Sunday 6 February 2022

ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

 

                        முன்னாள் கல்வி அமைச்சர்: மஸ்லி மாலிக் 

பக்காத்தான் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் மஸ்லி மாலிக்.

அவரைப் பற்றி குறை சொல்வதற்கு யாரும் தயங்கத்தான் செய்வர். அவரிடம் நேர்மை உண்டு. கடவுள் பயம் உள்ளவர், அதனால் அவரை அவ்வளவு சீக்கிரத்தில் கை நீட்டி குறை சொல்லிவிட முடியாது. கடவுள் பயம் என்பது சாதாரணமாக  அவ்வளது எளிதாக வந்துவிடுவதில்லை!

நமது அரசியலில் பெரும் பெரும் ஊழல் பேர்வழிகள் என்றால்  அவர்கள் அம்னோ, ம.இ.கா., ம.சீ.ச. அரசியல்வாதிகளாகத்தான் இருக்க முடியும். கீழ் மட்டத்திலிருந்து  மேல் மட்டம் வரை அத்தனையும் கறை படிந்த கரங்கள்!  நல்லவன் என்று சொல்லுகின்ற அளவுக்கு அப்படியெல்லாம் யாரையும் பிரித்துப் பார்த்து விட முடியாது!

இந்த நிலையில்  அம்னோ போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் ஒரு நல்ல மனிதர் அரசியலில்  நல்ல பேரோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்தால் அவர்களால் சும்மா இருக்க முடியுமா? அதனால் தான் அவர் மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கின்றனர்! அன்வார் இப்ராகிம் மீதே என்னன்ன குற்றச்சாட்டுகளை இவர்கள் கொண்டு வந்து திணித்தார்கள் என்பதை அறியாதவர்களா நாம்!

மஸ்லி மாலிக் கல்வி அமைச்சராக இருந்த போது கையூட்டு வாங்கினார் என்று இப்போது சொல்ல வேண்டிய காரணம் என்ன? பொதுத் தேர்தல் வரப்போகிறது அதனால் இப்போதே அவர் மீது தங்களது தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்! அது மட்டும் அல்ல. கல்வி அமைச்சராக இருந்த போது அவருக்குக் கொடுக்கப்பட்ட காரை இன்னும் பயன்படுத்துவதாக வேறு அவர் மீது பழி சுமத்துகின்றனர்! மஸ்லி அதனை மறுத்திருக்கிறார் என்பது வேறு விஷயம்.

அம்னோ கட்சியினருக்கு இது போன்ற செயல்கள் எல்லாம் புதிதல்ல. பதவியில் இல்லாத போதும் தொடர்ந்து அரசாங்க சலுகைகளைப் பயன்படுத்தியவர்கள் அவர்கள்! அதனால் மற்றவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் குற்றம் சுமத்துவது அவர்களுக்குக் கைவந்த கலை! எல்லா அரசியல்வாதிகளும் தங்களைப் போலவே என்று நினைக்கும் பெருந்தன்மை அவர்களுக்கு உண்டு!

நல்லவர்களைக் காயப்படுத்துவது காலாகாலமாக நடக்கும் விஷயம் தான். வேடிக்கை என்னவென்றால் நல்லவர்கள் பின் தள்ளப்பட்டு அயோக்கியர்கள் அரசியலில் மின்னத் தொடங்கி விடுகிறார்கள்!  இது சோகம்!

நல்லவர்கள் அரசியலில் இருப்பது தொடர வேண்டும்.  நல்ல அரசியல் அமைய வேண்டும்! காழ்ப்புணர்ச்சி கரைந்து போக வேண்டும்!  அது தான் நமது அரசியல்!

No comments:

Post a Comment