முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர் அவர்களை அப்படியெல்லாம் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.
நாட்டு நலனின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. அதுவும் குறிப்பாக மலாய்க்காரர் மீது நிரம்ப அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். மலாய்க்காரர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ கோடிகள் ஒதுக்கப்பட்டு அவை வெற்றியும் பெற்றன. இல்லை என்று சொல்லவிட முடியாது. ஒரு வேளை ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனாலும் அவர் நல்லதையே செய்தார். நிறைய வர்த்தக நிறுவனங்கள் நாட்டில் செயல்பட்டன. வேலை வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டன. அதில் நாமும் பல வழிகளில் பயனடைந்தோம். அதெல்லாம் நாம் மறந்துவிட முடியாது.
இந்தியர்களுக்கு எந்த அளவுக்குத் தீங்கு இழைக்க முடியுமோ அந்த அளவுக்கு நமது தலைவரோடு சேர்ந்து நம்மை முன்னேற முடியாதபடி செய்ததில் இருவருக்குமே பெரும் பங்குண்டு. இருவர்களுமே இந்தியர்கள்! ஒருவர் தமிழர். ஒருவர் மலபார் மலையாளி. இது தான் வித்தியாசம். இவர்கள் இருவருமே தமிழர் சமுதாயத்திற்குச் செய்த துரோகத்தால் தமிழர்கள் தலைதூக்க முடியாதபடி செய்துவிட்டனர். அது வேறு கதை.
அவரின் இன்றைய நிலை தான் நமக்குக் கவலையளிக்கிறது. சென்ற 2018 தேர்தல் வரை அவருக்கு எந்த வகையிலும் செல்வாக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சில காரியங்கள் அவரைப் படுபாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பொறுப்புள்ள மனிதராக, நீண்ட காலம் நாட்டை வழிநடத்தியவராக, அவரின் வயதுக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவில்லை என்பது தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்பது தான் இன்றுவரை அவரைப்பற்றி பேசப்படுகிறது.
சென்ற முறை, முதல் முறையாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த பெருமை டாக்டர் மகாதீரைத் தான் சாரும். அவர் சொன்னபடி நடந்து கொண்டிருந்தால் நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டிருக்காது. 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்பதாக நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. அது சரியான பழமொழி தான். அவரால் அவரது தொட்டில் பழக்கத்தை இது நாள் வரை மாற்றிக்கொள்ள முடியவில்லை!
ஆனால் அந்தத் தொட்டில் பழக்கம் இந்த அளவுக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அரசாங்கத்தை எப்போது கவிழ்த்தாரோ அன்றிலிருந்து இந்நாள் வரை அது தலை நிமிர முடியவில்லை! இன்னும் குழப்பம் தான். பொதுத் தேர்தல் முடிந்தும் இன்னும் இழுபறி நிலை தான்!
இவர் செய்த துரோகாத்துக்கான பலன் என்ன? முடிசூடா மன்னராக விளங்கிய அவர், அவர் தொகுதியிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார்! அது தான் அவருக்கான தண்டனை! அவரைத் தோற்கடிக்க முடியும் என்பதை யாராலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்!
இதைவிட இழிவு வேறு என்ன வேண்டிக்கிடக்கு?
No comments:
Post a Comment