Sunday 13 November 2022

சொத்து இல்லே! வெக்கமா இருக்கு!

 

                                        PAS Vice President:   Amar Nik Abdullah

பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும்  என்பதாக சில அரசியலாளர்கள்  கூறி வருகின்றனர். ஒரு சில அரசியலாளர்கள்  அது தேவை இல்லாத வேலை என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் பாஸ் கட்சியினரோ அதனை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்.  பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அமர் நிக் அப்துல்லா,  சொன்னது  அவரது  கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என்பது தெளிவில்லை,  'எங்களிடம் சொத்து எதுவும் இல்லை  அதனால் வெட்கம் அடைகிறோம்'   என்பதாக அவர் கூறியிருப்பது  மக்களிடம் அனுதாபம் பெற கூறுவதாகவே  நமக்குத் தோன்றுகிறது!

பொதுவாக அரசியலாளர்கள்  உண்மையைப் பேச மாட்டார்கள் என்கிற அபிப்பிராயம் நமக்க உண்டு. அமர் நிக் எந்த அளவுக்கு உண்மையைப் பேசுகிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

பொதுவாகவே அரசியலுக்கு வருபவர்கள் பலர் பணம் சம்பாதிக்கவே வருகின்றனர்.  அரசியலுக்கு வரும் சீனர்கள் பெரும்பாலும் பணம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். பணத்தைச் சம்பாதித்து விட்டுத் தான் அரசியலுக்கு வருகின்றனர். இந்தியர்களை எடுத்துக் கொண்டால் நிலைமை வேறு. ம.இ.கா. வே அதற்குச் சாட்சி. "காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி" என்பார்களே அது தான் ம.இ.கா.வின் நிலைமை!  அவர்கள் பெருத்து நம்மை வெறுமையாக்கி விட்டார்கள்!

"சொத்து இல்லை அதனால் வெக்கமா இருக்கு!" என்று பாஸ் கட்சி சொல்லுகிறதே அது நமக்கும் கவலையளிக்கிறது. அரசியலாளர்களுக்குச் சொத்து இல்லை என்றால் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் உங்களுக்கு வாக்களித்தார்களே பொது மக்கள் அவர்களுக்குச் சொத்து வேண்டும், பணம் வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையே சோகமாகி விடும். மக்கள் உங்களைத் தெர்ந்தெடுத்ததே அவர்கள் சொத்து சுகத்தோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான். 

அப்படி அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை  உங்களால் உயர்த்த முடியவில்லையென்றால்  பாஸ் கட்சியினருக்கு அரசியலே தேவையில்லை. ம.இ.கா. காரனாவது தங்களுக்குள்ளேயாவது  பணம் சம்பாதித்துக் கொண்டான்.  இந்தியர்களைக் கைவிட்டான்! பாஸ் கட்சி அவனும் சம்பாதிக்கவில்லை, மக்களையும் சம்பாதிக்கவிடவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்!

நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்லுவதெல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரியாதீர்கள். உங்களை யாரும் சொத்து வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து  சொத்து வாங்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுடைய ஒரு மாத சம்பளத்தில் 10,000 ஆயிரம் 
வெள்ளியாவது உங்களால்  மிச்சப்படுத்த முடியும்.  ஐந்து ஆண்டுகளில் நீங்கள் 6,00,000 இலட்சம்  வெள்ளியைச் சேமித்துவிட முடியும்.

இந்த நிலையில் எங்களிடம் சொத்து இல்லை என்றால் யாராவது நம்புவார்களா!

நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லே!

No comments:

Post a Comment