Sunday 27 November 2022

எல்லாம் நன்மைக்குத்தான்!

 

                      பத்து நாடாளுமன்ற உறுப்பினர்,   ப. பிரபாகரன் (பி.கே.ஆர்.)

எவ்வளவு கசப்பானாலும் அதிலும் எங்கோ ஒரு மூலையில் இனிப்பின் சுவை ஒளிந்து கொண்டிருக்கும் என்பதாக சொல்லப்படுவதுண்டு.

அது உண்மை தான்.  இப்படி ஒரு தீடீர்த் தேர்தல் நடந்து, இந்தத் தேர்தல் மூலம் டான்ஸ்ரீ அன்வார் இப்ராகிம்,  நாட்டின் பிரதமராக ஆவார் என்று யாரும்    எதிர்பார்க்கவில்லை.

அதிலும் இப்படி ஒரு தேர்தல் நடத்துவதையே பெரும்பாலானோர் எதிர்த்தோம். இன்னும் ஓர் ஆண்டுக் காலம் இருக்கும் போது 'ஏன் இந்த அவசரம்?' போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன.

உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தவர் என்றால் அது அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி தான். அவரும் அவரைச் சார்ந்த ஒரு சில நபர்களும் தேர்தல் நடத்துவதில் தீவிரம் காட்டினர். என்ன நினைத்து அவர் இப்படி அடம் பிடித்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவரின் கணிப்பு தவிடுபொடி ஆனது என்பது மட்டும் நிதர்சனம். இந்தத் தேர்தல் முடிவை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல் நடந்திருந்தால் ஒரு வேளை இதைவிட இன்னும் சிறப்பாக நம்பிக்கைக் கூட்டணி  தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த அளவுக்கு இழுத்தடிப்புகள் தேவைப்பட்டிருக்காது.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது முதுமொழி. ஸாஹிட் ஹமிடி, கட்சிகளுக்கிடையே,  கலகத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ அது கடைசியில் நன்மையில் முடிந்தது  என்பது தான் இன்பம்  தரும் செய்தி. நிச்சயமாக அது நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு இனிப்பான செய்தி தான்!

ஸாஹிட் ஏற்படுத்திய அந்த கலகம்  அன்வாரை ஓர் ஆண்டுக்கு முன்னரே அவரை அரியணை ஏற வைத்துவிட்டது என்பது தான் எதிர்பாராத  செய்தி! நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்.

அடுத்த  ஆண்டு தேர்தல் என்றால் அதற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாட்டின் சூழல் எப்படிப் போகும், என்ன ஆகும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கொரோனா திடிரென வந்தது போல வேறு ஏதோ ஒரு  கோளாறு தீடிரென வரலாம்! அதனைச் சமாளிக்கும் திறன் முந்தைய அரசாங்கத்திற்கு உள்ளதா என்பது சந்தேகம் தான்.

அதனாலேயே அன்வார் பிரதமராக வந்து பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது தான் நடக்கும். 

ஆமாம்; எனக்குத் தெரிந்தவரை நாடு மிகவும் மோசமான ஒரு சூழலை நோக்கி போய்க்கொண்டிருந்த நேரத்தில்  அன்வார், பிரதமர் பதவியேற்று, நாட்டைக் காப்பாற்ற வந்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். நாட்டைக் காப்பாற்ற வந்த மாமனிதர் அன்வார் இப்ராகிம். அவர் காலத்தில் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.

நடந்து முடிந்தது அனைத்தும் நன்மைக்கே!

No comments:

Post a Comment