சமய விவகார அமைச்சர் ஓரு வட்டமேசை விவாதத்திற்காக, வருகின்ற புதன்கிழமையன்று, ஒரு கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார்.
தனித்து வாழும் தாயான லோ சியூ ஹொங்கின் மூன்று குழந்தைகள் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதைப் பற்றியான கூட்டமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
செய்திகளின் மூலம் தெரியவருவது யாதெனில் இது இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டம் என்றே கருத இடமிருக்கிறது. கலந்து கொள்பவர்களில் இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள், விரிவுரையாளர்கள், முப்திகள் ஆகியோர் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
மாநிலத்திலுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் பலர் நாட்டின் சட்டதிட்டங்களை அறியாது மதமாற்றம் செய்கின்றனர். அது மிகவும் வேதனைக்குரியது. பதவிகளில் உள்ளவர்கள் குறிப்பாக முப்திகள் கடைசி நிமிட சட்ட மாற்றங்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். இது முக்கியம்.
மாநில இஸ்லாமிய சட்டங்கள் எங்களுக்கு அத்துப்படி என்று பேசுவது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.
இந்த மாற்றங்களைத் தெரியாதவரை அப்பாவி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அது தான் சமீபத்தில் நடந்தது. அந்த தனித்து வாழும் தாய் மூன்று வருடங்களாக தனது பிள்ளைகளைக் காணாமல் அலைந்து திரிந்திருக்கிறார். அந்த குழந்தைகளைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணமே யாருக்கும் எழவில்லை! காவல்துறைக்கும் வரவில்லை! சமய இலாகாவுக்கும் அது தோன்றவேயில்லை!
மதமாற்றம் செய்ய வேண்டுமென்று காட்டுகின்ற வேகம் குழ்ந்தைகளைப் பொறுப்பாக தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் காட்டவில்லை! சமயம் என்பதை விட்டுவிடுங்கள். மனிதாபிமானம் என்பது கூடவா இல்லாமற் போயிற்று?
இது போன்ற விஷயங்கள் இந்த வட்டமேசை விவாதத்தில் பேசப்படும் அல்லது எழுப்பப்படும் என நம்பலாம். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள்! அது தான் நடந்திருக்கிறது! இப்போது அறிஞர்களுக்கும் அடிசறுக்கும் என்பது தெளிவாகிறது!
சமயம் என்பது எத்துணை உணர்ச்சிமயமான விஷயம் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் கண்கள் திறக்கவே மாட்டேன் என்பது வருத்தம் தான்!
வட்டமேசை விவாதம் என்பது தேவையே!
No comments:
Post a Comment