Wednesday 23 November 2022

எத்தனை நாளைக்கு இழுப்பது?

 

எதிர்பார்த்த தேர்தல் முடிந்துவிட்டது. முடிந்து நான்கு நாளாகிவிட்டது. 

ஆனாலும் பிரதமரில்லை! பிரதமர் ஒருவரை இன்னும் தேர்ந்தெடுக்க  முடியவில்லை. நாட்டில் இப்படி ஒரு நிலைமை நடப்பது இது தான் முதல் முறை!

இத்தனை ஆண்டுக்கால தேர்தலில் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாத ஒரு தேர்தல் என்றால்  அது தான் இந்தத் தேர்தல். இத்தனை ஆண்டுக் காலம் இப்படி ஒரு நெருக்கடி நிலையை நாம் பார்த்ததில்லை!

தொங்கு நாடாளுமன்றத்தை இப்போது தான் முதன் முதல் இந்த நாடு சந்திக்கிறது. இத்தனை ஆண்டுக் காலம் பார்க்காத ஒன்றை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது!

மலேசியர்களாகிய நமக்கு இது புது அனுபவம். வேறு நாடுகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். நமக்குத் தெரியவில்லை.

தொங்கு நாடாளுமன்றம் என்கிறார்களே இப்போது நமக்குப் புரிகிறது. ஓர் அரசாங்கத்தை அமைக்க எத்தனை இழுபறி! ஒருவன் முன்னுக்குப் போனால் ஒருவன் பின்னுக்கு இழுக்கிறான்! ஒருவன் பின்னுக்குப் போனால் ஒருவன் முன்னுக்கு இழுக்கிறான்! நேற்று ஆதரவு கொடுத்தவன் இன்று கேட்டால் நாளை வா என்கிறான்! சவடால் விடுகிறான்! சாவடிக்கிறான்!

இந்த நேரத்தில் நம் மாமன்னர் தனது அதிகாரத்தைக் காட்ட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையான மலேசியர்களின் விருப்பம். இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மாமன்னரின் அதிகாரம் என்ன என்பதை அவர் காட்ட வேண்டும். நமக்கு அவரின் அதிகார எல்லை எதுவரை என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனால் மாமன்னர் தனது அதிகாரத்தைக் காட்ட வேண்டும். நிச்சயமாக அவருக்கு அதிகாரம் உண்டு. அதில் ஏதும் சந்தேகமில்லை. அவரது எல்லை என்பது குறுகியது என்பதாக நாம் நினைக்கவில்லை.

அரசியல்வாதிகள்  ஒரு பைத்தியக்காரக் கூட்டம்! சயநலமிக்க ஒரு கூட்டம்! பணம், பணம் என்று அலைகிறக் கூட்டம்! நல்ல வேளை! அவர்களுக்கு இப்போது அங்கும் இங்கும் தாவ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கட்சித் தாவுதல் சட்டம் வந்த பிறகு இந்தத் தவளைகளால் எதுவும் செய்ய இயலாத ஒரு நிலை. இல்லாவிட்டால் இந்த நேரத்தில் கோடி கோடியாகப் பணம் புரளும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்! 

இப்போது இவர்களால் ஏதும் செய்ய இயலாத நிலை. அதனால் மிகவும் யோக்கியர்களாக நடந்து கொள்கிறார்கள்! மற்றபடி இவர்கள் யோக்கியர்கள் என்பதாக கனவில் கூட நினைத்துவிட வேண்டாம்!

பிரதமர் இல்லாத சூழல் இன்னும் எத்தனை நாள்கள்  நீடிக்கும் என்பது தெரியவில்லை. அதை இழுத்துக் கொண்டும் போக முடியாது. ஒரு முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் அது நாட்டை பாதிக்கும்.

இப்போது அது மாமன்னரின் கையில் இருக்கிறது. சீக்கிரம் அதற்கான முடிவு அவரிடமிருந்து வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment