Sateesh Muniandy Loh Siew Hong (Mother) David Marshel
ஏற்கனவே இந்திராகாந்தி மகள் மதமாற்ற வழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாது நிலையில் (நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குழந்தையை தாயிடம் ஒப்படைக்க மறுக்கும் மாஜி கணவர்) இந்த நேரத்தில அதே பாணியில் இன்னொரு வழக்கும் தலை தூக்கியிருக்கிறது!
தாயின் அனுமதி இல்லாமல் தனது மூன்று குழந்தைகளும் தனது முன்னாள் கணவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்கலாம். காரணம் இதுவரையில் இஸ்லாமிய இலாகா எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றால் அதில் உண்மை இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் மதமாற்றம் செய்யக் கூடாது. இதனை இந்திரா காந்தியின் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை யாரும் மதிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! அல்லது மதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை எனவும் சொல்லலாம்.
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முக்கியமாக இரண்டு அமைப்புக்கள் தங்களது கவனத்தில் கொள்ளவில்லை. ஒன்று அரசாங்கம் இன்னொன்று காவல்துறை. அரசாங்கம் "இது உங்கள் பிரச்சனை! நாங்கள் தலையிடமாட்டோம்!" என்று இஸ்லாமிய இலாக்காவிடம் உறுதிமொழீ கொடுத்திருக்கிறது! காவல்துறைக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை! "இந்திராகாந்தியின் மகளையே நாங்கள் ஒப்படைக்கவில்லை! இதுவும் அப்படி நடக்கலாம்!" என்று இறுமாப்போடு இருக்கிறது!
ஆக, சட்டத்தைப் பற்றியெல்லாம் இங்கு யாரும் கவலைப்படவில்லை! இது இந்தியர்களின் பிரச்சனை தானே! யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் யாரும் பேச மாட்டார்கள்! தேர்தலில் உங்களுக்குச் சீட் இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்று இப்போதே நடுக்கத்தோடு இருக்கிறார்கள்.
எதிர்கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் பேசுவது எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கப்போவதில்லை! கேட்டுக்கேட்டு அவர்களுக்கும் புளித்துப் போய்விட்டது!
பொதுவாக இந்தியர்களின் மதமாற்ற விவகாரம் என்றால் அதனை ஒரு பிரச்சனையாகவே யாரும் கருதவதில்லை. இப்போது இந்த மதமாற்ற விவகாரத்தில் அந்த குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கபடுவார்களா என்பதே சந்தேகத்திற்குரியது. சட்டத்தில் இல்லாததையெல்லாம் போட்டுக் குழப்பியெடுப்பார்கள்! கஞ்சா அடிக்கிற கணவன் சொன்னதையெல்லாம் இஸ்லாமிய இலாக்கா ஏற்றுக் கொள்கிறது. ஆனால் குழந்தைகளைப் பெற்ற தாய் சொல்லுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! நீதிமன்றம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அதனால் அவர்கள் வைத்தது தான் சட்டம்!
ஒன்று புரிகிறது! நீதிமன்றம் சொல்லுவதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை! சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்! அவ்வளவு தான்!
No comments:
Post a Comment