Saturday 26 February 2022

அம்மாடியோவ்! இத்தனை கடிதங்களா?

 

                    Opposition Leader Lim Kit Siang written 25,000 Press Statements since 1968!

எதிர்க்கட்சி தலைவர், லிம் கிட் சியாங் என்று சொன்னால் அவரை அறியாதார் யார்?

அவர் இல்லையென்றால் எத்தனையோ ஊழல் பிரச்சனைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்! நாமும் ஆளும் அரசியல்வாதிகளின் அருமை பெருமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம்!

எனக்குப் பிடித்தமான விஷயம் என்னவென்றால் கடந்த 1968-ம் ஆண்டு தொட்டு சமீபகாலம் வரை அவர் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கைகள் சுமார் 25,000 இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது!

ஒரு நாளைக்கு ஒரு செய்தி குறிப்பை பத்திரிக்கைகளுக்கு அவர் அனுப்பி இருந்தாலும் சுமார் 20,000 செய்திகளை அவர் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு ஒன்று என்பதை விட  ஒரே நாளில் மூன்று, நான்கு என்பதற்கு மேல் அவர் அனுப்பி இருக்கிறார்! ஓரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் அவரின்  கடமையை அவர் சரியாகவே இப்போதும் செய்து வருகிறார்.

எனக்கும் அவருக்கும் மிகச் சிறிய ஒப்பீடு ஒன்று உண்டு. நான் 1960 லிருந்து தட்டச்சை பாவித்துக் கொண்டு வருபவன். இப்போது கால மாற்றத்தால்  கணிப்பொறியைப் பாவித்து வருகிறேன். நான் முதன் முதலாக எனது பணியை ஆரம்பித்த போது தோட்டத்தில் உள்ள மக்கள் என்னிடமே பொதுவாக வருவதுண்டு. பல புகார்கள், பலப்பல புகார்கள்! அவர்களின் புகார்களைத் தெரிந்து கொண்டு அரசாங்க அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதுவேன். பல புகார்களுக்குச் சரியான பதில்கள் வரும்; வெற்றிகரமாகவும் அமையும். நான் அவர்களிடம் பணம் வாங்குகிற பழக்கம்  இல்லை.

நான் மாற்றலாகி வேறு தோட்டத்திற்குப் போகும் போது  நான் கடிதப் போக்குவரத்து செய்த அத்தனை கடிதங்களையும் ஒரு கோப்பில் வைத்திருந்தேன்.  அந்த கோப்பு கொள்ளாத அளவுக்குக் கடிதங்கள்! அவைகள் எனக்குத் தேவைப்படவில்லை. பலர் ஏன் இந்த வெட்டி வேலை என்பார்கள்! அப்படியல்ல! அவைகள் அத்தனையும் எனக்கு அனுபவங்களைக் கொடுத்திருக்கின்றன. இதில் என்னிடம் குறை கண்ட நண்பர்கள் கூட என்னிடம் தான் கடிதம் எழுதச் சொல்லி வருவார்கள்!  அதனால் கடிதம் எழுதுவது எனக்குக் கைவந்த கலையாக மாறிப்போயிற்று!

லிம் அவர்களின் செய்தியைப் படித்த போது எனது கடிதப் போக்குவரத்து காலத்தைக்  கொஞ்சம் எண்ணிப் பார்க்கவைத்துவிட்டது. ஆமாம் சும்மாவா! என்னுடைய ஏழாவது  வயதிலிருந்து நான் எழுதிக் கொண்டிருப்பவன்!  இப்போதும் எழுதிக் கொண்டிருப்பவன்! ஒரு வித்தியாசம். என்னுடைய கடிதங்கள் தனிப்பட்ட மனிதர்களின் நன்மைக்காக எழுதப்பட்டவை. லிம் அவர்களின் கடிதங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக எழுதப்பட்டவை.   ஏதோ என்னுடைய சில இனிய அசைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்! அவ்வளவு தான்!

லிம் கிட் சியாங் அவர்களின் சேவைகளை நான் மதிக்கிறேன். நாட்டு மக்கள் அவரின் மூலதனம். இந்த வயதிலும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அசரவில்லை.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த நாட்டுக்கு அவர் சேவையாற்ற வேண்டும்!  வாழ்த்துகள்!


No comments:

Post a Comment