இளைஞர்களே! வாக்களிக்கத் தவறாதீர்கள்!
ஜொகூர் மாநிலத்தில், மாநிலத் தேர்தல் சுறுசுறுப்பு அடைந்துவிட்டது!
வருகிற மார்ச் மாதம் ஜொகூர் , 15-வது சட்டமன்றத் தேர்தல், 12-ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத மாற்றம் முதன் முதலாக இந்த மாநிலத்தேர்தலில் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் அமைகிறது. ஆமாம், 18 வயது மேற்பட்ட இளைஞர்கள் வாக்கு அளிக்கும் தகுதியைப் பெறுகின்றனர்.
இளைஞர்களின் குரல் எப்படி எதிரொலிக்கும் என்பது இது நாள்வரை நாம் தெரிந்திருக்கவில்லை. அதற்கான வெள்ளோட்டம் என்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
நான் இளைஞனாக முதன் முதலாக வாக்களித்த போது PAP வேட்பாளருக்குத்தான் வாக்களித்தேன்! அது ஏனோ இளம் வாக்களர்களுக்கு எதிர்தரப்பினர் தான் ஈர்க்கின்றனர்! அது அன்றைய நிலவரம். இன்றைய நிலவரம் கணிக்க முடியவில்லை!
சமீபகாலமாக நாட்டின் அரசியல் பெரும்புள்ளிகளின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். அம்னோவில் தின்று கொட்டை போட்டவர்களில் பலர் அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தைரியமாகப் பேசுகின்றனர்! அப்படியென்றால் என்ன பொருள்? இளைஞர்கள் ஊழல்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.
கண்டு கொள்ள மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இன்று ஜொகூர் மாநிலத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதெல்லாம் அருகே உள்ள சிங்கப்பூர் தான். ஏன் ஜொகூர் மாநிலத்தால் வேலை கொடுக்க முடியவில்லை? அதனை இளைஞர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கலாம். ஆனால் இளைஞர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள்.
இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருப்பது ஊழல்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஜொகூர் இளைய தலமுறைக்கும் தெரியும்.` இதனை எல்லாக் காலங்களிலும் அவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. முடிவு கட்ட வேண்டும் என்று தான் களத்தில் இறங்குவார்கள்.
இளைஞர் சக்தியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுவும் 18-வயது என்பது மிகவும் கூர்மையான வயது. முதன் முதலாகக் களத்தில் இறங்குகிறார்கள். முதன் மாநிலமாக ஜொகூர். சரித்திரம் படைப்பார்கள் என நம்பலாம்.
இனி வருங்காலங்களில் இந்த இளம் பட்டாளத்தைக் கொண்டு தான் நாடு தலை நிமிர வேண்டும்!
No comments:
Post a Comment