மூன்று குழந்தைகளின் தனித்துவாழும் தாய் திருமதி லோ குழந்தைகளின் வழக்கில் குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என்றாலும் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் உண்டு. என்னவோ நல்ல தீர்ப்பாக அமைந்ததற்கு நன்றி சொல்லுவோம்.
ஆனாலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவடைந்துவிட்டதா என்ப்தைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் கட்டம் தான் முடிவடைந்திருக்கிறது. இன்னும் போகும் பாதை நீண்டதாகவே இருக்கிறது. குழந்தைகள் தாங்கள் அறியா வயதில் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால் மதமாற்றம் செய்யக் கூடாது என்று தெரிந்தும் அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்!
சட்டத்தை அறியாதவர்கள் பிழைகள் புரியலாம். ஆனால் அவர்கள் சமய அறிஞர்கள். சட்டத்தை அறிந்தவர்கள். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்தவர்கள்.
ஆனாலும் அவர்கள் சட்டத்தோடு மோதுவதை ஒரு விளையாட்டாகவே கருதுகிறார்கள்! அது அவர்களுக்கு ஒரு விளையாட்டு! ஆனால் எதிராளிகளுக்கு அது மாபெரும் போராட்டம். மனப் போராட்டம். மதமாற்றம் என்பது ஒரு சில விஷயங்களில் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. மற்றவர்களை இழிவுபடுத்துவது, அவமானப்படுத்துவது, கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது - இதெல்லாம் அவர்களால் செய்ய முடியும். அதனை அவர்களால் அரசியலாக்க முடியும். நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்! நீதிபதியை பயமுறுத்த முடியும். எதிராளிக்கு ஒரு வழியும் இல்லை!
நீதியை மட்டுமே கடைப்பிடிக்கின்ற நீதிபதிகளால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும். அப்படியும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதுவரை நடந்தது சரிதான். இனிமேல் நடக்கப் போவதும் சரியாக இருக்க வேண்டும். காரணம் இப்போதே ஒரு சிலர் மதமாற்றம் சரியே என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அதனை அவர்கள் சாதிக்கவே முயல்வார்கள்!
அதுவும் பெர்லிஸ் முப்தி அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் மற்ற மதத்தினருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை! அவரின் அணுகுமுறையே வேறு மாதிரி!
அரசாங்கம், ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்குவது நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும்.
சட்டங்கள் என்பது அனைவருக்குமே! மேலோர் கீழோர் என்பது சட்டத்திற்கு இல்லை! அதனைக் கடைப்பிடித்தாலே போதும். எந்த ஒரு பிரச்சனையும் எழப்போவதில்லை!
No comments:
Post a Comment