Thursday 17 November 2022

எதிர்பார்த்த நாள் நெருங்கிவிட்டது!

 

15-வது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. கடைசி நிமிட இனிப்புகள் எல்லாம் வரும்!  அது வழக்கமான ஒன்று தான்.

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் போடுகின்ற வாக்கு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு  நல்லதா, கெட்டதா என்பதைத் தீர்மானிக்கக் கூடியது.  தவறானவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால்  அனைத்தும் தவறாகவே போய்விடும்.

நீங்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது உங்களுடைய எண்ண ஓட்டங்கள் எப்படியிருக்கிறது? நீங்கள் எந்தவொரு பிரச்சனயும் இல்லாமல் திருப்திகரமாக வாழ்ந்து வந்திருக்கிறீர்களா? 

உங்கள் பிள்ளைகள் மேற்கல்வி பயில நீங்கள் தானே பணம் போடுகிறீர்கள்? முழுமையான பணம் கட்டி படிக்க வேண்டிய நிலையில் தானே இருக்கிறோம். நாம் ஏழையோ, இரங்கத்தக்கவர்களோ நாம் தானே அங்கும் இங்கும் ஓடி பணத்தைக் கொண்டு வரவேண்டும். நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் நாம் தானே அலைய வேண்டியிருக்கிறது.

நமது குழந்தைகள் பரிட்சையில் முதல்தர புள்ளிகள் எடுத்திருந்தாலும்  நமக்கு ஏன் கல்வி மறுக்கப்படுகிறது? குறிப்பாக மெட்ரிகுலேஷன் ஏன் நமக்கு எட்டாக் கனியாக இருக்கின்றது?  நமது குழந்தைகள் நல்ல மார்க் எடுக்கிறார்கள். ஆனால் நல்ல மார்க் என்பது அளவுகோள் அல்ல என்கிறது கல்வி அமைச்சு! அப்படியென்றால் எது அளவுகோள்? குறைவான மார்க் எடுத்திருந்தால் கூட நாம் மறந்துவிடலாம். நல்ல மார்க் என்கிறபோது....?  அந்த ஏமாற்றத்தை  நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இத்தனை ஆண்டு காலம் ஆளும் இந்த அரசாங்கத்திற்கு எதனால் ஒரு கொள்கையை வாரையறுக்க முடியவில்லை?  கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை மறுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

இந்த நாட்டில் பிறந்த நம் உறவுகள் எத்தனை பேர் அடையாளக்கார்டு இல்லாமால், அடையாளங்களே இல்லாமல் நாடற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுந்தானே?  அவர்களிடம் அனைத்து அடையாளங்களும் இருந்தும் அவர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது?  அது ஏன் அவர்கள் சாகிற காலத்தில் குடியுரிமை கொடுக்கப்படுகிறது?  அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்றால் உடனடியாகக் கொடுக்க வேண்டியது தானே? மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

இப்படித்தான் பல வழிகளில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். அரசாங்க அலுவலகங்களுக்குப் போனால் ஏதாவது ஒரு வேலை உருப்படியாகச் செய்ய முடிகிறதா? எல்லாவற்றிலும் தடங்கள்! தகுதி இல்லாதவர்களை வேலைகளுக்கு அமர்த்தி நம்மைத் தகுதியற்றவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

நாம் செய்கின்ற வேலைக்கும் மற்ற இனத்தவர் செய்கின்ற வேலைக்கும்  என்ன வித்தியாசம்? ஆனல் நமக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவது ஏன்? எல்லாவற்றிலும் வேறுபாடுகள் இருப்பது ஏன்?

இப்படிப்பல கேள்விகள். இப்படித்தான் வாய் இல்லாப் பூச்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

நமது மக்கள் நலம் பெற, எதிர்காலம் சிறப்புற அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்கே வாக்களிப்போம்!

No comments:

Post a Comment