Saturday 26 November 2022

இதை என்ன சொல்லுவது?

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் இந்நாள் பிரதமர் அன்வார் இப்ராகிம் இருவருக்கும்  எட்டாம் பொருத்தம் என்பது நமக்குத் தெரியும்.

பொதுவாகவே அன்வார் எல்லார் மீதும் அன்பும், அரவணைத்துக் கொண்டுப் போகும் தன்மையுடையவர். மகாதீரிடம் அந்த பண்பு என்பது கிடையாது. ஒரு வேளை அது அவரது பாரம்பரியமாக  இருக்கலாம்! 

டாக்டர் மகாதிர் மீது அன்வாருக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவரைச் சந்திக்க அவர் எந்த நேரத்திலும் மறுத்ததே இல்லை. அவருக்குரிய மரியாதையை அவர் எப்போதும் கொடுத்து வந்திருக்கிறார். மகாதிர் என்ன தான் புழுதி வாரித் தூற்றினாலும் அதனை அன்வார் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவரை மரியாதைக் குறைவாக பேசியதும் இல்லை. பெரியவர் என்கிற மரியாதை அவர் மீது அவருக்கு எப்போதும் உண்டு.

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  இத்தனை ஆண்டுகள் அன்வார் பிரதமர் பதவிக்கு வர முயற்சி செய்தும் அவரால் வரமுடியவில்லை. தடைக்கல்லாக இருந்தவர் மகாதிர் என்பது அனைவருக்கும் தெரியும். 

டாக்டர் மகாதிர் அவருடைய நாடாளுமன்றத் தொகுதியான லங்காவி  அதனைச் சுற்றிலுள்ள தொகுதிகளில்  தொடர்ந்தாற் போல ஐந்து தவணைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது நமக்குத் தெரியும். அவர் தொகுதியில் அவரை அசைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அசைக்க முடியாத நபர் அவர். அவருடைய செல்வாக்கை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட  முடியாது.

ஆனால் அத்தனை செல்வாக்கும் சரிந்து போனது இப்போது கடைசியாக  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்! பெரும் தோல்வி! ஏன் வைப்புத்தொகையையே இழந்தார்! ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்ட லங்காவி தொகுதியில்  இவர் நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டார்! மிகவும் அதிர்ச்சிகரமான தோல்வி! யாரும் எதிர்பார்க்க முடியாத தோல்வி!

டாக்டர் மகாதிரின் இந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தான் அன்வார் இப்ராகிம் பிரதமராக வர முடிந்தது என்பது தான் அதிசயத்திலும் அதிசயம். அவர் வெற்றி பெற்ற போது இவரால் பிரதமர் பதவிக்கு வரமுடியவில்லை. அவர் தோல்வி அடைந்தார். அன்வார் பிரதமரானார்! மகாதிரின் தோல்விக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் அன்வார் காத்திருந்தாரோ என்னவோ1 ஒருவரின் தோல்வி இன்னொருவரின் வெற்றி! மகாதிர், பிரதமர் அன்வாரைச் சந்திக்க வேண்டுமென்றால் ஒரு தோல்வியாளராகத்தான் சந்திக்க முடியும்! ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நிகழாது என நம்பலாம்!

இப்படி நடந்ததை என்னவென்று சொல்லுவது?  டாக்டர் மகாதிரின் தோல்விக்காகத் தான் அன்வார் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாரோ!


No comments:

Post a Comment