நமது நீண்ட கால கோரிக்கையில் வங்கி வேலை வாய்ப்புகளும் அடங்கும். வங்கிகளில் ஏன் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பது இன்னும் நமக்குப் புரியவில்லை!
இந்தியர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களா அல்லது வங்கியில் பணிபுரிகின்ற அளவுக்கு நமக்குப் போதுமானா கல்வி இல்லையா? அல்லது நாம் தகுதி இல்லாதவர்களா?
எது எப்படி இருப்பினும் இந்த நடைமுறை திருத்தப்பட வேண்டும். ம.இ.கா.வினர் இது பற்றி அக்கறை காட்டவில்லை என்பது தெளிவு. இனி மேலும் இதனை நாம் தொடரவிட முடியாது. குறைந்தபட்சம் நமது இன விகிதாச்சாரப்படி ஏழு விழுக்காடு வேலைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் நான் வங்கிகளோடு தொடர்பில் இருந்தபோது ஒரு குறிப்பட்ட வங்கி ஓரே இந்திய இளைஞரை "ஆபீஸ் பாய்" யாக வைத்திருந்தார்கள்! அவரைத் தவிர வேறு இந்தியர் யாரும் அவ்வங்கியில் வேலை செய்யவில்லை. இது அன்றைய நிலைமை. இப்போது ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் எல்லா வங்கிகளிலும் இந்த விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது தான் நமக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும்.
அரசாங்கத் தலையீடு இல்லாமல் வங்கிகள் இதனைக் கடைப்பிடிக்கும் என்பதை நம்புவதற்கு வாய்ப்பில்லை. இது போன்ற கோரிக்கைகள் இன்னும் பல உள்ளன. இத்தனை ஆண்டுகள் நாம் இது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. ம.இ.கா.வும் அதனை மறந்து போனது!
இனி வருங்காலங்களில் நாம் வாய் மூடிக்கொண்டிருந்தால் வழக்கம் போல நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களைப் பிறர் ஏப்பம் விட்டுவிடுவர்! இனி ஒவ்வொரு விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் உரிமைகள் அனைத்தும் நம்மைவிட்டுப் போய்விட்டன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துவிட்டது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் உரிமைகளை நாம் விட்டுவிடக் கூடாது. அது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். நாம் அதிகமாகவே ம.இ.கா. வினரை நம்பி அனைத்தையும் இழந்துவிட்டோம். அவர்கள் நமது உரிமைகளைக் கேட்க மறுக்கிறார்கள். நம்மிடம் பேசும் போது மட்டும் அவர்களது வீரம் தெரிகிறது! மற்றபடி கோச டப்பாக்கள்!
அடுத்து ஆட்சியமைக்கப் போவது பக்காத்தான் தான் என்பது நிச்சயம். பக்காத்தானில் உள்ள நமது பிரதிநிதிகள் பல பிரச்சனைகளைக் களைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலே இந்த வங்கி பிரச்சனையும் ஒன்று.
பக்காத்தான் கூட்டணியை நம்புவோம்!
No comments:
Post a Comment