இப்போது நம் நாட்டில் பேசப்படும் முக்கியமான விஷயமாகக் கருத வேண்டியது குறைந்தபட்ச சம்பளம்.
பெரும்பாலும் இதில் வருபவர்கள் பி40 என்று சொல்லப்படும் அடிமட்ட வேலையில் உள்ளவர்கள். இவர்களுக்கான சம்பளம் என்பது ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் என்பது தான் உண்மை.
ஆளைப்பார்த்து தான் சம்பளம். இந்தியர்கள் என்றால் அடிமட்ட சம்பளம்! ஒரு சிலர் கல்வி தரத்தை வைத்து அளப்பவர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் "வலியவன் வெட்டியதே வாய்க்கால்!" என்கிற நிலை தான்! காரணம் அதை விட்டாலும் வழியில்லை என்கிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்!
இந்த சூழலில் தான் இப்போது குறைந்தபட்ச சம்பளம் பற்றி பேசப்படுகின்றது. நல்லது தான். இதனை எத்தனை முதலாளிகள் கடைப்பிடிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியப் போவதில்லை! சும்மா 'பாவ்லா' காட்டுபவர்கள் நிறையவே உண்டு! இங்கு நாம் குறைந்தபட்ச சம்பளம் என்பது ரி.ம.1500.00. இந்த சம்பளத்திற்கே இன்னும் முதலாளிகள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை! ஒரு பக்கம் 'ஆ!ஒ!' என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில், கவனியுங்கள் இந்த நேரத்தில், வீட்டு வேலைகள் செய்ய வரும் இந்தோனேசியப் பெண்களுக்கு ரி.ம. 2000,00 வெள்ளி சம்பளம் கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது! அல்லது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அல்லது இன்னும் ஆய்வில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பி40 மக்கள் வெறும் 1500 வெள்ளிக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த பி.40 மக்கள் இல்லையென்றால் பல வேலைகள், பல சிறு சிறு நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும்! இந்த நிறுவனங்கள் எல்லாம் பி40 மக்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் ஆகும். 1500 வெள்ளி சம்பளம் கொடுக்க இன்னும் அரசாங்கம் எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை!
ஆனால் வீட்டு வேலை செய்ய வரும் இந்தோனேசியர்களுக்கு 2000 வெள்ளி சம்பளம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது! அரசாங்கம் எந்த அளவுக்கு ஏழை மக்கள், பி.40 மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். அவர்களுக்குச் சம்பளம் கூட கொடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நம் மக்களுக்கு அதே அளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது.
எது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இந்தோனேசியர்கள் வேலைக்கு வருவது என்பது தனிப்பட்ட முதலாளிகளின் வசதிக்காக. பி40 மக்கள் என்பது நாட்டின் வளர்ச்சிக்காக. நாட்டின் முன்னேற்றத்திற்கு பி.40 மக்களின் பங்கு என்பது அளப்பரியது.
இந்த வித்தியாசங்கள் கலையப்பட வேண்டும். நம் நாட்டு மக்களுக்கு குறைந்தபட்சம் ரி.ம. 2000.00 வெள்ளி சம்பளம் என்பதே சரியாக இருக்கும். சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றமே முக்கியமே தவிர வீட்டு வேலை செய்ய வருபவர்களுக்கு அள்ளிக் கொடுப்பது முக்கியம் அல்ல!
No comments:
Post a Comment