Wednesday 23 February 2022

ஏன் இந்த தேர் திருவிழா!

 

   "வலிமை" அஜித்குமார்

அஜித் குமார் நடித்த திரைப்படமான "வலிமை"  24-2-2022, வியாழக்கிழமை அன்று  உலகெங்கிலும் உள்ள திரை அரங்குகளில் வெளியாகிவிட்டது. தலையே 'தல' போட வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அவரின் சொல்லுக்கு மரியாதைக் கொடுத்து நான் இங்கு 'தல' என்கிற சொல்லை பயன்படுத்தவில்லை என அறிக!

நான் பொதுவாகவே  ரஜினியின் ரசிகன். கமலின் படமும் பிடிக்கும். இவர்களின் படங்களை மட்டும் தான்  திரை அரங்குகளில் பார்ப்பது வழக்கம். இப்போது அதனையும் நிறுத்திக் கொண்டேன். கோரோனா காலத்தில்  அதையெல்லாம் ஒதுக்கி விட்டேன்! இப்போது தான்  நிறைய வசதிகள் வந்து விட்டதே! அப்புறம் எதற்கு திரை அரங்குகள்?

எனக்குச் சில வருத்தங்கள் உண்டு. அதைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  

நம் அனைவருக்கும் சினிமா கதாநாயகர்களைப் பிடிக்கத்தான் செய்யும். அதனால் தான் அவர்களின் படங்களைப் பார்க்கிறோம்.  அவர்களின் நடிப்பைப் பாராட்டுகிறோம். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளுகிறோம். இதெல்லாம் சரிதான். இதெல்லாம் உலகம் எங்கிலும் உள்ள இரசிகர்கள் செய்கின்றவைகள் தான்.

ஆனால் நம் தமிழ்ப்பட இரசிகர்கள், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், கொஞ்சம் அதிகமாகவே உரிமைகளை எடுத்துக் கொள்ளுகிறோம். கட்-அவுட் என்கிறார்கள், பாலாபிஷேகம் என்கிறார்கள்  - திரை அரங்குகளைத் தேர்களை அலங்கரிப்பது போல அலங்கரிக்கிறார்கள்! ஏதோ கோவில் திருவிழா பொன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அசிங்கமான கலாச்சாரமாகவே நமக்குப் படுகிறது!

இதனை விட மக்களுக்குப் போய்ச் சேரும்படியாக ஏதாவது நல்ல காரியத்தில் ஈடுபட்டால் உங்களைப் பாராட்டலாம். ஒன்றைச் சொல்லுகிறேன். பழங்குடி மக்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகள் இல்லை, உடுத்த துணிகள் இல்லை இதனையெல்லாம் நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். 

அப்படி ஏதாவது ஒரு பள்ளியை தத்தெடுத்துக் கொள்ளுங்கள். பள்ளியை வசதியான பள்ளியாக மாற்றியமைங்கள்.  பிள்ளைகளுக்குச் சீருடைகளை வாங்கிக் கொடுங்கள்.  என்னன்ன உதவிகள் அந்த பள்ளிக்குத்  தேவையோ அனைத்தையும் அந்த பள்ளிக்குச் செய்யுங்கள்.

மாதாமாதம் இந்த உதவிகளைச் செய்யுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அஜித் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும் நாள்களில் உங்கள் உதவிகளைச் செய்யுங்கள். அஜித் கூட அதைத்தான் விரும்புவார். பிள்ளைகள் படிப்பதை அதுவும் பழங்குடி மக்களின் குழந்தைகள் படிப்பதை வேண்டாமென்று யாரும் சொல்லப் போவதில்லை. 

இது போன்ற  உதவிகள் என்றென்றும் அஜித்தின் பெயரை நிலைக்கச் செய்யும்.  தேவையற்ற வேலைகளைச் செய்வதைவிட இது போன்ற நல்ல காரியங்களைச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே நமது ஆசை.  

கொஞ்சம் ஆற அமர  யோசியுங்கள்,  தலைகளே!

No comments:

Post a Comment