Saturday 19 November 2022

இன்று "தீர்ப்பு" நாள்!

 

இந்த கட்டுரை வெளியாகும் நேரத்தில் ஏறக்குறைய பல வாக்குச்சாவடிகள் மூடப்படும் நிலையில் இருக்கும். மக்கள் வாக்களித்திருப்பார்கள். மழையோ, வெள்ளமோ வந்தால் மட்டுமே கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதுவும் ஆறு மணியோடு சரி.

பல இடங்களில் மழை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால்  மக்கள் சீக்கிரமாகவே வாக்களிக்க வந்திருப்பார்கள். இன்று விடுமுறை என்பதாலும்  நேரத்தோடு வந்து வாக்களிக்க வேண்டும் என்கிற  மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.

ஒன்றை நாம் நினைவு படுத்துகிறோம். தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் இனி புத்திசொல்லவோ, அறிவுரை சொல்லவோ எதுவுமில்லை.

தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பு. எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். நமக்குப் பிடித்த கட்சியோ அல்லது பிடிக்காத கட்சியோ தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும். அது மக்களின் தீர்ப்பு, அவ்வளவு தான்.

நம்முடைய எதிர்பார்ப்பு எல்லாம் இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும். அது தேசிய முன்னணியாக இருக்கலாம் அல்லது நம்பிக்கைக் கூட்டணியாக இருக்கலாம். அல்லது தொங்கு அரசாங்கம்  அமையும் சாத்தியமும் உண்டு.  ஆனால் தொங்கு நாடாளுமன்றம் ஆபத்தானது! அமையக் கூடாது. அது பல பிரச்சனைகளை உருவாக்கும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அம்னோவுடன் பக்காத்தான் கூட்டணி அமைக்க நேரலாம்.  ஆனால் அதிகாரம் என்னவோ பக்காத்தான் கையில் தான் இருக்க வேண்டும்.  அம்னோ,  பிரதமர் இஸ்மாயிலைப் படுத்திய பாடு நமக்குத் தெரியுந்தானே!

நாம் மக்களுக்கு விடும் அறைகூவல் இது தான். அமைதி காக்க என்பது தான் நாம் விடும் அறைகூவல். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை  ஏற்றுக்கொள்ளுவது தான் நமக்குள்ள ஒரே வாய்ப்பு. முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளுவோம்.

இதனை ஏன் நாம் வற்புறுத்துகிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம், இந்தியர்கள், எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுபவர்கள். நம்மை ஏவிவிட்டுவிட்டு மற்றவன் காணாமல் போய் விடுவான்! நாம் அகப்பட்டுக் கொள்வோம்! ஒரு காசுக்குப் பிரயோஜனம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பவர்கள் நாம்!

அதனால் பெருந்தன்மையோடு எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  அதனைப் பெருமனதோடு ஏற்றுக்கொள்வோம். வம்பு தும்பு எதுவும் வேண்டாம்.

இன்றைய தீர்ப்பு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தீர்ப்பு. தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது. மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பு.

மகேசன் நம் பக்கம் என்பதை நம்புவோம்!

No comments:

Post a Comment