Saturday 12 November 2022

மூன்று துணை பிரதமர்களா?

 

                                                            
                                                      BN Chairman;  Ahmad Zahid Hamidi
தேசிய முன்னணி தனது கொள்கை அறிக்கையில் மூன்று துணைப் பிரதமர்களுக்கான அறிவிப்பு எதனையும் கொண்டு வரவில்லை.

ஏற்கனவே தேசிய முன்னணியின் தலைவர்  ஸாஹிட் ஹமிடி இது பற்றி அறிவித்திருந்தாலும் இதனைப்   பிரதமர்  இஸ்மாயில் சப்ரி புறக்கணித்து விட்டார். 

"தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில்  இந்த செய்தி வரும்வரை இந்த செய்திக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை"  என்பது தான் அவரது கருத்து.  அவர் எதிர்பார்த்தது போல  கொள்கை அறிக்கையில் அது பற்றியான செய்தி எதுவும் வரவில்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி மூன்று  துணைப் பிரதமர்கள் தேவை என்கிறார். ஆனால் பிரதமரோ இஸ்மாயில் சாப்ரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மூன்று துணைப் பிரதமர்கள் தேவை இல்லை என்று அவர் கருதுவதாக  நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் ஸாஹிட் ஹமிடி தேவை என்பதாகக் கூறிவருகிறார்?  இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ?  அதிக எண்ணிக்கையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதாவது முழுமையான வெற்றி பெற்றால், ஸாஹிட் ஹமிடி தான் பிரதமர் ஆவார் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே சமயத்தில் இழுபறி அரசாங்கம் அல்லது குறைந்த எண்ணிக்கையில்  அமைந்தால் இஸ்மாயில் சாப்ரி தான் பிரதமர் ஆவார் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்போது மூன்று துணைப் பிரதமர்கள் தேவை என்பதாக ஸாஹிட் ஹமிடி நினைக்கிறார். அதில் ஒருவர் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர். அந்த தீபகற்ப மலேசியர் அம்னோ தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் அம்னோ தனது பிரதமர்  பீடத்தை  தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார். தான் பிரதமராக வரவும் முடியும் என்பது அவரின் கணிப்பு. 

இஸ்மாயில் சாப்ரி அம்னோ தலைவராக வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனை எட்டுவதற்குப் பல தடங்கல்கள் உள்ளன. இன்னொரு பக்கம் அம்னோ தலைவர் தான் பிரதமராக வரவேண்டும் என்கிற பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாது.  அதுவும் முக்கியம். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்றால் தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே!

சபா, சரவாக் மாநிலங்களுக்கு துணைப் பிரதமர் தேவை என்பதில் எந்த குறையும் இல்லை. ஆனால் தீபகற்ப மலேசியாவுக்குத் தேவை இல்லை என்பதே பொதுவான கருத்து.  அம்னோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதையும் சொல்ல இயலாது.  தேர்தல் முடிவு தெரியும் முன்னரே எதனையும் அறுதியிட்டுக்  கூற முடியாது!

பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment