர்களுக்குக் குறைச்சல் இல்லை. கட்டணம் வசூல் பண்ணுவதிலும் குறைச்சல் இல்லை!



அறிவோம்:சிரம்பானைச் சேர்ந்த நாடறிந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்  பாவலர் ஐ.இளவழகு அவர்கள்  கடந்த 10-6-2025 அன்று இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்தைற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thursday, 5 June 2025

எனது முதல் மூக்குக் கண்ணாடி (42)

 

முதன் முதலாக எனது கண்பார்வையில்  குறைவு ஏற்பட்ட போது என்னுடைய வயது பதினாறு. வகுப்பில் கரும்பலகையில்   ஆசிரியர் எழுதுவதைப் பார்க்க முயாமல் போயிற்று.

அப்போது தான் சிரம்பான் மருத்துவமனைக்குச் சென்று  கண்களைப் பரிசோதிக்க வேண்டி வந்தது. கண் டாக்டர் ஓர் வெள்ள்க்காரர். மலேசிய மருத்துவர்கள் இல்லாத காலம்.

இன்றைய நவீன வசதிகள் அப்போது இல்லை. பொதுவாக அனைவரையும் ஒரு பெஞ்சில்  உட்கார வைத்து  முன்னால் உள்ள எழுத்துகள் தெரிகின்றனவா என்று பார்ப்பார்கள்.  என் பக்கத்தில் ஒரு சீன பாட்டி உட்கார்ந்திருந்தார். என்ன அதிசயம் என்றால் அந்தப் பாட்டியின்  பார்வை திறனும் என்னுடைய பார்வை திறனும்  சமமாகவே இருந்தது!

அன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு தனியார்  கண் கிளினிக் தான். அதை நடத்தியவர்  டாக்டர் தாரா சிங் என்கிற பஞ்சாபியர். கண் டாக்டர் மட்டும் அல்ல  மூக்குக்  கண்ணாடிகளும் அங்கு விற்பனைக்கு இருந்தன.  சிரம்பானில் வேறு எங்கும் கிடைக்க வழியில்லை. அங்கு நான் முதன் முதலாக வாங்கிய கண்ணாடியின்  விலை 45 வெள்ளி. அதாவது  1956-ம் ஆண்டு கண்ணாடியின் அன்றைய விலை!   அப்போதெல்லாம் மூக்குக் கண்ணாடிகள் ஏதோ  பணக்காரர் வீட்டு அலாங்காரப்  பொருளாகப்  பார்க்கப்பட்டன!

அன்றைய டாக்டர் தாரா சிங்கின் அந்தக் கிளினிக்  இ[ப்போதும் கண்  கிளினிக்  தான்.  இப்போது அது கைமாறிவிட்டது, தமிழர்களின் கையில்.




அறிவோம்:  அறிஞர் பெர்னாட்ஷா சுமார் 94 ஆண்டுகள் நல்ல ந;லத்தோடு வாழ்ந்தவர். கண்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாள்தோறும்  கையில் புத்தகங்களோடும், பேனாவோடும்  எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும்  இருந்தவர். கண்களை நீரில் தொடர்ந்து கழுவி வந்ததால் மங்காத பார்வை பெற்றிருந்தார்.

Sunday, 1 June 2025

வானொலி ஒலிபரப்புகள் (41)

          இந்த கட்டடத்திலிருந்து தான்  'ரேடியோ மலாயா'  ஆரம்பம்.


ஆரம்ப காலத்தில் எனக்கும் வானொலி ஒலிபரப்புகளுக்கும்  எந்த சம்பம்தமும் இல்லை.

எனது இடைநிலைக் கல்வியின் போது  ஒரு மாணவர் வந்து சேர்ந்தார்.  அவர் படிப்பைவிட  ரேடியோ ஒலிபரப்புகளுக்கு  அடிமையாக இருந்தார். எனக்கும் அவரின்  பழக்கம் ஏறக்குறைய ஒட்டிக் கொண்டது என்று சொல்லலாம். அதாவது அவர் இல்லாமல் வானொலியில் "நேயர் விருப்பம்" இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பெயர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மூன்று நான்கு தடவை  ஒலிபரப்பாகும்! அதெல்லாம் பெரிய சாதனை என்று நாங்களும் நினைத்துக் கொள்வோம்!

அப்பொழுது  "பாரதி அச்சகம்" பள்ளி பக்கத்திலேயே இருந்ததால்  நானும் நேயர் விருப்பம் கார்டுகளை வாங்கி  வானொலி இரசிகனாகி  மாறிவிட்டேன்! அப்போது சிங்கப்பூர் வனொலி தான் மிகவும் பிரபலம். அப்புறம் தான் மலாக்கா வானொலி, கோலாலம்புர் வானொலி, ஜொகூர் வானொலி. இவைகளில் மலாக்கா, ஜொகூர்  இரண்டும் பகுதி நேர ஒலிபரப்புகள். அது மட்டும் அல்ல. புதுடில்லியிலிருந்து  ஒலிபரப்பாகும் "ஆகாசவாணி" யையும்  சேர்த்துக் கொள்ளலாம். எப்படியோ நாமும் அதில்  கரைந்து போனோம்!

படிப்பில்  திறமை இல்லாததால் இப்படித்தான் கவனம் சிதறிப்போனது!  ஆனாலும் அதிலும் சில வெளி உலக  அனுபவங்கள்!



அறிவோம்:   நீங்கள் வானொலி நிகழ்ச்சிகளை அல்லது கைப்பேசியைப் பயன்படுத்துகிறவராகவோ  இருந்தால் ஒன்றை மட்டும் தவற விடாதீர்கள்.  செய்திகளைக் கேட்பது  அத்தியாவசியம். இன்றைய பல பெண்கள் நாட்டில் நடப்பதை அறியாமல் பிரச்சனைகளுக்கு  உள்ளாகிறார்கள்.  அதனால் செய்திகள் என்பது தவிர்க்க முடியாதவை.

Tuesday, 27 May 2025

பேனா நண்பர்கள் (40)

பள்ளி காலத்தில் எனக்கு ஏகப்பட்ட பேனா நண்பர்கள்.   எனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர  சொல்லும்படியாக வேறொன்றுமில்லை!

பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் தான். உள்ளூர் நண்பர் ஒருவரைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு முஸ்லிம் இளைஞர். தமிழர். நன்றாகத்தான் எழுதி வந்தார். தனது போட்டோவை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி இந்து சமய மாரியம்மன் படத்தை அனுப்பிவைத்தார்! அத்தோடு உறவை முறித்துக் கொண்டார். பின்நாள்களில் இவர் கோலாலம்பூர் தமிழ் வானொலியில் பணி புரிந்திருக்கிறார், அவர் பெயர், வாழந்த தோட்டம் அனைத்தும் இப்போதும் அத்துப்படி!

ஜெர்மனியில் இருந்து ஓர் இளைஞர்.  நீண்ட நாள் எழுதிவந்தோம்.  அவர் இராணுவப் பயிற்சிக்குப் போய்விட்டார்.. சுவீடன் நாட்டிலிருந்து ஒரு பெண். நீண்ட நாள் ஏழுதிவந்தார்.  ஒரு நாள் விபத்தில் அவர் இறந்து போனதாக  செய்தி வந்தது.  எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நன்றாகவே எழுதிவந்தார். ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் யூதப் பெண்ணா அல்லது அரபுப் பெண்ணா என்று கேட்டிருந்தேன்.கொதித்துப் போனாள் அவள்! நீ எப்படி என்னை யூதப்பெண்ணா என்று கேட்கலாம் என்று வெடித்துச்  சிதறடித்தாள் என்னை!  எனக்கு அந்த ஊர் அரசியல் எல்லாம் தெரியாது! அத்தோடு முறிந்தது.

எது எப்படியிருந்தாலும் அந்த நண்பர்கள் எல்லாம் எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்தனர்.



அறிவோம்:  மனிதன் ஏழையாக இருக்கலாம் கோழையாக இருக்கக் கூடாது என்று சொன்னவர் துன் வீ.தி. சம்பந்தன். ஆனால் இன்றைய நிலையில்  ஏழையும் வேண்டாம், கோழையும் வேண்டாம்  கல்வியை மட்டும் விடவேண்டாம். கல்வி தான் ஒருவனை வீரனாக்கும்

Monday, 26 May 2025

பூ போட்ட சட்டைகள்! (39)

பு
பூ போட்ட சட்டைகளை அணிவது என்பது எந்தக் காலத்தில் ஆரம்பானது?  அப்போது எல்லாம்  'பாத்தேக்'  என்கிற வார்த்தையே நடப்பில் இல்லை என்பது தான் உண்மை. ஏறக்குறைய 1959/1960 - ம் ஆண்டுகளில் தான் இந்த ஆடைகள் பொது மக்களின் பார்வைக்கு வந்தன  என்பது எனது கணிப்பு.

பூ போட்ட  சட்டகளை அணிவது எங்கிருந்து வந்த கலாச்சாரம் என்பது தெரியவில்லை. நான் நினைப்பது 'ஹாவாய்" தீவின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது அன்றைய ஹிப்பிகளால் பிரபலப்படுத்தப்பட்ட  ஒரு கலாச்சாரம் என்பதாக சில குறிப்புகள் கூறுகின்றன.

பூ போட்ட சட்டைகளை அணிந்த அந்த ஆரம்பகாலத்தில்  -  அணிபவர்களை நோக்கி வெவ்வேறு வகையில் வசைகள் பாடப்பட்டன. அகராதி, அடியாள்,  கேங்ஸ்டர்..... .இப்படியாக  பலப்பல ஏச்சும் பேச்சும்!  என்னைப் பொறுத்தவரை அது பெண்கள் அணியும் சட்டை என்பதாகவே மனதில் பட்டது. நான் அணிவதில்லை.

எனது நண்பர் இராமன் என்பவர் எதுபற்றியும் கவலைபடாத மனிதர். எனக்குத் தெரிந்து  அவர் தான் முதன் முதலாக இது போன்ற சட்டைகளை, செனவாங் தோட்டத்தில்,  அணிய ஆரம்பித்தவர்.  ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்த சட்டைகள் சூடு பிடிக்க  ஆரம்பித்தன. 

அதன் பின்னர் தான் பாத்தேக் பிரபலப்படுத்தப்பட்டது.  அதன் விற்பனையை அதிகரிக்க வாரம் ஒரு முறை  பாத்தேக் அணியுங்கள் என்று பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒன்றை நினவுபடுத்துகிறேன். ஆரம்பகாலத்தில்  இதன் விற்பனையில்  நமது இளைஞர்களின் பங்கு அதிகம் என்பதில்   சந்தேகம் வேண்டாம். நாம்  தான் வழக்கம் போல இதன் முன்னோடி!


அறிவோம்:   தமிழர்கள் எப்போது  மேற்சட்டைகள் போட ஆரம்பித்தார்கள்? இன்றைய சட்டைகள் போன்று இல்லாது  அவ்வப்போதைய  நாகரிகத்திற்கு ஏற்றவாறு அவர்களும் அணிந்திருக்கிறார்கள்.  எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வனில்'  இதனைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் நீண்டகாலம்  என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தை இல்லை!

Sunday, 25 May 2025

கட்டம் போட்ட சட்டை! (38)

கட்டம்  போட்ட சட்டை  கதாநாயகர்கள்  என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கட்டம் போட்ட சட்டைகள் இந்திய இளைஞர்களிடையே  ஆக்கிரமித்துக்  கொண்டிருந்தன.

அது ஏதோ ஒரு காலகட்டம். ஆண்டு  ஞாபகத்திற்கு வரவில்லை. தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனா அல்லது வில்லனா  அதுவும் ஞாபக்த்தில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டுக் கொண்டு அமர்க்களமாக வருவார்  ஒரு நடிகர்.     அந்த நடிகர் யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை.  அந்த அளவுக்கு அந்த ஸ்டைல்  இளைஞரிடைய  தீவிரமாக பற்றிக்கொண்டது!  நான் கூட சிகப்பு நிற  கட்டம் போட்ட சட்டை வைத்திருந்தாக ஞாபகம்.   

வீட்டில் நிலைமை எப்படியிருந்தாலும்  நாட்டில் ஏற்படும் மாற்றங்கள்   எல்லாத் தரப்பினரையும்  பாதிக்கத்தான் செய்யும்.  யாரும் விதிவிலக்கல்ல. அது தோட்டம் பட்டணம் என்று பார்ப்பதில்லை.                                                                                                                     



அறிவோம்: பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவராக  தேர்ந்தெடுக்க்ப்பட்ட  டத்தோஸ்ரீ ரமணன்  வாழ்த்த நினைத்தாலும்  இவரும் மற்றவர்களைப் போல "பேசாமடந்தை"  தானே? வாய் திறக்க முடியாதவர் போற்றி! போற்றி!

Saturday, 24 May 2025

சங்கிலியோடு பணப்பையை ......! (37)

அது ஒரு காலம் என்பார்கள்.  எது, எதற்கு, என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று  புரியாத புதிர்.  என்னவோ எல்லாரும் செய்கிறார்கள்  நாமும் செய்கிறோம்! அதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

எங்கள் பள்ளி காலத்தில் இதுவும் நடந்திருக்கிறது. பணம் வைத்திருக்கும் பர்சில் (Purse)  பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் என்னவோ ஆயிரக்கணக்கில் பணம் இருப்பது போல  பணப்பையை ஒரு சங்கலியோடு இணைத்து  பத்திரமாக, டிகபாதுகாப்பாக  பிண்ணி வைத்திருப்போம்!  அப்படிக் கொஞ்சம் நாள், உண்மையைச் சொன்னால், ஸ்டைல் காட்டினோம்!  அப்புறம் ஒரிரு ஆண்டுகளில்  அந்தப் பழக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!

இப்போதும் ஒரு சிலர் அதனைப் பயன்படுத்தித்தான்  வருகின்றனர். பெரும்பாலும் அது வெளிநாட்டவர் என நினைக்கிறேன்.

எல்லா புதுமைகளையும் விரும்புபவர்கள் இளைஞர்கள். எல்லாம் மாணவ பருவத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகின்றன. இன்னொரு புதுமையும் உண்டு. பார்ப்போம்.



அறிவோம்: பி.கே.ஆர். தேர்தலில் பிரதமரின் மகள்  நூருல் இஸா கட்சியின் தேர்தலில்  துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்வதில் நம் சமுதாயத்திற்கு என்ன ஆகப் போகிறது?

Friday, 23 May 2025

ஐம்பது காசுக்கு முடிவெட்டினோம்! (36)


முன்பு காலத்தில்  முடிவெட்ட ஐம்பது காசு என்பது  என்ன அதிசயமா என்று கேள்வி எழலாம். 

அப்படி எல்லாம் சொல்ல இயலாது.  நான் முடி வெட்டிக்கொள்ள  ஆரம்பித்த காலத்தில்  ஐம்பது காசுக்கு  வெட்டியதாக ஞாபகமில்லை. நான் வெட்டுவது பெரும்பாலும்  முடிவெட்டும் நிலையங்களாக இருந்ததினால்  அங்கே ஐம்பது காசுக்கு வேலையில்லை. ஒரு வேளை குழந்தைகளுக்கு  இருந்திருக்கலாம்.

ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பள்ளியிலேயே  ஒருவர் கடை திறந்தார்.  அங்கே முடி வெட்டினால் ஐம்பது காசு திட்டத்தைக் கொண்டு வந்தார்.  அது  மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது.  அவரது கடையில் எப்போதும் கூட்டமாகவே  இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டுவது ஒரே மாதிரி தான்.  வித விதமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தான் முடி வெட்டுவார். இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பைத் தருகிறது. அந்தப் பெரியவர் முயற்சி எடுத்து பள்ளியோடு பேச்சுவார்த்தை நடத்தி  கடை போட்டாரே அதனைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது  அது போன்ற முயற்சிகள் வங்காள தேசிகளிடம் கைமாறி விட்டதோ என்று தோன்றுகிறது. வேலையே தெரியாமல் தொழில் செய்கிறார்கள்!  கேட்டால் அது "அவர்கள் சாமர்த்தியம்"  என்கிறார்கள்!



அறிவோம்:  பொதுவாக எண்களை, அதாவது 0 1 2 3 4 5 6 7 8 9  என்னும்   எண்களை அரபு எண்கள் என்கிறோம்.   அது எங்கள் நாட்டு எண்கள்  இல்லை  என்று  அரபு நாடுகள் சொல்லிவிட்டன. அது இந்து நாட்டிலிருந்து  வந்த எண்கள் என்று சொல்கின்றன. இந்து நாடு என்றால் இந்தியா.  அது தமிழர்கள்   பயன்படுத்திய எண்கள்  என்று  இன்றுவரை தமிழ் நாடு அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை.  திராவிடர்கள்  தமிழ் நாட்டை ஆண்டால் இது தான்  நடக்கும்!

Thursday, 22 May 2025

காலணிகளுக்கு இ;லாடம் (35)

 

இலாடங்கள் என்னும் போது நமக்குத் தெரிந்தது எல்லாம் குதிரைக்கு இலாடம் அடிப்பது தான்.  இப்போது மாடுகளுக்கும்  அடிக்கப்படுகிறது  என்பதும் தெரிய வருகிறது.

சரி  பள்ளி மாணவர்களுக்கும்  இந்த இலாடத்துக்கும் என்ன சம்பந்தம்?  நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது  காலில்  தோல் சப்பாத்துகள் அணிவது  வழக்கம்.  இன்றைய நிலை எனக்குத் தெரியவில்லை.

தோல் சப்பாத்துகள் அணியும் போது  எங்கள் பள்ளி அருகிலேயே   ஒரு சீனர்  சப்பாத்துகளுக்கு இலாபம் அடித்துக் கொடுப்பார், இலாடம் என்றால்  மேலே படத்தில் உள்ளது போல் இருல்லாது. அது சிறு சிறு  துண்டுகளாக இருக்கும். அதில் இரண்டு துண்டுகளை  சப்பாத்தின் அடிபாகத்தில் இரு பக்கமும் அடித்துக் கொடுப்பார்.  நான்கு இடத்திலும் அடித்துக் கொடுதால்  நடக்கும் போது சத்தம் பயங்கரமாக இருக்கும்! அதனால் இலாடங்கள் இரண்டே போதுமானவை. 

இப்படி  இலாடம் அடிப்பது சப்பாத்துகள்  நீண்ட நாள்  உழைக்கும்  என்கிற  காரணம் தான்.  வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  மேலும் அன்று  இடைநிலைப் பள்ளிகள்  என்றால்  நீண்ட காற்சட்டை  அணிவதும், தோல் சப்பாத்துகளை அணிவதும்  தொடக்கப் பள்ளிகளூக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கத் தான்..




பின் குறிப்பு:  கண்களில் உள்ள குறைபாடுகளினால்  சரியாக செயல்பட முடியவில்லை. மன்னிக்கவும்.  (கோடிசுவரன்)

Sunday, 11 May 2025

ஐந்தடிஜோசியக்காரன்! (34)


 அந்தக் காலகட்டத்தில் ஐந்தடி ஜோசியர்கள்  அதிகம்.  அடிக்கடி தோட்டப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். காரணம் ஏமாறும் தமிழர் கூட்டம் தோட்டங்களில் தான் இருந்தார்கள்!

எங்கள் வீட்டில் ஜோசியம் பார்க்கும் பழக்கம் இல்லை.  எப்படியோ ஒரு முறை  ஜோசியர் ஒருவர்  என் கையைப் பிடித்து அவரே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லை. ஆரம்பிக்கும் போதே தூண்டிலை வலிமையாக போட்டுவிட்டார்!  "இவனுக்கு ராஜ யோகம்!  இங்கிலாந்து அரசர்  பிறந்த நேரத்தில்  தான் இவனும் பிறந்திருக்கிறான்! வருங்காலத்தில் பெரிய ஆளாக ஆகா! ஓகோ! என்று வருவான்! என்று பொளந்து  தள்ளிவிட்டார்!   அவருக்குக் கூலி கிடைத்துவிட்டது! அது தானே அவருக்கு வேண்டும்?

இது எப்போது நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  பிற்காலத்தில் ஏதையோ பற்றி பேசும்போது  என் தாயார் இது பற்றி சொன்னார். அப்போது கூட எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும், அவ்வளவு தான். ஆனாலும் ஏதோ ஒன்று அது என்னுள்ளே அப்படியே  தங்கிவிட்டது! அதனால் தான் ஒருவன் ஜோசியனாக இருந்தாலும்  ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால்  அது அப்படியே மனதில் படிந்துவிடுகிறது! அந்த ஜோசியர் அப்படி ஒன்றும் உண்மையைச் சொல்லிவிடவில்லை. ஆனால்  கேட்க சந்தோஷமாகத் தானே  இருந்தது?  அதனால் தானே மறக்க முடியவில்லை?  அதனால் தான் ஜாதகம் சொல்லும் போது சாதகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.


   
அறிவோம்: ஜாதகம்,  ஜோதிடம், ஜோசியம், நாடி ஜோசியம்,மரத்தடி ஜோசியம், ஐந்தடி  ஜோசியம், கிளி ஜோசியம், மூச்சு ஜோசியம், தாயக்காய்,  பகடைகாய் - என்று ஜாதகத்தையே கேலிக்குரியதாக  ஆக்கிவிட்டார்கள்!  இது ஓர் உன்னதமான கலை.  அது தமிழர்களின் கலை தான். இந்த உயரிய கலையை நாம் கேலி செய்துவிட்டு அந்தப்பக்கம் போய்  சீனர்களின் ஃபெங் சூய் (Feng Shui)  பார்க்கிறோம்! சீனர்களின் பல கலைகள்  நம்மிடமிருந்து  போனவைகள் தான்! நம்முடைய மூலத்தை நாம் மறந்து விட்டோம்! நம்முடைய கலைகளையே பிறரிடமிருந்து நாம் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறோம்!

Wednesday, 7 May 2025

தலையாட்டி அண்ணன்! (33)

 

இது ஒரு வருத்தத்திற்கு  உரிய சம்பவம். எனது நோக்கம் எல்லாம் நமது தமிழ் மக்கள் எப்படியெல்லாம் என்னவென்றே  தெரியாத  வியாதிகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது தான்.

அப்போது தான் அந்த அண்ணன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். லோரி ஓட்டுநர் வேலை.  ஆனல் அவரிடம் ஒரு குறை தெரிந்தது.  தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார். தலையை ஆட்டி ஆட்டி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.  ஏதோ ஒரு வியாதி.  அப்போதெல்லாம்  இது என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே மருத்தவர்கள் இல்லை. என்ன செய்ய?   அன்றைய தமிழனின் தலைவிதி  என்று தான் எடுத்தக்கொள்ள வேண்டும்.

அந்த அண்ணன் நீண்ட நாள் வேலை  செய்ய முடியவில்லை. லோரி விபத்தில் இறந்து போனார். எனக்குத் தெரிந்தது இந்த ஒரு சம்பவம் தான், ஆனால் அன்றைய மலாயாவில் எத்தனை பேர் இப்படி இறந்தார்களோ?

எனது நண்பன், கோவிந்தசாமி என்று பெயர்.  அவன் கூட இரண்டு கால்களிலும் சிறங்கு வந்து வீட்டிலேயே  முடங்கிக் கிடந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது  அவனுக்கு எல்லாம் சரியாகிவிட்டது. ஒரு வேளை நவீன மருத்துவம் அவனைக் குணமாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.



அறிவோம்:  அன்றைய வியாதிகள் எல்லாம் சரியான, சத்தான உணவுகள் இல்லாததால் வந்தவை.  விஷக்கடிகளால் வந்தவை.  இன்று கூடுதலான சத்தான உணவுகள்,  குப்பை உணவுகள் - இவைகளால் புற்று நோய், இதயக் கோளாறுகள், இனிப்புநீர் போன்ற வியாதிகளால்  அவஸ்தைப் படுகின்றோம்.  ஆக வியாதிகள் நிரந்தரம். காலத்திற்கு ஏற்ப மாறுபவை!


Sunday, 4 May 2025

பாட்டி வைத்தியம் (32)


 பாட்டி வைத்தியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்ய?  இப்போது படித்தவர்கள் அதிகமாகி விட்டதால் அதன் மௌசு,   இளசுகளிடையே குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பாட்டி வைத்தியம்  உயிர்ப்புடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மங்கிப்போய் விடவில்லை என்பது ஆறுதல்.

இது என் தாயார் சொன்னது. நான் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்த போது  ஏற்பட்ட ஒரு வியாதி. உடல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. படுத்த படுக்கை தான்.  போர்ட்டிக்சன். மருத்துவனைக்குக் கொண்டு சென்ற  போது டாக்டர் "ஊகூம், இவன்பிழைக்க மாட்டான்" என்று கைவிரித்து விட்டாராம்.

அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து இலைதழைகளைக்  கொண்டுவந்து  அவைகளைக் கொதித்தண்ணீரில் அவித்து பின்னர் அந்தத்  தண்ணீரால் உடல் முழுவதும் நீவி விட்டாராம். பல மாதங்கள் படுத்தே கிடந்தே நான் ஒரு சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விட்டேனாம்!  என் தாயார் சொன்ன இலைதழைகளில்  கத்தாழை (Aloe Vera)  யும் ஒன்று. இன்றும் நாம் இந்தக் கற்றாழையை ஏதோ ஒரு வகையில்  பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

சரி அதென்ன பாட்டி வைத்தியம்? இது தமிழரிடையே பாரம்பரியமாக வருவது. உலகின் மூத்த குடி என்னும் பெருமை உள்ள மக்களான நமக்கு  எந்தவொரு மருத்துவமும் அறியாமலா வாழ்ந்து வந்தோம்?  அதன்  பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.



அறிவோம்:  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - வாசல் தோறும் வேதனை இருக்கும் - வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை -  எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  இறுதி வரைக்கும்  அமைதி இருக்கும்  - ஏழை மனதை மாளிகை ஆக்கி  இரவும் பகலும் காவியம் பாடு -  நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து -  நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு - உனக்கும் கீழே உள்ளவர்  கோடி  - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு 

கவிஞர் கண்ணதான்









Thursday, 1 May 2025

நாக்குப்பூச்சி! (31)

 

இன்றைய தலைமுறையினருக்கு  நாக்குப்பூச்சி என்றால் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை! 

அது அந்த அளவுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் வசித்தசெண்டயான் தோட்டத்தில்  அது கட்டாயம் என்கிற நிலைமையில் இருந்தது.  அது ஏன் என்பது தெரியவில்லை.  

பிரச்சனை என்பது இது தான். மாதத்திற்கு  ஒரு முறை சிறுவர்களுக்கு  வயிற்றைச் சுத்தம் செய்வதற்காக  விளக்கெண்ணய்  கொடுப்பார்கள்.   ஒவ்வொரு மாதமும் இது நடக்கும்.  மற்ற தோட்டங்களில் இப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தோட்டத்தில்  மட்டும் அந்த அநியாயம் நடந்தது!  அதைக் குறையாகப் பார்த்தாலும்  விளக்கெண்ண்யை சாப்பிட்டுவிட்டு உட்கார்த்தால்  நீட்டு நீட்டு நாக்குப்பூச்சிகள் வந்து விழுவது மட்டும் உறுதி.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சீனி அதிகம் சாப்பிடுவதால் வருகிற  கோளாறு என்கிறார்கள்.  அந்த கஷ்ட காலத்தில் சீனி அப்படியென்ன கொட்டியா கிடந்திருக்கும்?அது சரியோ தவறோ  நாக்குப்பூச்சி என்பது உண்மை!

விளக்கெண்ணெய் எங்கிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை.  தோட்ட நிர்வாகம் கொடுத்ததா என்பது தெளிவில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் இந்த விளக்கெண்ணெய் பிரச்சனை எழவில்லை!  ஏன்? அதன் பின்னர் விளக்கெண்ணெய் சாப்பிட்டதாக நினைவில் இல்லை.





அறிவோம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை மனிதகுலத்தை  ஆட்டிப்படைக்கத் தான் செய்யும்.  ஆனால் அவற்றுகெல்லாம் மனிதன் தீர்வைக் காணாமல் இருந்ததில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு.
 

Sunday, 27 April 2025

உத்தாம் சிங் பஸ், கணேசன் பஸ் (30)


 பேரூந்தில் எனது முதல் பயணம் என்றால் அது "உத்தாம் சிங்"  பேரூந்து தான்.  

இந்தப் பேருந்து  மட்டும் தான்  சிரம்பான் - போர்ட்டிகக்சன்  பாதையில் அந்தக் காலத்தில் ஓடிய  ஒரே பேருந்து  நிறுவனம். நான் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில  படிக்கின்ற போது  நான் முதன் முதலாக ஏறிய பஸ்  இந்த உத்தாம்சிங் பஸ் தான்.
 
இந்த நிறுவனத்தின் அலுவலகம் சிரம்பான் பட்டணத்தில் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அங்கு போய் தான் அதற்கான பாஸ் எடுக்க வேண்டும். அந்த  நேரத்தில் அவர்களிடம் எத்தனை  பேருந்துகள் இருந்தன என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் ஒரே ஒரு பேருந்தில் தான் நாங்கள் பயணம் செய்வோம். அந்த பஞ்சாபி ஓட்டுநர்  கூடவே வேலை செய்யும்  ஊழியரை "டேய்! நாரதமுனி!" என்று தான் கூப்பிடுவார்! நாரதமுனி என்றால் அப்போது தெரியவில்லை  பிறகு தான் அது நாரதர் என்று புரிந்தது! சரி, நாரதர் தான் எல்லா காலங்களிலும் இருக்கின்றனரே, என்ன செய்ய?

அப்போது இன்னொரு நிறுவனமும் ரந்தாவ்-சிரம்பான் வழியில் ஓடிக் கொண்டிருந்தது. அது "கணேசன்" பேருந்து நிறுவனம். இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்  அந்தக் காலத்திலேயே பேருந்து நிறுவனங்களை  நாம்  நடத்தியிருக்கிறோம் என்கிற பெருமை நமக்கு உண்டு.  இப்போதும் இந்த நிறுவனங்கள் நடப்பதாகவே நான் நினைக்கிறேன். அப்படியென்றால் நாடு முழுவதும் நமது நிறுவனங்கள்  இருந்திருக்கத் தானே வேண்டும்?


அறிவோம்:  புதிய முயற்சிகள் எப்போதுமே நம்மிடம் உண்டு. ஆனால் அதனை அடுத்த உயரத்திற்குக் கொண்டுபோகத்தான்  நம்மிடம் சரியான   வாரிசுகளை உருவாக்கவில்லை.  இந்த குறைபாடு இப்போதும் நம்மிடம் உண்டு.  ஒரே காரணம்: நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம்  என்கிற உயரிய நோக்கம் தான் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறது!



Wednesday, 23 April 2025

அடுப்புக்கரி, தேங்காய் எண்ணைய் (29)


தமிழ் நாட்டில் பல துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்களாம். இப்போது அல்ல.  அந்தக் காலத்தில். ஒரு வேளை கிராமப்புறங்களில் இப்போதும் இருக்கலாம்.

ஆரம்பகால தோட்டப்பாட்டாளிகளாக  இங்கு வந்த தமிழர்கள்  இந்த அடுப்புக்கரியை பல்துலக்க எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? அதுவும் வெள்ளைக்காரனின் கைவரிசையாக இருக்குமோ? அல்லது அவனும் அடுப்புக்கரியில் தான் பல்துலக்கினானோ?!

எப்படியோ நான் நீண்ட காலம் அடுப்புக்கரியில் தான் பல் துலக்கினேன். அதாவது அடுப்பில் கரி இருக்கும்வரை!  ஒரு வேளை நானே வேலைக்குப் போக ஆரம்பித்தபின்னர் நான் மாற்றிக்கொண்டேன் என நினைக்கிறேன். 

இதே கதைதான் தலைக்குத் தேங்காய் எண்ணெய்  வைப்பதும். அதில் ஓர் அசௌகரியம் உண்டு. எண்ணைய் முகத்தில் வழியும்.  அதனால்  நான் இடைநிலைப்பள்ளியில்  படிக்கும் போது  Hair Cream - க்கு மாற்றிக் கொண்டேன். நான் நீண்ட காலம் பயன்படுத்திய ஒரே கிரீம் என்றால் அது Bryl Cream மட்டும் தான். நான் அவ்வளவு எளிதில் எதனையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.

அந்த காலகட்டத்தில் எல்லாமே வெள்ளைக்கரர் தேசதிலிருந்து தான்  வெளிநாட்டுப் பொருள்கள் வரும். அதனால்  விற்பனையில் அவர்கள் பொருள்கள் தான் முதன்மையான இடம் பெரும். ஆனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருந்ததா என்பது தெரியவில்லை.



அறிவோம்:   பொருளாதாரத்தில்  நாம் பின்னடைந்த சமுதாயம் என்று பெயர் எடுத்துவிட்டோம்.  சீனர்கள் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே நாம்  தான் தொழிலில் முன்னணியில் இருந்தவர்கள். இப்போதும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. இப்போது தான் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தீவிரம்  காட்டுகிறோம். வாழ்க! வளர்க!

Saturday, 19 April 2025

"தேம்பா" சிகிரெட் (28)


 இயல்பாகவே நான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவன்.  ஏதோ எப்போதோ ஒன்று இரண்டு இருக்கலாம்/ அதுவும் கூட ஏதாவது விருந்துகளாக  இருக்கும்.

என் தந்தையார் சிகிரெட், பீடி, சுருட்டு  இப்படி ஏதாவது ஒன்று பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  ஆனால் பீடி அதிகம்.  என்னைச் சுற்றிப் பார்க்கும் போது  சிகிரெட் தான் அதிகம்.  எனக்குத் தெரிந்து இந்த தேம்பா சிகிரெட் தான் எல்லா இடங்களிலும்  ஒரே சிகிரெட் தான் எங்கும் எதிலும்.

உண்மையில் அந்த சிகிரெட்டின் பெயர் "Rough Rider".  இப்படி எல்லாம் பெயர் வைத்தால் அதை உச்சரிக்கவே  தனி வகுப்பு எடுக்க வேண்டும்!  நம்ம ஆளுங்க பார்த்தாங்க எதையோ துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடுகிறான் அதனால் Tempak Cigarette"  என்று வைத்துவிட்டார்கள்!  அந்த காலகட்டத்தில் இந்த தேம்பா சிகிரெட் மிகவும் பிரபலம்.  வேறு சிகிரெட் வகைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் தோட்டப்புறங்களில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் உயர் மட்டத்தினருக்கு ஏதாவது இல்லாமலா போகும்?   இருந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை. நானும் பார்த்ததில்லை. 

இந்த சிகிரெட்டுக்கு இணையாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால்  பீடிகளைத்தான் சொல்ல வேண்டும்.  விலை குறைவானது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  அதுவும் இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு பீடி தான் முதாலவது  இடம்!  அவர்களுக்குப் பழக்காமன ஒன்று அல்லவா!




அறிவோம்:   எதை எதையோ நாம் ஒழித்து விடுகிறோம். ஆனால் சிகிரெட்டுகளும் சரி மதுபானங்களும் சரி ஏன் ஒழிக்க முடிவதில்லை?  சிகிரெட் பிடிக்காதே என்று சொல்லுபவன் சிகிரெட் பிடிக்கிறான்! குடிக்காதே என்று சொல்லுபவன்  குடியில் மிதக்கிறான்!  அதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.  மனிதனின் ஆயுட்காலம்வரை இந்தத் தீமை  தொடரத்தான் செய்யும்.

 

Wednesday, 16 April 2025

தோட்டம் விட்டு தோட்டம் மாற (27)


 பொதுவாவே தோட்டம்விட்டு இன்னொரு தோட்டம் மாறிப் போவது என்றால்  இப்போது போல வாகன வசதிகள் இல்லாத காலம் அது. அப்படி ஒன்றும்  பெரிய அளவில் சாமான்கள் இருக்கப்போவதில்லை.. என்றாலும்  குறைந்தபட்சம் துணிமணிகள் வைப்பதற்கு  ஒரு பெரிய டிரங்     (Trunk}பெட்டியாவது இருக்கும். பொக்கிஷங்களை வைக்கும் பெட்டி அது தான்!

எங்களுக்கு வேறு வசதிகள் இல்லாத்தால்  ஒரு மாட்டு வண்டியைத் தான் ஏற்பாடு செய்தார் என் தந்தை. அது ஒரு மலாய்க்காரருடைய மாட்டுவண்டி. அந்த வண்டியின் மூலம் தான் எங்களது சட்டிப்பானைகளைத்  தூக்கிக்கொண்டு எங்களையும் அடைத்துக் கொண்டு வேறு தோட்டத்திற்கு மாறிப்போனோம்!

இந்த மாட்டுவண்டிகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். இந்த மாட்டுவண்டிகள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள்  தாங்கள் செய்யும் அத்தாப்புக்களை (கூரைகளுக்குப் பயன்படுத்த) விற்பனைக்குச் சிரம்பான் நகருக்குக் கொண்டு செல்வார்கள். இரவும் பகலும் பயணம் செய்வார்கள். ஐந்தாறு வண்டிகளாக ஒன்றுசேர்ந்து பயணம் செய்வார்கள்.  அதன் பின்னர் அவர்கள் கொண்டு செல்லும் அத்தாப்புகளை விற்றுவிட்டு  வீடு திரும்புவார்கள். அத்தாப்புகள் வீட்டுக் கூரைகளுக்குத்தான் என்றாலும்  தோட்டங்களில் மாட்டுக்கொட்டைகளுக்கும் பயன்படுத்தாவர்கள்.

நான் முதலில் பார்த்தவை மலாய்க்காரர்களின்  மாட்டுவண்டிகளைத்தான். பின்னர் றான் பட்டணங்களில்  பஞ்சாபியர் நடத்தும் மாட்டுவண்டிகளைப் பார்த்திருக்கிறேன். பஞ்சாபியரை நினைக்கும் போது  பசு மாடு, மாட்டுவண்டி - அதுவே அவர்களின் முன்னேற்றமாக அமைந்தது.



அறிவோம்:  எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக்கொள். அதற்காகவே உன்னைத் தயார்படுத்து.  அதுவே தலைசிறந்த உருவாக்கம்.

ரத்தன் டாட்டா

Saturday, 12 April 2025

என் நண்பன் சந்திரன் (26)



 

நான் செயின்பால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது  அப்போது பள்ளியில் புதிதாக  வந்து சேர்ந்தான் சந்திரன். அவனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும்  அவன் தந்தையார் நாங்கள் வசித்த செண்டாயன் தோட்டத்திற்கு வேலை மாற்றலாகி  மருத்துவ உதவியாளராக வந்திருந்தார். 

ஒரே பள்ளியில் படித்ததால் நாங்கள் இருவரும் ஒன்றாகவே போவோம், ஒன்றாகவே வருவோம். எனக்கு ஆங்கிலம் வராது அதனால் அவன் தமிழில் தான் பேசுவான். அவன் சட்டையில் எப்போதும் பேனா மையின் கறை இருந்து கொண்டே இருக்கும். "டேய் சட்டையில் மசி ஊத்திரிச்சி. அப்பா பார்த்தால் அடிப்பார்"  என்று முணகிக் கொண்டே வருவான்.  மசி என்றால் மை என்றே நினைக்கிறேன்.

அவனது தந்தை M.G.M.  நாயர். உண்மையில்  நல்ல மனிதர். பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத் தெரிவார். அவன் வீட்டுக்கு வாடா என்பான்.  கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் ஒரு நாள் போனேன். அவன் வீட்டில் யாரும் இல்லை. அப்பனும் மகனும் தான். அவனின் அப்பா  என்னைப் பார்த்து "டேய் இந்தா இதைப் படி" என்று பள்ளிப் புத்தகத்தைக் கொடுத்தார். எனக்குத்தான் படிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லையே! படித்தேன். அவர் மகனுக்கு ரோத்தானில் ஓர் அடி கொடுத்து  "பார்! கூலிக்காரன்ட மகன் எப்படி படிக்கிறான். உன்னால மட்டும் ஏண்டா முடியல?" என்று திட்டினார்.

மகன் கூறிய மசி என்ற வார்த்தையும், அப்பா கூறிய கூலிக்காரன்ட மகன்  என்கிற வார்த்தையும்  என்னால் இன்னும் மறக்க முடியவில்லை! ஒன்றுமட்டும் தெரிகிறது.  மேலிடத்தில் இருந்தவர்கள்  கீழ்மட்டத்தில் உள்ள தொழிலாளர்களைக் கூலிக்காரன் என்று  தான் கூறி வந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் நான் தோட்ட அலுவலகத்தில்  வேலை செய்த போது நாயர் அங்கேயும் மருத்துவ உதவியாளராக வந்திருந்தார்!  நாயர் உண்மையில் நல்ல மனிதர். அநீதி என்றால் தட்டிக்கேட்கும் குணம் உள்ளவர். அதனால் அவர் எங்கேயும் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை. என்னை எப்போதும்  சுஸா சுஸா (Souza) என்று தான் அழைப்பார்! ஒரு வேளை என்னை அவர் மலையாளி என்று நினைத்திருக்கலாம்!  என் நண்பன் சந்திரன் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான். அங்கு முகாமில் இருந்தபோது  தவறுதலாகச் சுடப்பட்டு இறந்து போனான். அதன்பின் நாயர் ஊருக்குத்  திரும்பிவிட்டார்.



அறிவோம்:   ஏழைகள்  முன்னேற்றம் அடைய கல்வி மட்டும் தான்  மிக வலிமையான ஆயுதம்.  கல்வி மட்டும் தான் பதவியில் உயர்ந்த மற்ற  அதிகார வர்க்கத்தினரோடு  நம்மைச் சமமாக உட்காராவைக்கும். தோட்டப்புற பின்னணியைக் கொண்ட நமக்கு அடுத்தக்கட்ட நகர்வு கல்வியை நோக்கித்தான் இருக்க வேண்டும்.


Wednesday, 9 April 2025

என் ஆங்கில ஆசிரியர் (25)

 

எனது பள்ளி நாட்களில் நான் நினைவில் வைத்துக்கொள்வது போல எந்த  ஓர் ஆசிரியரும் அமையவ்வில்லை. அதற்குக் காரணம் வாய்த்த ஆசிரியர்கள் எல்லாம்  பெரும்பாலும் சீனர்கள்  என்பதாகக் கூட இருக்கலாம்.  ஆங்கிலம் பேச முடியவில்லையே  என்கிற காரணமாகவும் நானே ஒதுங்கி இருக்கலாம்.  ஆங்கிலம் எப்படி நம்மை ஒதுக்கி விடுகிறது பார்த்தீர்களா?  

இடைப்பட்ட காலத்தில் அதாவது எனது நான்காம் பாரத்தில் ,அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.  வந்தார் ஓர் ஆங்கில ஆசிரியர். இளைஞர். ஒரு பஞ்சாபி.   அவர் பேசுகின்ற ஆங்கிலத்தை அத்தனை எளிதில் புரிந்த கொள்ள முடியாது.  கடுமையான (Bombaastic) வார்த்தைகளப் பயன்படுத்துவார்..  ஒவ்வொன்றுக்கும் ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது!

அடிக்கடி கட்டுரைகள் எழுத வைப்பார். எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. அவரைப் போல கடுமையான, எளிதில் புரியாத வார்த்தைகளைப்  பயன்படுத்தும்  பழக்கம் வந்துவிட்டது. அதனை எனது கட்டுரைகளில் காண்பித்தேன். அதற்கென்று புத்தகங்களைத்  தேடினேன். நூலகத்தில்  Wuthering Heights  என்னும் புத்தகம் கைகொடுத்தது.  ஒன்றுமே புரியவில்லை! ஆனாலும் வாசித்து முடித்தேன். எனது கட்டுரைகளில் புதிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஆசிரியருக்கு  என் எழுத்துக்கள்  அவரைக் கவர்ந்துவிட்டன. வகுப்பில் என்னுடைய கட்டுரையை வாசித்துக்காட்டி என்னைப் பெருமைப் படுத்தினார். அப்போதிருந்தே என்னை நானே மாற்றிக் கொண்டேன்.   எனது பள்ளிவாழ்க்கையில் நான் மறக்க முடியாத  ஓர் ஆசிரியர் என்றால்  ரஞ்சிட் சிங்  எனகிற அந்த சீக்கிய ஆசிரியர் தான்.  அதன் பின் என் பாதையே மாறிவிட்டது. பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டேன். கொஞ்சம் பயம் தெளிந்தது.




அறிவோம்:    ஆங்கிலம் தெரிந்தால் உலகையே வலம் வரலாம்  என்பது  உண்மை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளில் பல பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. அங்கெல்லாம் ஆட்சிமொழியாக  பிரஞ்சு மொழி தான்  பயன்பாட்டில் உள்ளது. குறைந்தபட்சம் இந்த இரண்டு மொழிகள் தெரிந்தால்  உலகை வலம்வர பிரச்சனை இருக்காது.


Sunday, 6 April 2025

நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் (24)



நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் என்று எடுத்துக் கொண்டால் அது  கதோலிக்க திருச்சபயின்  வெளியிடான Malayan Catholic News அல்லது (MCN)  என்று சுருக்கமாகச் சொல்லுவார்கள். அது ஒரு மாத இதழாக வெளிவந்தது. அதன் விலை 15 காசுகள் என நினைக்கிறேன்.ஒவ்வொரு மாதமும் பள்ளியில் கொ9ண்டுவந்து விற்பார்கள்.  இப்போது இந்த இதழ் ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் சீனம்  தொண்ணூறு விழுக்காடு ஆங்கில இதழாக  Herald என்னும் பெயரில்  வெளிவந்து கொண்டிருக்கிறது.

நான் எத்தனையோ தமிழ் இதழ்கள் படித்தாலும் ஆங்கிலத்தில் எனது ஆரம்பம்  அங்குதான் துவங்கியது.  அது என்னவோ பத்திரிக்கைகள்  மீது எனக்கு ஒர் அதீத  ஈடுபாடு என்றும் உண்டு. நான் இடைநிலைப் பல்ளியில் பயிலும் போது ஏகப்பட்ட பத்திரிக்கைகளை நான் படிப்பதுண்டு.புரிகிறதோ இல்லையோ முதல் பக்கத்திலிருந்து  கடைசிப் பக்கம்வரை படித்து விடுவேன்.

நான் வாசிப்பதில் ஒரு தீவிரவாதி! எதையும் படிப்பேன். எல்லாவற்றையும் படிப்பேன். வாசிப்பதில் எனக்கு வஞ்சனையே இல்லை!  என்னிடம் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் என் காசில் வாங்கியவை. எல்லாமே அறுபது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. பல புத்தகங்கள். 



அறிவோம்"    பயஙகரமான போராட்ட  ஆயுதங்கள் எவை என்று  கேட்கப்பட்டபோது  மார்ட்டின் லூதர் கிங்  "புத்தகங்கள் தான்"  என்றாராம்.
   



Monday, 31 March 2025

அடையாளக்கார்டுகள் எப்படி?! (23)


ஆரம்பகால  அடையாளக்கார்டுகள்  எப்படி இருந்திருக்கும்? மேலே உள்ள படத்தில் உள்ளது போல்  இருந்திருக்குமோ?  என்னால் உறுதிபடுத்த முடியவில்லை.  இது சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். காரணம் ஒரு புகைப்படம் மற்றும் நமது விபரங்கள். அடங்கிய ஓர்  அட்டை. அவ்வளவுதான்.  சரியாக இருக்கும் என நம்புகிறேன்.  என்னுடைய அடையாளக்கார்டும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.  அதை நான் நான்காக மடித்து வைத்திருந்ததால்  கொஞம் தடுமாற்றம்.

நான் முன்பே குறிப்பிட்டது போல பதிவு இலாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த அந்தோணி என்கிற  அண்ணன் அவரே எனக்கு  அடையாளக்கார்டு எடுத்துக் கொடுத்தவர். அவரும் அந்தத் தோட்டத்தில் பெற்றோர்களுடன் தங்கியிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குப்  போனதில்லை. போகாமலே அனைத்தும் நடந்தது!

இதைவிட வேறொரு அதிசயத்தையும் சொல்ல வேண்டும். குடியுரிமையைப்பற்றி  நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒன்று உண்டு என்கிற விஷயம் கூட தெரியாது. அப்போது பரிட்சை முடிந்த நேரம். வகுப்பில் வெறும் அரட்டையைத் தவிர வேறொன்றுமில்லை.

என்னுடைய நண்பர் இராமன் என்னைவிட ஓரிருவயது மூத்தவர். கொஞ்சம் விபரமானவர். இன்னொரு நண்பர் குணசேகரன். அப்போது இராமன் "வாங்கடா!போய் பிரஜாவுரிமை எடுப்போம்" என்று எங்களைக் கூப்பிட்டார்.  பிரஜாவுரிமை என்றால் என்னவென்று தெரியாது! சரி என்ன தான் நடக்கும் பார்ப்போமே என்று நாங்கள் முன்று பேருமே அந்த அலுவலகத்திற்குப் போனோம். அங்கு ஒரு சட்டைக்காரர் உட்கார்த்திருந்தார். பெயர் Especkerman.  அந்தப் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது!  மூன்று பேர்களுக்கும்  மூன்று பேப்பர்களைக் கொடுத்தார்.  வலது கையைத் தூக்கிக் கொண்டு  படிக்கச் சொன்னார்.  மூன்று பேரும் சேர்ந்து படித்தோம். மலாய் மொழியாகத்தான்  இருந்திருக்க வேண்டும். அது சத்தியபிரமாணம் என்று நினைக்கிறேன். அங்குள்ள ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார். ஒரு பத்து நிமிடம்  கழித்துக் கூப்பிட்டார்.  எங்கள் மூன்று பேர் கையிலும் பிராஜாவுரிமை! அவ்வளவுதான். முடிந்தது! அதன் மகிமை அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது!

என் தந்தையார் ஒரு நெகிரி செம்பிலான் பிரஜை.  அவரும் பிரஜாவுரிமைக்காக எங்கும் அலையவில்லை.  முன்னாள் ம.இ.கா தலைவர் துன் சம்பந்தன்  அவர்களின் ஏற்பாட்டில் எல்லாத் தோட்டங்களிலும் தோட்ட அலுவலகத்திலேயே  பிரஜாவுரிமை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.  எங்கள் குடும்பத்தில் யாரும் பிரஜாவுரிமைக்காக  எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை.







அறிவோம்:   இப்போதெல்லாம் புத்தகங்கள் படிப்பவர் குறைவு.  விபரம் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்கள். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை   எப்படியாவது  உயர்த்திக் கொள்வார்கள். புத்தகங்களில் கிடைக்கப்பெறுகின்ற சிந்தனைகள், அறிவுரைகள் அனைத்தும் அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டுகின்றன. நமது நாட்டில், அதுவும் குறிப்பாக பெண்கள் வாசிக்கின்ற பழக்கத்தை  மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.



Sunday, 23 March 2025

என்ன தான் குறிக்கோள்? (22)

சிறு வயதிலிருந்தே எனக்கோர் குறிக்கோள் இருந்தது.  ஒரு வேளை அது என் தந்தையாரிடமிருந்து வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

நான் படிக்கும் போதே,   நான் பெரிய ஆளாக வரவேண்டும்  என்று என் தந்தையார்  கனவு கண்டார்.  அவர் படிக்காதவர்.  அப்படி என்ன பெரிய ஆள்? அது அவருக்கே தெரியாது!  அவருடைய உலகம் எல்லாம் தோட்டம் மட்டும் தான். அவருக்குத் தெரிந்த ஆள் தோட்டங்களில் வேலை செய்யும் கிராணிமார்கள் தான் பெரிய ஆள். அதனால் தான் நான் என் தாயாருக்கு உதவி செய்யக் கூட அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப் போனால்  தோட்டத்தில் பால்மரம் சீவுகின்ற ஆர்வம்   வந்துவிடும் என்று நினைத்தவர் அவர்.

ஆனால்  நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. எனக்கு அலுவலக வேலை தான்  இலக்கு.  அதற்கு ஆங்கிலம் அவசியத் தேவை  என்பதை  நான் அறிந்திருந்தேன். அதனால் கல்வியில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது  ஆங்கில மொழிக்குத்தான்.நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அது அலுவலகம் மட்டுமே தவிர வேறு வேலைகளில் ஈடுபாடு இல்லை.

எனக்குக் கேரள மலையாளிகள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.  ஒரே பிரச்சனை. கொஞ்ச தலைக்கனம் அதிகம்! அரைகுறை ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றால் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடம் இருந்த ஒற்றுமையினால் அவர்கள் முன்னேறினார்கள் என்று கூறலாம்.

அவர்களுடன்  நான் முதல் பதின்மூன்று அண்டுகள்  வேலை செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல! என் நண்பர் ஒருவர் சொன்னார்: "நீ அவர்களுக்குக் கிழே இருந்தால்  உன்னைப் பிழிந்து எடுத்து விடுவார்கள்! அவர்கள் உனக்குக் கீழே இருந்தால்  தாங்குத் தாங்கு என்று தாங்குவார்கள்!" உண்மை தான். அவர்களின் குணம் அப்படித்தான்!

எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது.  மலாக்காவில் ஒரு வங்கியிலும் வேலை கிடைத்தது.  என் தாயார் 'ரொம்ப தூரம்" என்று சொல்லி  அனுமதிக்கவில்லை. அதனால் தோட்ட அலுவலகத்திலேயே  ஒட்டிக்கொண்டேன்!


:

 அறிவோம்:போனால் வராது என்பது நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதோ இந்த வினாடி இக்கட்டுரையைப் படிக்கிறீர்கள். ஓர் ஐந்து வினாடிகள் ஆகியிருக்கும். போன இந்த வினாடிகள்  மீண்டும் கிடைத்துவிடுமா? போனது போனது தான்! அதனால் தான் வினாடி, நிமிடம் பார்த்து வேலைகளைச் செய்யுங்கள் என்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். நேரத்தைக் கவனிக்கவில்லை என்றால்  குப்பைத்தொட்டி தான் நமக்கு அடைக்கலம்!

Thursday, 20 March 2025

இது தான் 'என்' தோட்டம்! (21)


பிறந்து வளர்ந்த தோட்டங்களை 'நம்' தோட்டம் என்று சொந்தம் கொண்டாடுவதை   நான் விரும்புவதில்லை!

ஆனால் என்ன செய்ய? அப்படி ஒரு சொந்தம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. நான் வளர்ந்த தோட்டம் என்றாலும் இப்போது அந்தத் தோட்டமே இல்லை. செனவாங் தோட்டமே  இப்போது  பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் செயல்படும் பெரும் தொழில்  நகரமாக,  பெரும்  தொழிற்பேட்டையாக மாறிவிட்டது.

நாங்கள் சுற்றித்திரிந்த இடங்கள், என் தாயாருக்காக உதவிக்குப் போன இடங்கள், கோயில்கள், அந்த செட்டியார் கடை, சோங்பாங் சீனர்கடை, தோட்ட வீடுகள், தோட்ட சிப்பந்திகளின் வீடுகள்,  வெள்ளைக்கார தோட்ட நிர்வாகிகளின்  வீடுகள் ஒன்றையுமே காணோம். இருந்ததற்கான அடையாளமே இல்லை!  என் காலத்திலிருந்த  அந்த  இளம் பட்டாளம் ஒருவருமே இல்லை!

எனக்குப் பொது அறிவைக் கொடுத்த அந்த இளம் பட்டாளம்  காணாமற் போயிற்று! பெரும்பாலும் குடித்துச் செத்தவன் தான் அதிகம்.  தோட்டத்தின் அடையாளமே 'சம்சு'  தானே. குடி இல்லாமல் மறத்தமிழனால்  வாழ முடியுமா? எப்படியோ எங்களுக்குப் பின் வந்த சமுதாயம்  ஓரளவு விழிப்புப் பெற்றதே  என்பதில் மகிழ்ச்சி  தான்.



அறிவோம்:  காலம் ஓடுகிறது, நாம் நடக்கிறோம்.  அதனால் தான்,  நம்மால் முன்னுக்கு வர முடியவில்லை.

தமிழ்வாணன்


Monday, 17 March 2025

சினிமா தியேட்டர்கள் என்ன ஆயின?(20)

அன்று: சபையார் தியேட்டர்  இன்று: துணிக்கடை

நான் படித்த காலத்தில் இருந்த சினிமா தியேட்டர்கள்  இன்று ஒன்றுகூட  இல்லை.

அன்று மிகப்பிரபலமாக விளங்கிய அல்லது  தமிழ்ப்படங்களின் காவலன் என்றால்   அது இந்த சபையார் தியேட்டர்  தான். முன் வரிசை என்றால் 40 காசு டிக்கெட். அதற்குத்தான் முதலிடம், அடிபிடி சண்டை எல்லாம்!

தோட்டப்புறங்களில் பெண்கள்யாரும் படம் பார்க்கப் போனால் என் தாயார்  கலந்துகொள்வார். நானும் சேர்ந்து  கொள்வேன்! என் தந்தையார் படம் பார்த்ததாகச் சரித்திரம் இல்லை.

இந்த நேரத்தில் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.பக்கத்து வீட்டில் சின்னையா என்கிற பெரியவர் இருந்தார். இவர் வேலை முடிந்ததும்  சிரம்பானுக்குச்   சைக்கிளில் கிளம்பிவிடுவார். ஒன்று கள் குடிக்க இன்னொன்று படம் பார்க்க! இவர் பார்க்காத படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.  அத்தோடு  வரப்போகும் படங்களுக்கான  விளம்பரம் அதனையும்  கையோடு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தான் பார்த்த படங்களின் பெயரையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில்  எழுதிவிடுவார்!  அந்த பட விளம்பரங்களை ஒரு சாக்குப்பையில்  போட்டு வைத்திருந்தார்!  ஒரு நாள், அவர் பார்த்த படங்கள் அந்த விளம்பரங்கள் அனைத்தையும் என்னிடம்   காட்டினார்!  அன்று தொலைகாட்சி, வானொலி  இல்லாத காலங்களில்  நம் மக்கள் எப்படியெல்லாம் பொழுதைப் போக்கியிருக்கிறார்கள்  பார்த்தீர்களா?  இப்போதும் இருக்கலாம் யார் கண்டார்?

நான் எல்லாகாலங்களிலும்  விரும்பிப் பார்க்கும் படங்கள் என்றால் அது ஜெமினி கணேசன் நடித்த  படங்கள் தான். அந்தக் காலத்தில் அவர் நடித்த படங்கள்  அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் நடித்த "மனம்  போல  மாங்கல்யம்"  படத்தைப் பார்த்திலிருந்து  நான் அவரது இரசிகன்! ஆனால் ஒன்று,  பார்ப்பதோடு சரி!  அதற்கு மேல் இல்லை!






அறிவோம்:  நோன்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான். இஸ்லாமியர்களின் நோன்பு என்பது காலை மணி ஏழு மணியிலிருந்து  மாலை ஏழு மணி வரை. மாலை ஏழு மணியிலிருந்து காலை ஏழு மணி வரை சாப்பிட தடையேதுமில்லை.மலேசிய இஸ்லாமியரிடையே இந்த நோன்பு காலத்தில் தான் அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன என்று  குப்பைகள் அள்ளும் நிறுவனமான "இண்டா வாட்டர்" கூறுகிறது. கிறிஸ்துவ மதத்திலும் 40 நாள்கள் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. முக்கியமாகச் சொல்லப்படுவது புலால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தான். காலை மாலை நோன்பு  உண்டு. வெள்ளிக்கிழமைகளில் நிச்சயமாக புலால் உணவுகள் வேண்டாம். இந்து மதத்தில் தான் மிகக் கடுமையான நோன்பு முறை உண்டு. காலையிலிருந்து  அடுத்த நாள் காலை வரை  பட்டினி போட வேண்டும். இதைவிட இன்னும் கடுமையான  விரதங்கள்  எல்லாம் உண்டு.  நமது நோன்பு பிரபலமடையவில்லை என்றால்  அரசாங்கத் தலையீடு இல்லை!

     

Thursday, 13 March 2025

காணாமற் போன பள்ளிகள்! (19)

 

                 சீக்கியர்களின் கோயிலானா, குருத்துவாரா, சிரம்பான் (2024)

சிரம்பான் பட்டணத்தில்  நுழையும் போதே  பள்ளிக்கூடங்களாகவே இருக்கும்.

நான் படித்த செயின்போல் பள்ளி அதற்கு மேல் குருத்துவாராவில் பஞ்சாப் மொழி பள்ளிக்கூடம்,  ஜாவா லேன் தமிழ்ப்பள்ளிக்கூடம் இந்தப் பக்கம்  கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்ட கான்வெண்ட் ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கொஞசம் தள்ளிப்போனால் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி,  இன்னும் கொஞ்சம் தள்ளி ஆங்கிலோ சைனீஸ் ஆங்கிலப்பள்ளி (ACS)  - இப்படி பள்ளிகளாகவே இருந்தன.

இன்றைய நிலை என்ன? நான் படித்த பள்ளியை இடித்துவிட்டு  Wisma Punca Mas  என்கிற மாபெரும் கட்டிடத்தைக்கட்டி இப்போது அது  பாழடைந்து கிடக்கிறது! குருத்துவாராவில் பஞ்சாப் பள்ளிக்கூடம் போதுமான ஆதரவு இல்லாமல்  அப்போதே  மூடப்பட்டு விட்டது. கான்வென் பள்ளி  இப்போது  மரண குளமாக  மாறிவிட்டது! விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இலங்கைத் தமிழர்களின்  வெறுப்புக்கு ஆளாகி  அவர்கள் கல்யாண மண்டபமாக  மாற்றி விட்டனர்! இங்கு மட்டும அல்ல மலேசியாவில் அவர்கள் நடத்திய அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிட்டனர்! என்ன வெறுப்போ?

சிரம்பான் பட்டணத்திற்குள்  நுழையும் போதே KGV பள்ளிக்கூடமும்  ரயில்வே ஸ்டேஷனும்  தவிர்க்க முடியாதவை. அன்றைய ரயில்வே  ஸ்டேஷனில் மணிக்கூண்டும் இருக்கும். சிரம்பான் பட்டணத்தில்  நேரத்தைப் பார்க்க  அது ஒன்று தான் அடையாளம்.  காலை நேரத்தில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்  நேரம் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது கைக்கடிகாரம் எந்த மாணவனிடமும்  இருப்பதற்கான வாய்ப்பில்லை. இப்போது மணிக்கூண்டு இருந்ததற்கான  அடையாளமே இல்லை. காரணம் கைக்கடிகாரம் கட்டாத கைகளே இப்போது இல்லை!



அறிவோம்: "உன்னால் முடியாது என்று சொல்வதை வேறுயாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது.  வேறு யாராலும் முடியாது என்றால் உன்னால் மட்டுமே முடியும்."

பேராசிரியை பர்வீன் சுல்தானா


Monday, 10 March 2025

Satu Makan Dua Mahu! (18)

செயிண்ட்போல் பள்ளியில் நான்  படித்த காலத்தில்,  காலை ஓய்வு   நேரத்தில்,   ஒரு பெரியவர் கரிபாப் வியாபாரம் செய்ய வருவார்.  அவர் பயன்படுத்திய  வக்குளின்  (கூடை)  மாதிரி தான் மேலே கொடுக்கப்பட்டவை. பெரிய வக்குளில் கரிபாப்புகளைத்   தோளில் சுமந்து கொண்டு வருவார். 

எனக்குக் கிடைப்பதோ ஒரு நாளைக்குப் .  பத்து காசு. அதில் ஐந்து காசு கரிபாப்,  ஐந்து காசு ஐஸ் தண்ணீர். அவ்வளவு தான்.  வீடு போய் சேரும்வரை அது தாங்கும். அப்போது சாப்பிட்ட அந்த கரிபாப் இப்போது ஒரு  வெள்ளி விற்கிறது!  விலை தான் கூடுதலே தவிர சுவையில் ஏமாற்றம்.

பள்ளியில் விற்ற பின்னர் சிரம்பான் பேருந்து நிலையத்தில் "கரிபாப், சத்து மாக்கான் டுவா மௌ!" என்று முழங்கிக் கொண்டிருப்பார்!  எப்போதுமே அவருக்கு நல்ல வியாபாரம் இருக்கும்.

ஒரு காலத்தில் நம் தமிழர்கள் செய்து வந்த வியாபாரங்கள்  பின்னர்  சீனர்களின் கைகளுக்குக் கைமாறியது எப்படி  என்பது புரியாத புதிர். இப்போது மெல்ல மெல்ல நம்மவர்களும் மீண்டும்  நமது வியாபாரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வருகின்றனர்  என்பது நல்ல செய்தி.  எல்லாகாலங்களிலும் வாங்கிச் சாப்பிடும் சமுகமாகவே  இருப்பது போல் விற்கும் சமூகமாகவும் மாறும் காலம்  தொடங்கிவிட்டதே என்பதில் மகிழ்ச்சி.



அறிவோம்:  வலுவற்ற ஒரு சமூகம் அல்லது ஏழ்மையில் உழலும் ஒரு சமூகம்  அடுத்த வலுவான நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள  ஒரே வழி கல்வி மட்டும் தான். ஏழ்மையிலிருந்து  விடுபட கல்வியே சிறந்த ஆயுதம். கல்வி எப்போதும் நம்முடன் இருக்கும். மற்றவை எதுவும் நிரந்தரமில்லை.

Friday, 7 March 2025

முதன் முதல் பயன்படுத்திய பேனா! (17)

பள்ளியில் நாங்கள் பேனாக்களைப் பயன்படுத்த ஆரம்பித்த போது மையைப் பேனாக்களில் தொட்டுத்தொட்டு  எழுத வேண்டும். இது தான் ஆரம்பம். அடுத்த கட்டம் தான்  மை நிரப்பிய பேனாக்கள். (Fountain Pen)  இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எப்படியாவது  சட்டையில் மை கொட்டிவிடும்.

அதன் பின்னர்   பலவித பேனாக்கள்.  அப்போது பேனாக்களில்  நமது பெயரைப் பொறிப்பது ஓர் அற்ப சந்தோஷம். அதாவது  நான் பைலட் (Pilot) பேனா வைத்திருந்தேன். உடனே என்னுடைய பெயரை அதில் பொறிப்பது!  அப்போதைய  மாணவரிடேயே  இருந்த வழக்கம்.  எவனும் திருடப்போவதில்லை. என்ன செய்ய, கூட்டத்தோடு  கோவிந்தா! அவ்வளவு தான்!  சீனர்களின் வியாபார யுக்தியே யுக்தி!


                                                       

பெரும்பாலும் முதலாம் படிவம் வந்துவிட்டாலே சாதாரண புத்தகப் பைகளைப் (தோளில் தொங்கும்) பயன்படுத்த முடியாது.  புத்தகங்கள் அதிகரிக்கும் போது இந்த வகையான  ரோத்தான் பைகள்தான் தேவைப்படும்.  எல்லா மாணவர்களும்  இந்தப்பைகளைப் பயன்படுத்தித் தான்  புத்தகங்களைக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இடைநிலைப்பள்ளிகளில் பயில்கிறீர்கள் என்பதற்கு இது தான் அடையாளம்! நீண்ட சிலுவார் அணிவதும் இப்போது தான். மழை காலத்திற்கெல்லாம்  புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.



அறிவோம்:    உலகை மாற்ற  நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.

நெல்சன் மண்டேலா

Thursday, 6 March 2025

கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்! (16)


தமிழிலே இப்படி ஒரு அனுபவமொழி  உண்டு. கண் கண்டதைப் படிப்பவன்  பண்டிதன் ஆவான்  என்று சொல்லுவார்கள்.

அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். எனது நாட்டம் துப்பறியும் கதைகள், சினிமா இதழ்கள், தமிழ் நேசன், தமிழ் முரசு, தமிழ் மலர்,  புதிது புதிதாக  வரும் மாத இதழ்கள், ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு என்று அனைத்தையும் படிப்பேன். தமிழ் முரசு நாளிதழில் வெளியான  இராதா மணாளனின்  "பாண்டியன் திருமேனி" தொடர், குமுதம் வார இதழிலில் வெளியான சாண்டியனின் "கடல் புறா:",  இந்தியன் மூவிஸ் நியுஸ் மாத இதழில் வெளியான, தமிழ்வாணனின் "மணிமொழி என்னை மறந்துவிடு"  -உள்ளூர் வார மாத இதழ்கள். இப்படி பரவலான வாசிப்பு ஏற்பட்டுவிட்டது.

இப்படி நான் படித்த பத்திரிக்கைகளில்  நானே காசு போட்டு வாங்கிய பத்திரிக்கை என்றால் அது தமிழ்வாணனின் வார இதழான கல்கண்டு மட்டுமே! அதன் விலை அப்போது 15 காசு என்று நினைக்கிறேன். எனது பட்ஜெட்டில் அதற்குமேல்  இடமில்லை! சினிமா இதழ்களை  இதுவரை நான் காசு போட்டு வாங்கியதில்லை. அது போலத்தான் துப்பறியும் கதைகளும்! 

தமிழ் நேசன் நாளிதழை பத்து வயதில்  படிக்க ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்கள் மேல் படித்திருக்கிறேன்.  தமிழ் வாணனின் "கல்கண்டு" வார இதழை பதினாறு வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இப்படியெல்லாம் நான் படித்தாலும் பள்ளி பாடங்களை நான் மறக்கவில்லை. அப்போது அஞ்சலில் படிக்கும் வசதிகள் இருந்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த Stamford College  மிகவும் பிரபலம். அங்கிருந்து நான்  பல  பாடங்களை எடுத்திருக்கிறேன். என்ன பயன்? ஓர் ஆசிரியரின் துணை இல்லாமல் படிப்பது அனைத்தும் வீண்! ஆங்கிலம் எனக்கு முக்கியத் தேவையாக இருந்ததால்  அதன் தொடர்பில் நிறைய அஞ்சல் வழி மூலம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு வெளிநாடுகளில் பேனா நண்பர்கள் அதிகம். நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரே காரணம் தான். ஆங்கிலத்தை தவறவிடக் கூடாது என்பது தான்.


அறிவோம்:   அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அண்ணா நூல் ஒன்றினைப் படித்துக் கொண்டிருந்தார். அண்ணா மருத்தவரை அழைத்து  தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர்,  அறுவை சிகிச்சையை ஒத்திப்போடச் சொன்னாராம்.  அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடந்ததாம்.


Tuesday, 4 March 2025

செனவாங் தோட்டம் (15)



மூனாங் கட்டையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம். வானொலியில் நேயர் விருப்பம் என்பது அந்தக் காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்தது.  எனது  நண்பரின் தந்தையார்  எம்.கே.தியாகராஜபாகவதரின் தீவிர இரசிகர்.  அவர் பாகதவர் பாடிய "பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்"  பாடலை  கேட்க ஆசை.  அவர் ஓரு கடுதாசியை எடுத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று "இந்தப் பாடல் உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பாவம் அப்பாவி மனிதர்! பின்னர் அவர் எத்தனை நேயர்கள் கேட்டார்கள் என்கிற பட்டியலை அனுப்பி வைத்ததாக அவரின் மகன் என்னிடம் சொன்னார்! அப்போது எங்களிடம் வானோலி பெட்டி இல்லை. அதனால்  அவரின்  ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய எனதுபதினைந்தாவது வயதில்  எனது குடும்பம் செனவாங் தோட்டத்திற்கு மாறியது. எல்லாம் எனது கல்வியின் பொருட்டு தான்.  இது பள்ளி போக வசதியான இடம்.  எனது வயது ஒத்த நண்பர்களும்  இருந்தனர். 

இது ஒரு வேறொரு உலகம்.  கல்விக்கு யாரும் பயன்படவில்லை. சினிமா பத்திரிக்கைகள், துப்பறியும் கதைகள் - இவைகள் தான் முதலிடம். அத்தனை சினிமா இத்ழ்களையும், துப்பறியும் கதைகளையும் படித்திருக்கிறேன்.  அத்தோடு திராவிட இதழ்கள்.  கவனச் சிதறல்கள் அதிகம். 

என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யாரும் இல்லை.  கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் இந்த தோட்டாமே என் கண்ணைத் திறந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் பொது அறிவு கிடைத்தது. என்னிடம் எனது கம்போங்  எது என்று கேட்டால் அது செனவாங் தோட்டம் என்று தான் சொல்லுவேன். அது தான் இன்றளவும் வேரூன்றி விட்டது.


அறிவோம்:  நமது உடம்பில் உடைக்கமுடியாத  எலும்பு எதுவென்று தெரியுமா? எது எதுவோ ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த எலும்பு மட்டும் ஞாபகத்திற்கு வராது.   அது தான் நமது தாடை எலும்பு. நமது உடலில் உடைக்க முடியாத மிக உறுதியான  எலும்புகளில் அதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.


Thursday, 27 February 2025

செயின் போல் பள்ளி (14)




                        வனத்து சின்னப்பர் சிற்றாலயம்,தேர்ட் மைல் எஸ்டேட்
                                                               எஸ்டேட் நுழைவாயில்

நான் 
சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்  எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட்  (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.

அவர்கள் நோக்கம் சரியாக இருந்தாலும் குறைந்தபட்சம் நான் இரண்டு மைல் தூரம் நடந்து போக வேண்டும்! அதுவும் காட்டுவழியில்! நல்ல வேளை அப்போது  என்னோடு அச்சுதன் என்னும் இன்னொரு மாணவரும்  சேர்ந்து கொண்டார். அவர் வரவில்லை என்றால்  நான் தனியாகத்தான்  போக வேண்டும். நான் பள்ளிப் போகின்ற காலத்தில் விடுமுறை எடுத்ததாக நினைவில் இல்லை.

இந்தத் தோட்டம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.  எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே  சாரங்காபாணி என்னும் பெரியவர் சிறிய மளிகைக்கடை நடத்தி வந்தார். அவ்ர் தினசரி "தமிழ் நேசன்" நாளிதழை வாங்கிவந்தார். அப்போது தான் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் "பராசக்தி" படம் வந்த நேரம்.  தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் சிவாஜி கணேசன் வசனங்களைப் பேசி கல்வியில் கோட்டை விட்டனர். அதில் என் நண்பன் சுகுமாரனும் ஒருவர்.  அவர் கருணாநிதியின் புத்தகங்களைக் கொண்டுவந்து குவிப்பார்! அவர் படித்தாரோ இல்லையோ நான் அனைத்தையும் படித்தேன்.

அப்போது தான் "இந்தியன் மூவி நியூஸ்" சினிமா மாத இதழ் சிங்கப்பூரிலிருந்த வந்த நேரம்.  அந்தோனி என்னும்  அண்ணன் ஒருவர் தவறாமல் அந்த மாத இதழை வாங்கி வருவார். நான் தவறாமல் படிப்பேன்!  பக்கத்து வீட்டுப் பெரியவர் ஒருவர் விக்கிரமாதித்தன், தேசிங்குராஜன்,  நல்லதங்காள்  புத்தகங்களை வாங்கிவந்து ராகம் போட்டுப் படிக்கச் சொல்வார். இப்படித்தான் பலதரப்பட்ட மாத இதழ்களை, நூல்களைப் படிக்கின்ற பழக்கம்  எனக்கு ஏற்பட்டது. பள்ளிப்பாடங்களுக்கு உதவ தான் யாருமில்லை!

நான் மேல் குறிப்பிட்ட அண்ணன் அரசாங்கத்தில் பதிவு இலாகாவில்  பணிபுரிந்தவர், அதனால் அவரே எனக்கு அலுவலகத்திற்குப் போகாமலே அடையாளக்கார்டை எடுத்துக் கொடுத்தவர். 

அந்தத் தோட்டத்தில் இருந்த போது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.  அது தான் படிக்கின்ற பழக்கம்.



அறிவோம்: சீனாவின் அதிசய "மூங்கில் மரம்" பற்றி அறிந்திருக்கிறீர்களா?  விதையை  மண்ணில் விதைத்து, நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும், உரம் போட வேண்டும் ஆனால் எந்தவொரு வளர்ச்சியும் வெளியே பார்க்க முடியாது. அது தனது வேர்களை மண்ணுக்கு அடியில்  வலிமையாக ஆழப்படுத்திக் கொண்டு போகும்.  ஐந்தாம் ஆண்டு  அதன் தளிர்கள் தலை தூக்கும். பின்னர் அது கிடுகிடு என வளர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில் 150 அடிவரை வளருமாம்! 

Wednesday, 26 February 2025

நீண்ட பயணம் ஆரம்பம்!


 கல்வியில் எனது நீண்ட பயணம் என்றால் அது சிரம்பானில் உள்ள செயிண்ட் போல் பள்ளி தான். முதல் ஆறு ஆண்டுகள் காலை நேரம் பின்னர்  மூன்று ஆண்டுகள் மாலை நேரப்பள்ளி. காலை நேரப்பள்ளியில் திறமையற்ற என்னைப்போன்ற  மாணவர்களை மாலை நேரத்தில் தள்ளி விட்டார்கள்.

ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நான்  திறமையற்ற  மாணவன் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை.  கடைசிவரையிலும் இல்லை. ஏதோ பள்ளிக்குப் போனோம் வந்தோம். என்னத்தையோ படித்தோம். அவ்வளவு தான்.  ஆசிரியர்களிடம் கேட்க தைரியம் இல்லை. ஆங்கிலம் வராது.  ஆசிரியர்கள்  அனைவருமே சீனர்கள். 

உண்மையில் மாலை நேரப்பள்ளி ஒரு வராப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில்  சிலோனீஸ் மாணவர்கள் மற்றும்  மலையாள மாணவர்கள் - இவர்கள் எல்லாம்  நம்மைப் பார்த்தாலே ஆகாது.  என்னுடைய சூழலில் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை. அதனால் சீன மாணவர்கள் தான்  நண்பர்கள். அவர்களும் என்னைபோன்ற புத்திசாலிகள்!

மாலை நேரப்பள்ளியில் இந்திய மாணவர்கள், மலாய் மாணவர்கள், சீன மாணவர்கள்  எல்லாம் ஒரு கலப்பு. . அப்போது தான் பேசக்கூடிய தைரியமே வந்தது. நாலு பேரோடு பேசுகின்ற துணிவும் வந்தது. ஆனால் பரிதாபம்.  கல்விக்கு அது உதவவில்லை.  எப்படியோ சீனியர் கேம்ப்ரிட்ஜ் பரிட்சை எழுதும் அளவுக்குப் போய்விட்டேன். வெற்றி பெறவில்லை.

நான் செண்டாயான் தோட்டத்தில் தான் எனது கல்வியை ஆரம்பித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னைத்தவிர  வேறு மாணவர்கள் யாரும் என்னோடு படித்ததில்லை. நான் அங்கிருந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒருவனாகத்தான் தனி ஆளாக போய் வந்துகொண்டிருந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால்  சேர்ந்து படிக்க உதவியாக இருந்திருக்கும் அல்லவா?


 அறிவோம்:  அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை எப்போது தனது வண்ணத்தை மாற்றியது?  1814 - ம்- ஆண்டு இங்கிலாந்துக்கும்  அமரிக்காவுக்கும்  கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில்  அமரிக்க அதிபரின்  மாளிகை -  பல வண்ணங்களோடு  இருந்த மாளிகையை - நெருப்பு வைத்து எரித்தனர் இங்கிலாந்து படையினர். எரித்த பாகங்களை மறைக்க  வெள்ளையடித்து மறைத்தனர்  அமெரிக்கர்கள்.  ஆக, இன்றுவரை,  வெள்ளையடித்த  மாளிகை,  வெள்ளை மாளிகை (White House) யாகவே  தொடர்கிறது.   

வரலாற்று ஆசிரியர் மன்னர் மன்னன்

Tuesday, 25 February 2025

இரண்டு ஆண்டுகளே படித்தேன் (12)

இரண்டு ஆண்டுகள் நான் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில் படித்தேன் எதனையும் ஞாபத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.

நான் மறக்க முடியாதது என்றால்  பள்ளி,  கடற்கரை ஓரமாக இருந்ததால்  காலை பள்ளிக்கூடம் போனதும் முதல் வேலை மீன் பிடிப்பது தான்! அப்போது கரை கட்டப்படாத  கடலாக இருந்ததால் தண்ணீர்  வகுப்பறை அருகேவரையில் வரும்.  கடலையே பார்க்காத என்னைப் போன்றவர்களுக்குக் கடல்  நீரைப் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தானே!  மீன்களைப் பிடிப்பதும் அவைகளை மீண்டும் தண்ணிரீலேயே  விடுவதும் எங்களின் காலை நேர விளையாட்டு!  தண்ணீர் வெய்யில் வரும் நேரத்தில் எல்லாம் வடிந்துவிடும். கடலுக்குப் போகாமலே  கடல் நீரில்  விளையாடுவது அதற்குப் பின்னர் அமையவில்லை.

இன்னொரு மறக்க முடியாத நினைவுகள் என்றால் அந்த சமயத்தில் அங்கு விற்கப்பட்ட  நாசிலெமாக். அந்தக் காலத்தில் பெரியவர்களால்,   அவர்கள் கைகளால்,  செய்யப்பட்ட  நாசிலெமக்  அதன் சுவையே தனி.  அதன் பிறகு அந்தச் சுவையே கிடைக்கவில்லை.  கொஞ்சம் சோறு, சம்பல்,  ஒரு ஊடான் - அது போதும். அதன் பின் பசி என்பதே இல்லை! ஆனால் அதன் விலையை  என்னால் ஞாபகத்திற்குக் கொண்டுவர மூடியவில்லை. காரணம் அப்போது காற் காசு, அரைக் காசு, முக்கால் காசு, ஒரு காசு  புழக்கத்தில்  இருந்த நேரம். ஐந்து காசு கூட அப்போது இருந்ததா? தெரியவில்லை. 

எப்படியோ இரண்டு ஆண்டுகளை  அந்தப்பள்ளியில் கழித்துவிட்டேன். 1950-ம்  ஆண்டு  சிரம்பான் St.Paul's Institution பள்ளிக்கு என் தந்தையார் மாற்றிவிட்டார். 


அறிவோம்:  புத்தகங்களைப் படிப்பது என்பது இப்போது மிகவும் குறைந்து போனது.இளம் பெற்றோர்கள் யாரும் புத்தகங்களைப் படிப்பதில்லை.   கைப்பேசிகளிலேயே  படித்துவிடுகிறோம்  என்கிறார்கள். குழந்தைகள் படிப்பதைவிட பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள். புத்தகங்கள படிப்பதை  மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். அமெரிக்க முன்னாள் ஜனாபதி  ஆபிரகாம் லிங்கன்  32 மைல் நடந்து போய் ஒரு புத்தகத்தை வாங்கி வந்தராம். அவரைப்பற்றி தான் இன்றுவரை உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் சிறப்பு அது தான்.