நாட்டின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று (24.11.2020), மாலை ஐந்து மணி அளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மற்ற மலேசியர்கள் போலவே நாமும் அவரை வாழ்த்துவோம். இந்த வாழ்த்து என்பது வெறும் சம்பிராதயத்துக்காக அல்ல. இது நமது மனதிலிருந்து வரும் வாழ்த்து. கொஞ்சம் அழுத்தமாகவே இந்த வாழ்த்தைச் சொல்லுகின்றோம்.
அரசியலில் ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல மனிதர் பிரதமராக வர எத்தனை முட்டுக்கட்டைகள், தடைக்கற்கள், சிறைத்தண்டனைகள் - அப்பப்பா! சொல்ல முடியாத வேதனைகளை அவர் அனுபவித்துவிட்டார்.
ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அன்வார் பிரதமராக வந்ததும் நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கொஞ்சம் நீதி, நியாயம் கிடைக்கும் என்பது தான் நமது எண்ணமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்தியர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக இருந்த நிலைமை மாறும் என்பதைத்தான் நாம் சொல்ல விரும்புகிறோம்.
வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளுக்குக் கடனுதவி, உயர் கல்விக் கூடங்களில் தேவையான ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் போதுமான வாய்ப்புகள், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள், தாய் மொழிக்கல்வி - இப்படி இது போன்ற முக்கியமான துறைகளில் பிரதமர் கவனம் செலுத்துவார் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.
நமது பொருளாதார நிலை எந்நிலையில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். மலேசியர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த ஒரு விழுக்காட்டிலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம். அதைத் தாண்ட முடியவில்லை. காரணம் அதைக் கண்டுக் கொள்ள ஆளில்லை! அதனால் ஒரு பிற்போக்கான சமுதாயமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் அன்வாரை பிரதமராக வரவேற்பது இந்த காரணங்களால் தான். நமது சமுதாயம் பிற சமுதாயங்களைப் போல தலை நிமிர்ந்து வாழ வேண்டும். நாம் அதிகமாகவே தலைகுனிந்து நிற்கிறோம். தலை நிமிர நல்லதொரு தலைமைத்துவம் தேவை. அது அன்வாரிடம் உள்ளது.
மீண்டும் பிரதமருக்கு வாழ்த்துகள்!
No comments:
Post a Comment