Wednesday 16 February 2022

இது எதிர்பார்த்தது தான்!

 

                                                Mother reunites with her three children

தனித்து வாழும் தாயான லோ சியு ஹோங் தனது மூன்று பிள்ளைகளையும் இன்று  மதியம்  சென்று பார்த்ததாக வணக்கம் மலேசியா இணையத் தளம் கூறியது.

அவர் குழந்தைகளைப் பார்க்க நிறைய தடைகள் இருந்த போதிலும் அவர் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி  கடைசியாக அவருடைய குழந்தைகளைப் பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும் இந்த விதிமுறைகள் தேவையற்றவை என்பதாகக் கூறுகிறார் முன்னாள் துணை அமைச்சர், பி.வேதமூர்த்தி.  இந்த பிரச்சனையில் அந்த தாயிடம்  அரசாங்கம் பரிவுடன் நடந்து கொள்ளவில்லை. அரசாங்கம் சட்டத்தையும் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளையும்  மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் வேதா.

நாமும் அதைத்தான் சொல்ல வருகிறோம்.  தனித்து வாழும் ஒரு தாய் தனது பிள்ளைகளைப் பார்ப்பதில் இந்த அளவு கெடுபிடிகள் தேவையில்லை என்பதே நமது கருத்தும் கூட. அந்த தாய் ஏதோ ஒரு பயங்கரவாதியை போன்று நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தனது குழந்தைகளைப் பார்க்க ஒரு தாய் அனுமதிக்கப்படாததற்கு  ஏதேதோ காரணங்கள் சொல்லப்படுகிறது. பெர்லிஸ் மாநில முப்தி பார்ப்பதற்கு அப்படி எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். உண்மையில் முப்தி அவர்களுக்கு அனுமதி கொடுத்ததே தவறு என்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஒரு வகையான பயமுறுத்தல் நாடகம். அவர்கள் குழந்தைகள்.  அவர்களிடம் போய் சமயம் பற்றி பேசுவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? ஆனாலும் அது நடந்திருக்கிறது! சமயம் பற்றி அவர்களிடம் பேசுவதற்கான  வயது அல்ல அவர்களுக்கு.  ஆனாலும் மதிக்கத்தக்க ஒரு மனிதர் இதனைச் செய்திருக்கக் கூடாது என்பதே நமது கருத்து.

ஆனாலும் இந்த பிரச்சனை இத்தோடு தீர்ந்துவிட்டதாக நான் கருதவில்லை. இந்திராகாந்தி பிரச்சனைப் போன்று இதுவும் நீண்டு கொண்டு போகலாம். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமிய இலாகா தான். அவர்களுடைய தவறான அணுகுமுறை அதனை அவர்கள் இழுத்தடிப்பதிலிருந்தே தெரிகிறது. இஸ்லாமிய இலாக்காவும்  நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களே சட்டத்தை மதிக்காவிட்டால் மற்றவர்களை நாம் எப்படி குறைசொல்ல முடியும்?

தனித்து வாழும் இந்த தாயின் பிரச்சனை  சீக்கிரம்  ஒரு முடிவுக்கு வர நாம் அனைவரும்  பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment