Wednesday 9 February 2022

தடுப்புக்காவல் மரணங்கள்!

காவல்துறையில் ஏற்படுகின்ற தடுப்புக்காவல் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைவதாக எந்த அறிகுறியும் காணோம்!

எத்தனையோ குறைகூறல்கள், அறைகூவல்கள், நாடாளுமன்றத்தின் எதிரொலிகள் - இப்படி எதனையும் காவல்துறை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை! அவர்கள் தனி சாம்ராஜ்யமாகவே செயல்படுகின்றனர்! கேட்க ஆளில்லை! தனிகாட்டு ராஜா!

கடந்த  ஏழு ஆண்டுகளில் சுமார் 80 மரண சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.என்று கூறப்படுகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 44 மரணங்கள் சம்பவத்திருக்கின்றன.

இங்கே ஒரு சிறிய குறுக்கீடு, மன்னிக்கவும்.  கடந்த ஏழு ஆண்டுகளில் 80 மரண சம்பவங்கள் என்றால் ஓர் ஆண்டுக்கு சுமார் 12 என்று வைத்துக் கொண்டாலும்  சென்ற ஆண்டு, ஒரே ஆண்டில் மட்டும்,  சுமார் 44 சம்பவங்கள் சம்பவித்திருக்கின்றன.

ஒன்று நமக்கு நினைவிற்கு வருகிறது. ஓரு நிலையான அரசாங்கம் இல்லாத போது இந்த மரண சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன! சென்ற ஆண்டு மட்டும்  என்று எடுத்துக் கொண்டால்  அரசாங்கம் மிகவும் ஆட்டங்கண்டிருந்த நேரம். அதாவது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்றிருந்த நேரம். குறிப்பாக அந்த இக்கட்டான சூழலில் காவல்துறை கொஞ்சம் அதிகமாகவே "பயிர்"  செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! ஒரே ஆண்டில் மட்டும் 44 சம்பவங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல! மாதத்திற்கு சுமார் நான்கு மரணங்கள்!

பொதுவாக தடுப்புக்காவல் மரணங்கள் என்றாலே  நமக்கு முதலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இந்திய இளைஞர்கள் தான்! அடுத்து சிறிய எண்ணிக்கையில் மலாய் இளைஞர்கள். சீன இளைஞர்கள் சுழியம் என்றே சொன்னாலும் அவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் இந்திய இளைஞர்களே முதலிடத்தில் நிற்கின்றனர்.  நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஏழு விழுக்காடு  கொண்ட நாம்  இந்த மரண சம்பவங்களில் நமது இளைஞர்கள் தான் முன்னணியில் நிற்கின்றனர். அதாவது நம்மை ஒரு குற்றவாளி சமூகம் என்பதாகத்தான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. வெளி வருகின்ற தடுப்புக்காவல் மரணங்களில் இந்திய இளைஞர்களே முதலிடம்.  சிறையில் இருக்கின்ற குற்றவாளிகள் என்றால் அங்கும் இந்திய இளைஞர்களே முதலிடம்.

இது ஒன்றே போதும். மலேசிய நாட்டில் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கல்வியறிவு, வேலை இல்லாப் பிரச்சனை, உயர்கல்வி மறுக்கப்படுதல் போன்று பல்வேறு பிரச்சனைகளில்   நமது சமூகம் உழன்று கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் முடிவு காணவில்லை என்றால் தடுப்புக்காவல் மரணங்களைத் தடுத்து நிறுத்த இயலுமா என்பது கேள்விக்குறியே! 

No comments:

Post a Comment