தேசிய முன்னணியின் தலைவர் சாஹிட் ஹமிடி
பொதுத் தேர்தல் முடிவடைந்துவிட்டது.
தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் அதிகத் தீவிரம் காடடியவர் அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் ஏன் அந்த அளவுக்குத் தீவிரம் காட்டினார் என்பதை ஓரளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மழைக் காலம், புயல், வெள்ளம் - இது போன்ற சமயங்களில் தேர்தல் வைத்தால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அத்தோடு சமீபத்தில் நடைபெற்ற மலாக்கா, ஜொகூர் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலின் வெற்றி - அதுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான உந்துதல்களைக் கொடுக்கலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
இது தேர்தலுக்கான நேரம் அல்ல என்று பல்வேறு பக்கங்களிலிருந்து அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டாலும் அது பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அரசியலர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை, ஊடகத்துறையினர் முதல் பல்துறை நிபுணர்கள்வரை பலர் எதிர்ப்புக்குரல் காட்டினர். அனைத்தையும் அவர் புறக்கணித்துவிட்டார்.
சாஹிட் நல்லதைத் தான் நினைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது நாட்டுக்கு நல்லது என்று அவர் நினைக்கவில்லை. தனது கட்சிக்கு அது நல்லது என்று நினைத்தார். நாட்டுக்கு நல்லது என்றால் அவர் நினைத்தது நிறைவேறியிருக்கும். கட்சிக்கு என்று அவர் நினைத்தது மாபெரும் சுயநலம்.
இருப்பினும் அவர் நினைத்தது நிறைவேறவில்லை. தேசிய முன்னணிக்குத் தேர்தல் முடிவுகள் மாபெரும் அடியைக் கொடுத்திருக்கிறது! அதாவது வரலாறு காணாத அடி என்பார்களே அது போன்ற மரண அடி!
இது போன்ற மரண அடியிலிருந்து தேசிய முன்னணி மீளுமா என்று தெரியவில்லை. காரணம் இவர்கள் இதுவரை பேசிவந்த அனைத்தும் பெரிகாத்தான் கட்சியும், பாஸ் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டன! இவர்கள் பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லாமற் போய்விட்டது! இவர்கள் பேசி வந்த ஒன்று: இஸ்லாம் இன்னொன்று 'கிறிஸ்துவம் நாட்டில் பரவுகிறது!" போன்ற விஷயங்கள். இஸ்லாமியர்களைக் கவர இந்த இரண்டு விஷயங்களும் தேவைப்படுகின்றன! வாக்குகளைக் கவர இவைகள் தேவை! இன்றைய நிலையில் இஸ்லாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக இந்த மலாய் கட்சிகள் கூறிவருகின்றன!
ஒரு வேளை இந்தப் பொதுத் தேர்தல் இன்னும் ஓர் ஆண்டுக் காலம் கழித்து நடைப்பெற்றிருந்தால் பொதுத்தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி கூட அமைந்திருக்கலாம். ஓர் ஆண்டுக்கு முன்னரே தேர்தலை நடத்துவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டதும் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
எப்படியோ எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
நல்லதை நினைப்போம்! நல்லது நடக்கும்!
No comments:
Post a Comment