Saturday 19 February 2022

நாம் என்ன அரக்கர்களா!

 

                                                   Indonesian Ambassador Hermono 

இந்தோனேசியாவிலிருந்து வீட்டு வேலை செய்ய வரும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்! ஏராளம்!

இப்போது அந்த நாடு இங்கு வேலைக்கு வரும் பெண்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க, பாதுகாப்பாக வேலை செய்ய, சில புதிய விதிமுறைகளைக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

நமக்கு அந்த வகையில் சில பாதகங்கள் ஏற்படலாம். ஆனால் அவர்களின் பிரஜைகளின் மேல் அவர்களுக்கு அக்கறையுண்டு.   அதனைக் குறைசொல்ல நமக்கு அதிகாரமில்லை.

இந்தோனேசியப் பெண்கள் அப்படி என்ன தான் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள்? ஒரு பெண்ணைக்  கொன்றே போட்டுவிட்டார்கள்.  ஒரு குமரிப் பெண்ணைக் கிழவியாக்கி விட்டார்கள். அந்த அளவு கொடூரம்.   சம்பளம் கொடுப்பதில்லை.   நாய்களுடன் படுக்க வைப்பது.  கார் கொட்டகைகளில் படுக்க வைப்பது. அரைகுறை சாப்பாடு, 24 மணி நேர வேலை, ஓய்வு எடுக்க வழியில்லை - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!

இந்தோனேசிய தூதரகம் சென்ற ஆண்டு மட்டும்  சுமார்  206 இந்தோனேசிய பெண்களின் வழக்குகளைத் தீர்த்து வைத்திருக்கிறது  என்கிறார் இந்தோனேசியத் தூதர்.. அதன் மூலம் சுமார் 20 இலட்சம் ரிங்கிட்டை  அந்த வேலைக்காரப் பெண்களுக்கு வாங்கித் தந்திருக்கிறது தூதரகம். இன்னும் 40 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன.

இந்தோனேசியத் தூதர் நமக்கு ஓர் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறார்! "அதெப்படி உங்கள் அண்டை நாடான சிங்கப்பூரிலிருந்து இது போன்ற  பிரச்சனைகள் ஒன்று கூட  எங்களுக்குக் கிடைக்கவில்லையே!  சிங்கப்பூர் மட்டும் அல்ல! தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இந்தோனேசியப் பெண்கள் வேலை செய்கிறார்கள். அங்கிருந்தும் கூட  மலேசியா அளவுக்கு ஒரு பிரச்சனையும் எழவில்லையே!"

இந்தோனேசியத் தூதர் அப்படி சொல்லுவதே நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால்  அந்த மூன்று நாடுகளுமே சீனர்கள் அதிகமாக  வாழுகின்ற நாடுகள்.  அவர்களிடையே மனிதாபிமானம் உண்டு. மலேசியர்களுக்கு  ஏன் அந்த மனிதாபிமானம் இல்லை என்று கேள்வி எழுப்புகிறார் தூதர்!

நம்மிடம் உள்ள பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த நாடுகளில் அவர்களுக்குப் பணிப்பெண்கள்  தேவை. அதனால் அந்த பெண்களை அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். இங்கு தேவை என்பது போய்  'பெருமைக்காக'  என்று ஒன்று இருக்கிறது. பெருமைக்காக என்று சொல்லும் போது இன்னும்  விரும்பத்தாகத பலவும்   வந்து சேர்ந்து விடுகின்றன! அதனால்தான் அவர்கள் தங்களது வீட்டில் வேலை செய்ய வரும் பெண்கள் மேல் ஆதிக்கம், அதிகாரம் செலுத்த விரும்புகின்றனர்.   அதன் விளைவுகளைத்தான் நாம் பார்க்கிறோம்!

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்! அது தான் இவர்களின் கதையும்!                                                                                                                                                                                                        

No comments:

Post a Comment