நான் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றி அதிகம் அறியாதவன். "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்கிற பாடல் இன்னொன்று "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" போன்ற பாடல்களை எழுதியவர் என்பது மட்டும் தெரியும். மற்றபடி அத்தோடு சரி.
சமீபத்தில் படித்த செய்தி ஒன்றில் "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்கிற பாடலை எழுதியவர் பாரதியார் என்று படித்த போது அப்படி ஒரு செய்தியை இது நாள் வரை நாம் கேட்டதில்லையே என்று தோன்றியது! இந்த பாடல் ஒலித்த படம் "கடவுளின் குழந்தை" என்கிற 1960-களில் வந்த திரைப்படத்தில். நான் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லாம் மறந்து போனது! ஆனால் ஒன்று ஞாபத்தில் உள்ளது. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்கிற பாடலும் இன்னொன்று அது தமிழரசு கழகத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்த படம் என்பதாக ஒரு ஞாபகம்.
இது பாரதியார் பாடல் தானா என்பதைக் கண்டுபிடிக்க கூகலில் தேடினேன். அப்படி எந்த தரவுகளும் இல்லை. ஆனால் நான் ஒரு கணிப்பை வைத்திருந்தேன். அந்த பாடலை எழுதியவர் உவமைக் கவிஞர் சுரதாவாக இருக்கும் என்று. காரணம் அவர் தமிழரசு கழக அனுதாபி என்பதால் அப்படி ஓரு எண்ணம்!
ஆனால் உண்மையில் அதனை எழுதியவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. தரவுகள் அனைத்தும் அவர் எழுதியதாகவே காண்பிக்கன்றன. கவிஞர் அவர்கள் பல பாடல்களை எழுதியுள்ளார். உண்மையில் அவை அனைத்தும் தமிழர் எழுச்சிப் பாடல்கள். ஏனோ, வழக்கம் போல, அவரை நாம் கண்டு கொள்ளவில்லை! அவரின் பாடல்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
குறிப்பிட்ட அந்த பாடல் கூட பாரதி எழுதிய பாடல் என்று வாய்த்தவறி அந்த பேச்சாளைர் சொல்லி இருக்கலாம். குறைந்தபட்சம் பாரதி என்பதை செய்தியாளர் தவிர்த்திருக்கலாம். நமது நோக்கமெல்லாம் அந்த பாடலை எழுதிய கவிஞருக்குத் தக்க மரியாதைக் கொடுக்க வேண்டும் என்பது தான்.
இப்போது அந்த பாடலை எழுதியவர் யார் என்பது தெளிவாகிவிட்டது. இனி மறக்கவே முடியாது! நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை என்பதே அவர் பெயர்.
No comments:
Post a Comment