Friday 11 February 2022

கொடிகட்டிப் பறக்கிறோம்!

 

இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

ஆமாம், நாம் யோக்கியமாக இருந்தால் தானே இறைவன் நல்லதைச் செய்வார். நாம் தான் இலஞ்சத்தைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்க நினைக்கிறோமே! அதற்கு நாம் தான் அனுபவிக்க வேண்டும்? இல்லையா!

நாட்டில் இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் தலைவிரித்தாடுகிறது  என்னும் கூக்குரல் நாடெங்கிலும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முதலில் அது எதிர்கட்சியினரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  இப்போதோ ஒரு படி மேல் போய் பொது மக்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!

எதிர்கட்சியினர் பேசினால் அரசியல் என்போம். இப்போது பொது மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர்.

நம் அருகில் இருக்கும் சிங்கப்பூரை நாம் எந்த காலத்திலும் தொடவே முடியாது என்கிற சூழல் தான் உள்ளது! சிங்கப்பூரால் முடியும் போது நம்மால் ஏன் முடியவில்லை என்று கேட்டால் அந்த கேள்விக்குப் பதிலில்லை! "அப்ப நீங்க சிங்கப்பூருக்கு போயிடுங்க!" என்று பதில் சொல்லுவதில் தான் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்கின்றனர்! சிங்கப்பூரைப்  போல நாம் உயர வேண்டும் என்பதுற்குப் பதிலாக  "நாட்டைக் கொள்ளையடித்தாவது நாங்கள் உயர்வோம், நாடு உயர வேண்டும் என்கிற அவசியம் இல்லை!" என்பது தான் அவர்களது பதில்!

இலஞ்சம் ஊழல்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலையில்லை! மக்கள் முன்னேற வேண்டும் என்கிற அக்கறை இல்லை!

இலஞ்ச ஊழலில் நாம் மிகவும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தான் மேலே உள்ள புள்ளி விபரம் கொடுக்கும் செய்தி! புருணை, பூட்டான் போன்ற நாடுகள் கூட நம்மைவிட சிறப்பாக இயங்குகின்றன. 

நமது கல்வி முறைக்கும் ஊழல் சீர்கேடுகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டோ என்று யோசிக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். முதல் நான்கு நாடுகளும் ஆங்கிலக் கல்வியை மையமாகக் கொண்ட நாடுகள். நமது கல்வி முறை முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதோ? இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகள்  எதுவும், எந்தக் காலத்திலும் முதல் நிலைக்கு வரும், அதாவது ஊழலற்ற நாடாக வரக்கூடிய சாத்தியங்கள் உண்டா,  என்று சும்மாவாவது நினைத்துப் பார்க்க முடியவில்லை!

சமயம் நமக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்ற எந்த நாட்டையும் விட சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு நமது நாடு. நேர்மை, நல்லொழுக்கம் அனைத்தும் தினம் தினம் நமக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் திருந்தவில்லை!

இன்றை நிலையில் இலஞ்சம் ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறோம்! இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் முற்றிலும் ஒழிந்தால் ஒழிய இலஞ்சமற்ற ஒரு நாட்டை நாம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை!

ஆனாலும் நம்பிக்கை உண்டு. இறைவனிடமே விட்டுவிடுவோம்!

No comments:

Post a Comment