Friday 18 February 2022

நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!

 

                                       சட்ட அமைச்சர்:   Wan Junaidi Tuanku Jaafar    
மூன்று குழந்தைகளை இஸ்லாமிய சமய இலாகாவிடம் தாரைவார்த்துவிட்டு  அல்லாடிக் கொண்டிருக்கும் தனித்து வாழும்  தாய் லோ சியு ஹோங் அவருக்கு ஓர் யோசனை கொடுத்திருக்கிறார்  பிரதமர் துறையின் சட்ட விவகார அமைச்சர் வான் ஜுனைடி.  

அவர் சொல்ல வருவதெல்லாம் இதுதான்: "நீதிமன்றம் போங்கள்; நீதிமன்றமே முடிவு செய்யட்டும்." ஏற்கனவே தனது மகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தாய் இந்திரா காந்தி நீதிமன்றத்திற்குப் போயும், நீதி கிடைத்தும் தனது மகளைப் பார்க்க முடியவில்லை! 

இப்போது சட்ட அமைச்சர் நீதிமன்றத்திற்குப் போங்கள் என்கிறார்! நீதிமன்றம் நீதி கொடுத்தாலும் அதை சமய இலாகா நிறைவேற்றும் என்பதற்கு எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை  என்பதை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

இந்த நாட்டில் மட்டும் தான் சமய இலாகா வானளாவிய அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது!  அதே சமய இலாகா ஜொகூர் மாநிலமாக  இருந்தால் இந்நேரம் வாலை சுருட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருக்கும்!

நாமும் சட்ட அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் வைப்போம். அப்படியே, நீங்கள் சொல்லுவது போல,  நீதிமன்றம் போவோம். அது தனி நீதிமன்றமாக இருக்கட்டும். அனைத்து வழக்குகளும், குறிப்பாக சமயத்திற்கு  ஆள் சேர்க்கும் வழக்குகள்  அனைத்தையும் இந்த நீதிமன்றத்தில் வைப்போம். ஆனால் அதன் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் மேல் போகக் கூடாது என்பது முக்கியம். தீர்ப்புகள் இரண்டு மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். நிறைவேற்றப்பட முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களை வேலையிலிருந்து தூக்குவோம்!

இதெல்லாம் முடியாது, கற்பனை என்பதாகச் சொல்ல முடியாது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள், இங்கு நடப்பதெல்லாம்  அனைத்து வழக்குகளும் இழுத்தடிக்கப்படுகின்றன என்பது தான் உண்மை. அதுவும் குறிப்பாக இந்திரா காந்தியின் மகள் வழக்கு வேண்டுமென்றே இழுத்துடிக்கப்படுகின்றது என்பது  நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த நிலையில் இந்த மூன்று குழந்தைகளின் நிலை என்ன? முதலில் அவரது தாயார் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவாரா என்பதே தெரியவில்லை. அவர்கள் என்ன ராஜ வாழ்க்கையா வாழப் போகிறார்கள்! கட்டாய மதமாற்றம் செய்தவர்கள் அந்த குழந்தைகளுக்கு வேறு  என்ன "கட்டாய"த்தை உருவாக்குவார்களோ!  கடவுள் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்!

நீதிமன்றம் என்பதெல்லாம் வழக்கை முடிப்பதற்கான வழியில்லை! தவறு செய்தவர்கள் இஸ்லாமிய இலாகா.  அவர்கள் சட்டத்தை அலட்சியப்படுத்தியவர்கள்.  ஒரு கஞ்சா பேர்வழியை நம்பி குழந்தைகளை மதம் மாற்றியவர்கள்! தாயிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிற சொரணைக் கூட இல்லாதவர்கள்.

நீதிமன்றம் தேவை இல்லை. நமது கேள்வி எல்லாம் இந்த குழந்தைகளை மத மாற்றுவதற்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? 

சட்டத்தை அலட்சியப்படுத்தியவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் தண்டனை என்ன?            

No comments:

Post a Comment