Wednesday 16 November 2022

மித்ரா - ஏன் வாய் திறப்பதில்லை?

 

எல்லாவற்றுக்கும் வாய் திறக்கும் ம.இ.கா.வினர் மித்ரா பற்றி பேசும் போது மட்டும் வாய்மூடி மௌனியாகி விடுகின்றனர்!  அடக்கமாக நடந்து கொள்கின்றனர்!

அவர்கள் 22 மாதம் பக்காத்தான் கட்சி ஆட்சி செய்தார்களே அவர்கள் இந்தியர்களுக்கு என்ன செய்தார்கள் என்று  நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்!  அறுபது ஆண்டு காலம் குறுநில மன்னர்களைப் போல அனைத்தையும் அனுபவித்துவிட்டு 22 மாதத்தைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்! அப்படி ஒரு கேள்வியைக் கேட்கக் கூட  கூச்சப்படவில்லை! அது தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் செயல்!

ஆமாம்! கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கு அவமானம் என்பது  இருக்கும் என்பது நினைப்பது கூட  நமக்கு அவமானம்!

நம்முடைய கேள்வி எல்லாம் இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காக மித்ரா மூலம்  அரசாங்கத்தால்  ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆயிற்று என்பது தான். ஒரு காசு, இரண்டு காசு இல்லை தலைவா! பல கோடிகள்! இதுவரை எத்தனை வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறீர்கள், சொல்ல முடியுமா? அந்தப் பணம் என்பதே  இந்தியர்கள் வியாபாரத்துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட பணம். ஆனால் அந்தப் பணத்தை வேறு வ்ழிகளில் கொள்ளையடித்துவிட்டு 'கம்' மென்று ஒன்றும் தெரியாதவனைப் போல நடிக்கிறீர்களே அது தான் நம்மை வியக்க வைக்கிறது!

இதைவிட இன்னும் ஆச்சரியம் தேர்தலில் கூட, வெட்கம் இல்லாமல்,  நாடாளுமன்றம் போக வேண்டும் என்று  போட்டிப் போடுகிறீர்களே உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா? அந்த அளவுக்கு மரத்துப் போய் விட்டதா?

உண்மையைச் சொன்னால் அரசாங்கம் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரம் வியாபாரிகளை உருவாக்கியிருக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு உதவியிருக்க முடியும். அவர்கள் செய்யும் தொழிலில் வளர்ச்சி பெற பல வழிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற முனைப்பே உங்களிடம் இல்லை. வேறு வழிகளில் உங்கள் 'திறமை' யைக் காட்டி பணத்தைக் கொள்ளையடித்தீர்கள்.

இப்போது 'மித்ரா என்னா ஆயிற்று?' என்று சிறு வியாபாரிகள் கூட கூக்குரல் இடும் அளவுக்கு வந்துவிட்டது. காரணம் வங்கிகள் இந்தியர்களைப் புறக்கணிக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்பாடுகிறது. அப்படியில்லை என்பது நமக்குத் தெரியும். மித்ரா மூலம் ஏதோ சில சலுகைகள் கிடைக்கலாம் என்பதனால் தான் வியாபாரிகள் உங்களை அணுகுகிறார்கள். கடன் கிடைப்பது  சுலபமாக இருக்கும். அதற்காகத்தானே பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன?

ஆனால் இந்தப் பணம் வியாபாரிகளுக்குப் போய்ச் சேரவில்லை. கண்ட கண்ட கசமாலங்களுக்குப் போய்ச் சேர்கிறதைப் பார்க்கும் போது, என்ன செய்வது?, வயிற்றெரிச்சல் தான்! உங்களுக்கெல்லாம் தேர்தல் ஒரு கேடா என்று தான் கேட்க வேண்டியுள்ளது!

வாக்காளர்களே நீங்கள் புரிந்து கொண்டால் சரி!


No comments:

Post a Comment