Monday 7 February 2022

வாக்களிக்கும் முதிர்ச்சி உண்டா?

 

ஜோகூர் மாநிலத்தில் இளைஞர்கள் சரித்திரம் படைக்கப் போகின்றனர!

இளைஞர்களுக்கு எப்போதும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜோகூர்மாநில சட்டமன்றத் தேர்தலில் 18 வயதானவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.

நம்மிடையே பல கேள்விகள் உண்டு. இந்த இளைஞர்கள், இன்னும் கூட கல்வி கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களால் சொந்தமாக சிந்தித்துச் செயல்பட முடியுமா என்று கேளவிகள் எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். உண்மை தான் என்றாலும் ஒரேடியாக சிந்திக்கத் தகுதி இல்லாதவர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது!

இளைஞர்கள் தங்களுக்கென ஒரு நட்பு வளையத்தை வைத்துக் கொண்டு செயல்படும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அவர்கள் பேசுவார்கள், விவாதம் செய்வார்கள் - அதனை வைத்தே ஒரு முடிவும் எடுப்பார்கள்.

முன்பு அவர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்று ஒதுக்கி வைத்தோம். இப்போது தேவை என்று அவர்களை அழைக்கும் போது அவர்களுக்கும் அந்த பொறுப்புணர்ச்சி வந்துவிடும்.

வருங்காலங்களில் எது நமக்கு நன்மை பயக்கும் என்பதை இளைஞர்கள் தான் சிந்திக்க வேண்டும். பெரியவர்களால் அது முடியாது. மாற்றம் என்பதை அவர்கள் விரும்பவதில்லை.  நான்,  வயதானவர்களைச் சொல்லுகிறேன், தொடர்ந்தாற் போல எது போன்ற ஆட்சியை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம்?  

பெரியவர்களால் ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் தான் ஊழல் செய்பவன், இலஞ்சம் வாங்குபவன், மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவன், மக்களை ஏமாற்றுபவன்  - இவர்கள் தான் தொடர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! நாம் அவர்களுக்குத் துணை போகிறோம்!

மக்களின் நலத்தைப் பற்றி அக்கறை எடுக்காதவன் என்றால் அவனை அரசியலிலிருந்து விரட்ட முடியுமா? நம்மால் முடியவில்லை! ஆனால் இளைஞர்களால்  அது முடியும்!  இளம் சந்ததியினர் அவர்களுக்கே உரிய துடிப்பு, துணிச்சல் அது நம்மிடம் இல்லை! ஒப்புக்கொள்ள வேண்டும்!

இத்தனை ஆண்டுகள் நம்மை ஏமாற்றி வந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு முடிவைக் கொண்டு வருபவர்கள் இளைஞர்கள். அவர்கள் தான் இளைஞர்கள் பதினெட்டு!

இந்த பதினெட்டு வயது இளைஞர்களுக்கு முதிர்ச்சி உண்டா என்று கேட்டால் அவர்களுக்கு முதிர்ச்சி மட்டும் அல்ல அதிர்ச்சி தரும் ஆற்றலும் உண்டு!

No comments:

Post a Comment