தாலிபான் பயங்கரவாதிகள் என்றாலே அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடித்தல், மக்கள் நடுவே தலையை வெட்டுதல், கல்லால் அடித்துக் கொல்லுதல் - இது போன்ற செயல்கள் தான் நமது ஞாபகத்திற்கு வருபவை. அவைகளுக்குத் தான் அவர்கள் பழக்கப்பட்டவர்கள். அதாவது வளர்க்கப்பட்டவர்கள். வேறு வழிகளுக்கு அவர்கள் பழக்கப்படாதவர்கள்! புரிந்து கொள்ள முடியாதவர்கள்!
இப்போது அவர்கள் எதிர்பாராத விதத்தில் ஆப்கானிஸ்தான் அவர்கள் கையில் விழுந்துவிட்டது! அதனை ஆட்சி செய்ய வேண்டும். ஆட்சி என்றால் என்னவென்றே அறியாதவர்கள்! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பயங்கரவாதம் மட்டும் தான்.
ஆட்சிக்கு வந்த பிறகும் இன்னும் துப்பாக்கிச்சூடு தான் நடத்திக் கொண்டிருக்கின்றனர்! பழைய ஆட்சியாளர்களின் விசுவாசிகளைக் களையெடுப்பது என்றால் சுட்டுக் கொல்வது தான்! இன்னும் இந்த வேலை ஒரு முடிவுக்கு வரவில்லை! இன்னும் துப்பாக்கிசூடு கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது! ஒரு பக்கம் ஆட்சி தொடர வேண்டும். இன்னொரு பக்கம் முன்னாள் விசுவாசிகளைக் களையெடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!
இந்த நேரத்தில் தான் மத்திய கிழக்கிற்கான மலேசிய சிறப்புத் தூதர் அப்துல் ஹடி அவாங் அந்த நாட்டுக்கு மலேசியா உதவும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். பொதுவாக அவர் சொன்னாலும் பின்னர் அது பற்றி விவாதிக்கப்படும் என நம்பலாம்.
போரினால் சீரழிந்த ஒரு நாட்டுக்கு மற்ற நாடுகள் உதவுவது மனித நேயம் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கத்தின் அனுமதியின்றியே அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதில் சிக்கல்கள் இருந்தாலும் அவரின் மனிதநேயத்தை வரவேற்கிறோம்.
நமது நாடு ஆப்கானிஸ்தானுக்கு உதவும் என்கிற நிலைமை வந்தால் நாம் அவர்களுக்குக் கை கொடுப்பது என்பது பெண்களின் கல்வி விஷயத்தில் தான் கைகொடுக்க வேண்டும். பெண்களின் கல்வி என்றாலே அவர்கள் பின்நோக்கிப் போகின்றனர்! அவர்களிடம் அப்படி ஒரு வெறுப்பு! பெண்களுக்குக் கல்வி தேவை இல்லை என்பது தான் அவர்களின் நிலை!
இதனை மாற்றியமைக்க வேண்டியது மலேசியாவின் கடமையாகவே கருத வேண்டும். பெண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் நாம். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நாடுகளில் எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை. அதனால் தான் எல்லா நாடுகளிலும் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மலேசியா நிச்சயமாக தலிபான் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும். ஆனால் அது கல்விக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் பெண்கள் கல்விக்காக மட்டுமே அந்த உதவிகள் அமைய வேண்டும்.
எல்லா நாடுகளும் முன்னேற்றத்தை நோக்கி கவனம் செலுத்துகையில் தலிபான் அரசாங்கம் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்பு போன்றவகைகளிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. தலிபான்கள் செத்தால் யாரும் கவலைப்படப் போவதில்லை ஆனால் அவர்கள் பொது மக்களையும் தங்களுடன் இழுத்துக் கொண்டு போகிறார்களே அது கவலைக்குரியது!
பெண்கள் கல்வி என்பது முக்கியம்! அது ஆப்கானிஸ்தான் பெண்களுக்கும் முக்கியம்!
No comments:
Post a Comment