Friday 18 February 2022

மதமாற்றம் சரியே!

 

                                                Perlis Mufti Mohamad Asri Zainul Abidin
பெர்லிஸ் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மதமாற்றம் என்பது  சரியானது தான் என்கிறார்   மாநில ,முப்தி அஸ்ரி அவர்கள்.

"சட்டத்திற்கு உட்பட்டு தான் நாங்கள் செய்கிறோம்!" என்பது அவர் எடுத்து வைக்கும் வாதம்! இருக்கலாம் அல்லது இல்லாமலும்  போகலாம். அது சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். 

சில கேள்விகள் நமக்கும் உண்டு.  வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருங்காலங்களில் மதமாற்றம் என்கிற பிரச்சனையை எதிர்நோக்காமலிருக்க  பெர்லிஸ் மாநிலத்திற்குப் போய் மதமாற்றம் செய்தால்  அவர்களின் நிலை என்ன? அது அந்த மாநில சட்டத்திற்கு உட்பட்டு வருமா? 

மாநில முப்தி அவர்களை நாம் மதிக்கிறோம்.  அவர் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது தாயை வெறுக்கிறார்கள் என்பதாகச் சொல்லுகிறார்.  அதாவது அவர் சொல்ல வருவது கஞ்சா அடித்துவிட்டுக் குழந்தைகளை மதமாற்றம் செய்த தந்தையைக் குழந்தைகள் வெறுக்கவில்லை  ஆனால் குழந்தைகள் எங்கே என்று தெரியாமல் அலைந்து திரிந்து தேடிக் கண்டுப்பிடித்த  தாயை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் அவரின் கூற்று!

முதலில் சமய இலாக்கா மாபெரும் தவற்றினைச்  செய்திருக்கிறது என்பதை  அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.   கஞ்சா சாப்பிடும் பழக்கம் உள்ள ஒரு  மனிதனின் பேச்சை அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக எடுத்துக்கொண்டு  குழந்தைகளை மதமாற்றம் செய்திருக்கிறார்கள்! அதுவே அவர்கள் செய்த தவறு! கஞ்சா பழக்கம் உள்ளவனை சமய இலக்காக நம்புகிறது ஆனால் குழந்தைகளின்  தாயை அவர்கள் நம்பவில்லை!

இதில் காவல்துறை சொல்லுவதை  எதனையும் நாம் நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்ற விஷயங்களில் அவர்கள் சமயத்துறையின் ஓர் அங்கமாகவே செயல்படுபவர்கள்!   ஏற்கனவே 'காணாமல்' போன பெர்லிஸ் மாநில பாஸ்டர் ஒருவர் என்ன ஆனார் என்கிற விஷயமே இதுவரை தெரியவில்லை! சமயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் காவல்துறையின் செயல்பாடு  செயலற்றதாகவே இருக்கும்!

எது எப்படி இருப்பினும் இது ஒரு நீண்ட வழக்காக சமய இலாக்கா இழுக்கடிக்கும் எனத் தோன்றுகிறது. குழந்தைகளைத் தாயின் கண்களுக்குக் கூட இனி காட்டாமாட்டார்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் தங்களது சமயத்தைத் தேர்ந்தெடுக்கும் வயது இல்லை என்று மற்றவர்கள்  கூறினாலும்  அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளூவதாகத் தெரியவில்லை.

ஒன்று தெளிவாகப் புரிகிறது.  என்ன தான் நாம் சொன்னாலும் அவர்களுக்கோ மதமாற்றம் சரி சரி சரியே என்பதைத்தவிர வேறு நிலைப்பாடு என்பது அவர்களுக்கு இல்லை.

இறைவனிடம் விட்டுவிடுவோம்!

No comments:

Post a Comment