Friday 18 November 2022

நாளை தேர்தல்!

 

நாளை (19-11-22) சனிக்கிழமை  நமது நாட்டின் பொதுத் தேர்தல். இன்று இரவு வரை பிரச்சாரங்கள்  நீடிக்கும். கடைசிவரைப் போராட்டங்கள் நடக்கும். ஒன்னுமே கிழிக்க முடியாதவன் எல்லாம் என்னால்  கிழிக்க முடியும் என்பான்! தலைவிதியே என்று நாமும் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்! அது தானே ஜனநாயகம் நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம்!

ஆனாலும் நீங்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை இழந்தால் அடுத்த வாய்ப்புக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். நமக்குத் தேவை நீதி நேர்மையான ஓர் ஆட்சி. அதைத்தான் கேட்கிறோம். இந்தியர்களைப் பொறுத்தவரை நமக்கு நியாயங்கள் கிடைத்ததில்லை! எல்லாம் வெறும் வாய்ச் சவடாலோடு சரி! ம.இ.கா.வினர் அதைத்தான் செய்தனர்!  அப்போதும் செய்தனர்! இப்போதும் செய்கின்றனர்!

இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் போட்டி என்னவோ இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான். அது தான் தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும். மற்றவைகள் எல்லாம் உதிரிகட்சிகள். பல கட்சிகள் இந்தத் தேர்தலோடு காணாமற் போய்விடும்! பழைய அம்னோ ஜாம்பவான்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏதோ ஒரு சிலர் தங்களது பழைய செல்வாக்கை நிலைநிறுத்துவார்கள். அவ்வளவு தான்!

ம.இ.கா.வை பொறுத்தவரை இந்தியர்களின் ஆதரவை இழந்துவிட்டது என்பது உண்மை.  இப்போது ம.இ.கா.வை எதிர்க்கிறவர்கள் எல்லாம் முன்னாள் ம.இ.கா.  உறுப்பினர்கள் தான்! காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அந்தக்கால மைக்கா ஹொல்டிங்ஸ் இந்தக்கால மித்ரா வரை அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை! அவர்கள் குடும்பத்தின் வயிற்றுப்பாட்டைப் பார்த்தார்களே தவிர இந்தியர்களை மறந்து போனார்கள்! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிக்கிறார்கள். நமது வீட்டுப் பிள்ளைகள் உள்நாட்டில் படிக்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை! இது தான் இந்தியர்களுக்கு அவர்கள் கொடுத்த முன்னேற்றம்!  விளங்காத ஜென்மங்கள்!

"நாங்கள் தோற்றுப்போனால் இந்தியர்களைப் பிரதிநிதிக்க ஆளில்லையே!" என்று  சொல்லும் அவர்களுக்கு நாம் வைக்கும் குற்றச்சாட்டு:  "இப்போதும் கூட யாரும் இல்லையே!" என்பது தான்.  ம.இ.கா.வால் இனி முடியாது என்கிற நிலையில் தானே இந்தியர்கள் மாற்று கட்சிகளைத் தேடிப் போகிறார்கள் என்பதை ம.இ.கா.வினர் மறந்துவிட வேண்டாம்!

நாம் சொல்ல வருவதெல்லாம்: "மக்களே! எல்லாம் உங்கள் கையில்!" என்பது தான். வாக்கு என்பது இரகசியமானது. அதனைப் போய் யாரும் நோண்டிப்பார்க்கப் போவதில்லை. அதனால் உங்களுக்கு யார் தேவை என்று நினைக்கீறீர்களோ, யார் அரசாங்கம் அமைத்தால் நல்லது என்று நினைக்கீறீர்களோ, அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.

பக்காத்தான் ஹராப்பான் என்பதே நமது கோரிக்கை!

No comments:

Post a Comment