Friday 25 November 2022

ஒற்றுமை அரசாங்கம் பேர்போடுமா!

 

அரசியல் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிர்! 

அன்வார் பதவி ஏற்பதற்குச் சில மணித்துளிகள் முன்னர்  கூட  முன்னாள் பிரதமர் முகைதீன்  அன்வாருக்குச் சவால் விடுகிறார்! "உங்களுக்குப் போதுமான ஆதரவில்லை!" என்பது தான் அவரது குற்றச்சாட்டு. "நாடாளுமன்றம் கூடும் போது,  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  ஆதரவை,  உங்களால்  நிருபிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் முகைதீன்!

இது ஒரு ஒற்றுமை அரசாங்கம். மாமன்னர் அதன் பின்னணியில்  இருந்து அப்படி ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். முகைதீனின் பெரிக்காதான் நேஷனல் கட்சி பக்காத்தான் கட்சியுடன்  ஒற்றுமையாகப் போக முடியாது என்று முகைதீன் மறுத்துவிட்டார். அதே போல  தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் கட்சியுடன் ஒற்றுமையாகப்  போக வழியில்லை என்று கையை விரித்துவிட்டது.

வேறு  வழி இல்லாததால் தேசிய முன்னணி பக்காத்தான் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதனைக்  குறை சொல்ல வழியில்லை.  தேர்தல் முடிந்துவிட்டது. அரசாங்கம் அமைய வேண்டும். யார் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதை இழுத்தடிக்க முடியாது. அதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்பது மாமன்னருக்கு ஏற்பட்ட நெருக்கடி.  அவர் தீர்த்து வைத்த முடிவினால் தான்  இன்று அன்வார் இப்ராகிம் பிரதமராக  இருக்கின்றார்.

ஆனால் முகைதீன் தனக்கு ஆதரவு "உண்டு! உண்டு!" என்று சொல்லுகிறாரே தவிர அதனை மாமன்னரிடம் உறுதிப்படுத்த முடியவில்லை! அது தான் அங்குள்ள வில்லங்கம்!

இங்கு நாம் கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்று: அன்வார் இன்னும் பதவி ஏற்காத நிலையில் முகைதீன் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்! "நாடாளுமன்றத்தில் உங்கள் ஆதரவைக் காட்ட முடியுமா?" என்கிற கேள்வியே மிகவும் கேவலமானது! அதுவும் அடுத்த மாதம் டிசம்பர் 19-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் போதே, முதல் நாளே, ஆதரவைக் காட்ட வேண்டும் என்கிறார்!  அன்வார் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதுவும் நாடாளுமன்றத்தில் முதல் தீர்மானமே "எங்கள் பலத்தைக் காட்டுவது தான்" என்று கூறியிருக்கிறார்.

முகைதீனுக்கு ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது கைவந்த கலை! அதை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார்! அவர் பெரும் பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குபவர். நல்ல வியாபாரி! இந்த நேரத்தில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. சட்டம் வந்துவிட்டது அதனால் யாரையும் அவரால் விலை கொடுத்து வாங்க முடியவில்லை! துன்பமோ துன்பம்! பணம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் பயனில்லை!

ஒற்றுமை அரசாங்கம் பேர் போடுமா என்றால் பேர் போடும். இதோ பிரதமர் அன்வார் அறிவித்து விட்டார். "எங்களுக்கு  மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உண்டு"  என்று. இனிமேல் பேசுவதற்கு என்ன உண்டு?

இந்தக் கூட்டணிகளை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது அவரது திறமை! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment