Wednesday, 31 May 2023
மன அமைதியே முக்கியம்!
Tuesday, 30 May 2023
தமிழர்களே! நமது முன்னேற்றமே நமக்கு முக்கியம்!
தோழர்களே! தவறாக நினைக்க வேண்டாம். நமது முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
தமிழ் திரைப்படம் ஒன்றின் ஷூட்டிங் இப்போது ஈப்போவில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதம் அதன் ஷூட்டிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் வந்த வேலை சிறப்பாக நடைபெற வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.
நடிகர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் அவர்களோடு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் எல்லாக் காலங்களிலும் உள்ள ஒரு பழக்கவழக்கம் தான். புதிது ஒன்றுமில்லை.
வந்திருப்பவர்களை சும்மா நடிகர்களாக மட்டும் பார்ப்பது மட்டும் தான் நமது கடமை என்பதாகப் பார்க்க வேண்டாம். அந்த இடத்தைப் பிடிக்க அந்த நடிகர்கள் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
இப்போது நமது இளைஞர்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். உழைக்காமலே முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் என்றுமே நடப்பதில்லை.
கொரோனா காலத்தில் யார் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும். நமது சமுதாயத்திற்குத் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. வேலை இல்லை. கையில் இருப்பு இல்லை அதனால் கையில் காசில்லை. ஒரு சில நல்ல உள்ளங்கள் அதாவது கையில் இருப்புள்ள நல்ல உள்ளங்கள், உதவிகள் செய்தனர்.
நாம், இந்த நடிகர்களை, வெறும் நடிகர்களாகப் பார்க்கக் கூடாது. இந்த உயரத்திற்கு வர எந்த அளவுக்கு அவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த உழைப்பைத் தான் நாம் அவர்களிடாமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதனை மறந்து விடுகிறோம்.
சான்றுக்கு நடிகர் யோகி பாபு ஐந்துக்கும் பத்துக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் அல்லாடிக் கொண்டிருந்தவர். நடிகை ஒருவர் கை கொடுக்க பின்னர் அவர் காமடி நடிகராக மாறிவிட்டார். ஒரு ஸ்டண்ட் நடிகர் காமடி நடிகராக வேண்டுமென்றால் எத்தகைய உழப்பு வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். சினிமா உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். அதில் வெற்றி பெற கடுமையான உழைப்பு வேண்டும். அவர் மட்டும் அல்ல கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதியும் எத்தனை தடங்கல்களையும் தாண்டி இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார் என்பதெல்லாம் நமக்குப் பாடங்கள்.
இவர்களின் முன்னேற்றத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். நம்மையும் நாலு பேர் மதிக்க வேண்டும். மெச்ச வேண்டும். வாழ்க்கையில் உயர வேண்டும். வாழ்க்கை நெடுகிலும் நாம் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை! நமக்கும் நாலு பார்வையாளர்கள் இருக்கும் அளவுக்கு நமது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்!
Monday, 29 May 2023
நல்ல தலைவராக இருங்கள்!
சமீப காலங்களில் ஒரு அரசாங்க சார்பற்ற சங்கத்தைப் பற்றியான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
நமக்கோ அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. குற்றம் சாற்றுபவரோ ஒரு வழக்கறிஞர். ஆனால் ஒரு வழக்கறிஞர் என்பதாலேயே அவரைப் பற்றி நம்மால் உயர்வாக நினைத்துவிட முடியாது. பொதுவாகவே வழக்கறிஞர்களைப்பற்றி நாம் ஓரளவாவது அறிந்து தாம் வைத்திருக்கிறோம்.
நாம் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அதில் முக்கியமான ஒன்று: "மக்களை ஏமாற்றாதீர்கள்" என்பது மட்டும் தான். இந்த அறிவுரை அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல எல்லா இயக்கங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் தான்.
நமது சமுதாயத்தினரை ஏமாற்றுவது எளிது என்பது பொதுவான கருத்து. என்ன தான் இந்தியர் என்று சொன்னாலும் கடைசியில் ஏமாளி ஒரு தமிழனாகத்தான் இருப்பான். இன்று இந்திய சமுதாயத்தில் ஏமாற்றப்படுபவர்கள் என்றால் அது தமிழர்கள் தான். தமிழர் சமுதாயம் இன்னும் இளைத்தவன் என்கிற நிலையிலேயே தான் இருக்கிறோம். வலுத்தவன் நிலைக்கு மாற வேண்டும் என்பது தான் நமது ஆசை.
நமது தலைவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ஒருவன் இளைத்தவன் என்பதற்காக ஏமாற்றாதீர்கள். அந்தக்கால மைக்கா ஹோல்டிங்ஸ் எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள். அதிகமான பங்குகளை வாங்கியவர்கள் தமிழர்கள். ஏமாற்றியவர்களும் தமிழர்கள். ஏமாற்றியவர்கள் தமிழர்கள் என்று சொன்னாலும் அதற்குத் தூபம் போட்டவர் ஓரு மலபாரி என்பதும் உண்மை. சரி அப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவரின் கடைசி காலம் எப்படி இருந்தது? மெச்சும்படியாக இருந்ததா?
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் சொத்துகளைக் கொள்ளையடித்தவர்களுக்கு விடுக்கப்பட்ட சாபங்கள் இன்றோ நாளையோ மறைந்து விடாது. அது மூன்று, நான்கு தலைமுறைவரை நீடிக்கும் என்கின்றன மறை நூல்கள். அது உண்மை. எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
தலைவர்களே! நீங்கள் சேவை செய்ய வந்திருக்கிறீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சேவைகளைச் செய்து பெயர் வாங்குங்கள். இந்தியர்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை நிறையவே வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க நமது தலைவர்கள் முயற்சி செய்யவில்லை. தமிழர்களுக்குத்தான் கிடைக்கவில்லையே தவிர மற்ற இனத்தவர்களுக்கு அந்த செய்திகள் கிடைத்துவிடுகின்றன. எப்படி? தலைமைத்துவம் தமிழரின் கையில் இல்லை என்பது தான் அதன் பொருள்!
எல்லா வகையிலும் நாம் - தமிழர்கள் - வஞ்சிக்கப்படுகிறோம். எந்த இயக்கமாக இருந்தாலும் சரி, கோவில் நிர்வாகமாக இருந்தாலும் சரி - தலைமைப் பொறுப்பு என்னவோ தமிழர்களிடம் தான் இருக்க வேண்டும். அப்போது தான் தமிழர்கள் பயன் பெற முடியும். மற்றவர்களிடம் போகும் போது பிற இனததவர் தான் பெரும்பாலும் பயன் பெறுகின்றனர். தமிழர்களிடம் எந்த ஒரு செய்தியும் போய்ச் சேருவதில்லை.
தமிழர்களாக மட்டு அல்ல நல்ல தலைவராகவும் இருங்கள்! அதுவே நமது செய்தி!
Sunday, 28 May 2023
நடுநிலை மையம்!
முஸ்லிம்- முஸ்லிம் அல்லாதார் பிரச்சனைகளைக் கலைய நடுநிலை மையம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று இஸ்லாமிய விவகார , பிரதமர் துறை அமைச்சர் முகமட் நயிம் மொக்தார் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
Saturday, 27 May 2023
உணவகங்களில் புகை பிடிக்காதே!
Friday, 26 May 2023
பாராட்டுகிறோம்!
எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்; முத்தமிழ் செல்வி
Thursday, 25 May 2023
குப்பைகளை எரிக்க வேண்டாம்!
வீட்டுக்கு வெளியே குப்பைகளை எரிக்கும் பழக்கம் நம்மிடம் எப்போதுமே உண்டு.
எதற்கும் காலம் நேரம் வேண்டும் என்பார்கள். சும்மா நினைத்துவிட்டால் உடனே நெருப்பைப் போடு! குப்பைகளை எரி! என்று இருந்துவிட முடியாது.
அதுவும் இப்போது நாம் வாழும் தாமான்களில் குப்பை எரிப்பதற்கென்று எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளைத் தொட்டிகளில் போட்டு வைத்து விட்டால் குப்பை லோரிகளில் குப்பைகளை எடுத்துச் சென்று விடுவார்கள். அதனால் எரிக்கின்ற வேலைகள் நமக்கு வேண்டாம் என்பதற்காகத்தான் எரிப்பதற்கு எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை.
ஒரு சிலர் என்ன சொன்னாலும் அடங்குவதில்லை. எரித்தால் தான் ஒரு நிம்மதி வரும். அப்படியென்றால் தீயை மூட்டிவிட்டு அது அனையும்வரை அருகிலேயே அமர்ந்து கொள்ள வேண்டும்! எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தீடீரென்று காற்றடித்தால் தீ வேகமாகப் பரவக் கூடிய சாத்தியங்கள் உண்டு. அந்த நேரத்தில் தீ எல்லை மீறுவதுமுண்டு! நல்ல நேரம் என்றால் ஒன்றுமில்லை! கெட்ட நேரம் என்றால் எல்லாமே வரும்!
நம்முடைய ஆலோசனை என்னவென்றால் வெய்யில் காலங்களில் தீ இடும் சம்பவங்களைத் தவிர்த்து விடுங்கள். எதுவும் ஆபத்துக்குள்ளாகலாம். பக்கத்து வீட்டுக்காரன் கார் கூட சேதமடையலாம்.வெய்யில் காலங்களில் இது போன்ற தீ விளையாட்டுகளை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவது நல்லது.
ஆபத்துகள் சொல்லிவிட்டு வருவதில்லை. அதுவே துரதிருஷ்டம்! ஆபத்து வரும்போது பக்கத்தில் யாரும் ஆளில்லை. அதான் சொல்லுவார்களே! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! அந்தக் கதை தான். ஆள் இருந்தால் கூட தீ பரவிவிட்டால் அப்புறம் கதை வேறு!
அதுவும் தாமான்களில் வாழ்பவர்கள், அதுவும் வெய்யில் காலங்களில், முற்றிலுமாக தீ மூட்டுவதை தவிர்த்து விடுங்கள். மழைக் காலங்களில் தீ வேகமாகப் பரவுவதில்லை. எப்படியோ தப்பித்து விடுகிறோம். அதனையே வெய்யில் காலங்களில் செய்யாதீர்கள்.
குப்பைகளை எரிப்பது நமது வேலையல்ல. அதற்கென்று ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த இடத்திற்குக் கொண்டு சென்று எரிக்க வேண்டுமோ அங்கே கொண்டு சென்று எரிப்பார்கள். ஆளாளுக்கு எல்லா இடங்களிலும் எரிப்போம் என்றால் அப்புறம் சட்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும்!
Wednesday, 24 May 2023
விற்பனை குறைந்தது!
பழங்களின் அரசன் என்றால் அது டுரியான் பழமாகத்தான் இருக்க வேண்டும். அதன் சுவையைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதனை அறியாதவர்கள் நாற்றமடிக்கிறது என்பார்கள்! நம்மைப் போன்ற உள்ளுர் வாசிகள் அந்த மணத்தை ஏந்தக் காலத்திலும் மறப்பதில்லை.
பழங்களின் அரசனுக்கு இப்போது நம்மைப் போலவே சளிகாய்ச்சல் வந்து விட்டது! ஆமாம், நாம் தான் மழை வெய்யில் என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அடித்தால் ஒரே மழை! அடித்தால் ஒரு வெள்ளம்! அடித்தால் ஒரே வெய்யில்! அது நம்மைப் போன்ற மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை. பழவகைகளையும் பாதிக்கின்றன.
பழவகைகள் என்னன்ன பாதிப்புகளை அனுபவிக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. உற்பத்தியாளர்களுக்குத் தான் தெரியும். இப்போதைக்கு நமக்குத் தெரிந்தது டுரியான் பழம். அவர்கள் தான் வெளியே வந்து தங்களது குமுறல்களைக் கொட்டியிருக்கின்றனர்.
வெய்யிலின் தாக்கம் எந்த அளவுக்கு நம்மைப் பாதித்திருக்கிறதோ அதே அளவு டுரியான் பழங்களையும் பாதித்திருக்கிறது. ஏற்கனவே டுரியான் பழம் என்றாலே "ரொம்ப உஷ்ணம்" என்று நாம் சொல்லுவதுண்டு. வெய்யிலின் பாதிப்பு என்பது ஏற்கனவே நமக்குண்டு. இதுவும் உஷ்ணம் அதுவும் உஷ்ணம் என்றால் எப்படி சாப்பிடுவது?
உண்மையில் இது வெய்யில் காலம் என்பதால் மக்கள் டுரியான் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கிற ஓர் அளவுகோளை நாம் வைத்திருக்கிறோம். அதனை மீறியும் நம்மால் சாப்பிடவும் முடியாது. டுரியான் என்பது உஷ்ணம் தானா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டபின்னர் உடல் உஷ்ணமாக இருப்பது தெரியும். என்னைப்போன்றவர்கள் டுரியான் சாப்பிட்ட பிறகு சோறு சாப்பிட்டு விடுவோம். அதனால் உஷ்ணம் தெரிவதில்லை. அது தான் எனக்குத் தெரிந்த வழி! இல்லாவிட்டால் தூக்கமே வரமால் போய்விடும்!
இந்த ஆண்டு வெய்யிலின் தாக்கத்தால் டுரியான் பழங்களின் விளைச்சலும் குறைந்துவிட்டதாகவும் தெரிகிறது. குறைவான விளைச்சல் என்றால் பழங்களின் விலை ஏற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதிகமான உஷ்ணத்தால் வாங்குபவர்களும் குறைந்துவிட்டனர். இது தற்போதைய நிலை. அவ்வளவு தான்.
ஆனால் எதனையும் முடிந்த முடிபாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பழங்கள் இப்போது தான் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது ஆரம்ப கட்டம் தான். போகப் போக சூடு பிடிக்கும். மலேசியர்கள் அப்படியெல்லாம் டுரியான் பழங்களைக் கைவிட்டுவிட மாட்டார்கள்!
வெகு விரைவில் விற்பனை அதிகரிக்கும் என நம்பலாம்!
Tuesday, 23 May 2023
சீனர்கள் கட்சியா??
Monday, 22 May 2023
கட்சி மாறுவாரா கைரி?
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பற்றிய செய்திகள் சமீபகாலமாக தொடர்ந்தாற் போல வந்து கொண்டிருக்கின்றன.
Sunday, 21 May 2023
நாய்களும் உயிர்கள் தான்!
நாய்களைக் கொல்லுவதையே தொழிலாகக் கொண்ட அரசாங்க ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களைப்பற்றியான ஏகப்பட்ட புகார்கள் வந்தாலும் அது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதாக இல்லை! அவர்களது வேலையை அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான்!
ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான செய்தியைக் கேட்டு அதிர்ந்து தான் போனோம். வயதான மனிதர் ஒருவர் "எனது நாயைப் பிடிக்காதீர்கள்!" என்று கெஞ்சியும் அந்த ஊழியர்கள் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக வளர்க்கும் ஒரு பிராணியை விட்டுப் பிரிய அந்த 85 மனிதரால் முடியவில்லை. அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது அந்த வயதான மனிதர் தவறி கால்வாய்க்குள் விழுந்து மரணமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பட்டாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
நாம் சொல்ல வருவதெல்லாம், நாய் தான் என்றாலும் கூட, கொஞ்சம் அந்த ஊழியர்களுக்கு மனிதாபிமானம் இருக்க வேண்டும். ஒரு சிலர் நாய்களைக் தங்கள் குழந்தைகளைப் போல வளர்க்கின்றனர். அந்த மனிதர்களின் குரலுக்கு அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு நாய்களைச் சுட்டுத தள்ளுவதும், வீதிகளில் கட்டி இழுத்துக் கொண்டு போவதும் மிக மிக மனிதாபிமானமற்றச் செயல். சரி மனிதாபிமானம் தான் இல்லை. நாய்பிமானமாவது இருக்க வேண்டும்!
அந்த ஊழியர்களின் அதிகாரிகளும் எதனையும் கண்டு கொள்வதில்லை. நாய்களை அடித்தும், இழுத்தும்கொண்டு போவதை, துன்புறுத்துப் படுவதை புகார் அளித்தாலும், ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் எல்லாமே வீண் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
ஒன்று நமக்கு விளங்குகிறது. மனிதன் விலங்காக மாறிக் கொண்டிருக்கிறான். விலங்குகள் மனிதனாக மாறிக் கொண்டிருக்கின்றன! அந்த அளவுக்கு விலங்குகள் பாசத்தைக் கொட்டுகின்றன. மனிதனுக்கு எதுவுமே இல்லை. ஒரு ஜடம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
எப்படியோ ஓரு மனிதரின் உயிர் போனது போனது தான். அதே போல அவரது நாய் மட்டும் என்ன வாழவா போகிறது
Saturday, 20 May 2023
பள்ளி விடுமுறையில் மாற்றம்!
பள்ளி விடுமுறை நாள்களில் மாற்றம் ஏற்படுவது வெகு தொலைவில் இல்லை.
நீண்ட காலமாக பள்ளி விடுமுறை என்றாலே பல குழப்பங்கள். எப்போது பள்ளி தொடங்குகிறது, எப்போது விடுமுறை எதனையும் நிச்சயிக்க முடியவில்லை.
கடந்த சில வருடங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பதில கல்வி அமைச்சுக்குத் தலைவலி தான் அதிகம். கோவிட்-19 ஒரு பக்கம் நாட்டையே சீரழித்துவிட்டது. விடுமுறையில் தடங்கல். மழை, புயல் வந்து இன்னொரு தாக்குதலை ஏற்படுத்தி நாட்டை நிலைகுலையச் செய்துவிட்டது. மீண்டும் தடங்கல். இப்போது வெயில் ஒரு பக்கம் மண்டையைப் பிளக்கிறது. மீண்டும் தடங்கல். காற்றுத் தூய்மைக்கேடு என்பது ஒரு பக்கம். பிள்ளைகள் பள்ளிகளுக்கு வெளியே விளையாட அனுமதியில்லை.
உண்மையைச் சொன்னால் நான் படித்த காலகட்டங்களில் இப்படி எந்த ஒரு பிரச்சனையையும் நாங்கள் எதிர்நோக்கவில்லை. மழை, வெயில் என்பதெல்லாம் மிகச் சாதாரண விஷயமாகத்தான் இருந்தது. அப்படி எந்த ஒரு தொல்லையையும் நாங்கள் சந்தித்ததில்லை.
ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். நான் பள்ளிக்குச் சென்றது பேரூந்தில் தான். அந்தப் பாதை நெடுகிலும் ரப்பர் தோட்டங்கள். ரப்பர் மரங்கள் நெடுகிலும் நிறைந்திருக்கும். என்ன தான் காற்றோ, மழையோ, வெய்யிலோ, அந்த ரப்பர் மரங்கள் தான் அந்த நாசத்தை ஏற்றுக் கொள்ளும். மக்களுக்கு அதனால் அதிகப் பாதிப்பில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை தேவை இல்லை. மனிதர்களுக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
இப்போது பார்க்கிறேன். அந்த மரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. நாடு அபிவிருத்தி ஆகும் போது அது இயல்பானது தான் என்கிறார்கள். அதனால் மழை, காற்று, வெயில் - அனைத்துமே இப்போது மலேசியர்களுக்கு இயல்பாகிவிட்டது! இனி மேல் அதனைச் சரி செய்யவும் வழி ஏதுமில்லை.
2026 - ம் ஆண்டு பள்ளி தவணை இனி ஜனவரியில் தொடங்கும் என்பதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியே நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பமும் கூட. மீண்டும் பழைய முறைக்கே திரும்புவது சரியானதாகவே நமக்குப்படுகிறது.
தேவை இல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்தி இப்போது பழைய நிலைமையே சிறந்தது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம்!
Friday, 19 May 2023
இது ஏன் நடக்கிறது?
வேலைக்கு ஆள் தேவை. ஆனால் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க தேவையில்லை என்றால் எத்தனை ஆனந்தம்!
ஒரு சில இந்திய உணவகங்களில் இதனைப் பார்த்தோம். இல்லையென்று யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே தமிழ் நாட்டினர் மலேசிய வருவதைத் தவிர்க்கின்றனர். இப்போது அரபு நாடுகளுக்குச் செல்வது உத்தமம் என்று நினைக்கின்றனர். எந்த நாடுகளுக்குப் போனால் என்ன சரியான ஆவணங்கள் இன்றி போனால் எங்குப் போனாலும் தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்! பயமுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்!
ஒரு சில பெரும் நிறுவனங்கள் கூட தங்களது தேவைக்கேற்ப வெளிநாட்டுத் தொழிலாளர்களை எடுப்பதில்லை. கூடுதலாக எடுப்பதும் அவர்களுக்கு வேலைகளைக் கொடுக்காமல் இழுக்கடிப்பதும் சாதாரணமாகவே நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
பெரும் நிறுவனங்கள் அதனைச் செய்யாவிட்டாலும் அவர்கள் நியமித்திருக்கும் இடைத்தரகர்கள் அதனைச் செய்யத்தான் செய்கின்றனர். தொழிலாளர்களை இங்கு வரவழைத்த பின்னர் தான் அந்தத் தொழிலாளர்களுக்கான வேலைகளைத் தேடி அலைகின்றனர்!
வேலை கிடைக்காவிட்டால் அவர்கள் தங்குவதற்கு வசதிகள் இல்லை. சம்பளம் இல்லை. ஏற்பாடுகளைச் செய்த இடைத்தரகர்கள் எங்கேயாவது மறைந்து போய் விடுகின்றனர். பிரச்சனைகள் வரும் போது ஓடி ஒளிந்து கொள்கின்றனர்!
அந்த சமயத்தில் தான் ஏதோ ஒரு வேலையை அந்த நிறுவனங்கள் அவர்களைச் செய்ய வைக்கின்றனர். எங்கேயாவது தள்ளிவிட்டால் போதும் என்கிற நிலைமைக்கு அவர்கள் வந்து விடுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏதோ ஒரு சில கல்வித்தகுதிகளை வைத்துக் கொண்டு நாட்டுக்குள் வருகின்றனர். கௌரவமாக வேலை செய்து பிழைக்கத்தான் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்களை இந்த இடைத்தரகர்கள் அவர்கள் கனவிலும் நினைக்காத வேலைகளை அவர்கள் தலைமீது கட்டிவிடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் இந்த இடைத்தரகர்களுக்குப் போதுமான தண்டனைகளைக் கொடுப்பதில்லை. "எங்களை யார் என்ன செய்ய முடியும்?" என்கிற இறுமாப்பு தான் அவர்களை எப்படி வேண்டுமானாலும் செயல்படத் தூண்டுகிறது.
வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வருவிக்கும் இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையே கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வெளிநாட்டவர்கள் தங்களது சொத்து சுகங்களை விற்று இங்கு வருகிறார்கள். வருகின்ற இடத்தில் ஏமாற்றம், ஏய்ப்பு என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கடுமையான சட்டதிட்டங்கள் இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்கிற நிலைமை தான் ஏற்படும்! அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Thursday, 18 May 2023
ஹாடி என்ன சொல்ல வருகிறார்?
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரு அரசியல் கட்சியின் தலைவரைப் போலவும் நடந்து கொள்வதில்லை! ஓர் ஆன்மீகவாதியாகவும் நடந்து கொள்வதில்லை.
முன்னாள் பிரதமர் டாக்டம் மகாதிர் பல வருடங்களாக என்ன உளறிக் கொண்டிருக்கிறாரோ அவரைப் போலவே இவரும் உளறுகிறார்!
இருவருமே நாட்டின் மலாய்க்காரர்களைத்தான் தங்களது குறியாக வைத்திருக்கிறார்கள்!
மலாய்க்காரர்கள் முன்னேறவில்லையா? பொருளாதாரத்தில் பின் தங்கி விட்டனரா? கல்வியில் முன்னேற்றமடையவில்லையா? அவர்களுக்குச் சளி காய்ச்சல் பீடித்திருக்கின்றனவா? உடல் நலமில்லாமல் இருக்கிறார்களா? கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனரா? குடும்பப் பிரச்சனைகளா? சாமி கும்பிடப் போவதில்லையா? அவர்களிடையே ஒற்றுமையில்லையா?
இப்படி எதனை எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு காரணம் தான் அவர்கள் இருவருக்குமே தெரிந்த காரணம்! ஆமாம்! சீனர்களும், இந்தியர்களும் தான் காரணம்! இந்த ஒன்றைத்தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லவே இல்லை என்பது தான் அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள்!
டாக்டர் மகாதிர் நாட்டின் 22 ஆண்டுகள் தலைமைப்பதவியில் இருந்தவர். உண்மையில் மலாய்க்காரர்களின் தோல்விக்கு அவர் தான் பொறுப்பு எடுக்க வேண்டும். அவர் என்ன செய்தார்? தனது குடும்பத்தை முன்னேற்றவும் தனது நண்பர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும், மலாய்க்காரர்களை ஊழல் பேர்வழிகளாக மாற்றவும் காரணமாக இருந்தவர் டாக்டர் மகாதிர் தான்!
கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர்/இருப்பவர் ஹாடி அவாங். தனது மாநிலத்தில் இவர் எந்த வகையில் முன்னேற்றிருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். முன்னேற்றத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத மாநிலங்கள் என்றால் அவர் கட்சி ஆட்சி செய்கின்ற மாநிலங்கள் தான்!
தனது கட்சி நடுவண் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர மற்றபடி அப்படி அமைக்க என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று அவர் கட்சிக்கோ அவருக்கோ எதுவும் தெரியாது! அது தான் உண்மை!
பதவியில் இல்லையென்றால் டாக்டர் மகாதிர் சொல்லுகின்ற ஒரே காரணம் பணம் படைத்த சீனர்களும் இந்தியர்களும் தான் மலாய்காரர்களுக்குப் போட்டியாக இருக்கிறார்கள் என்பார். அதனால் அவர்கள் முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள் என்பார்! ஹாடி அவாங் வேறு ஒரு கோணத்தில் அதனையே சொல்லுகிறார். சீனர்களும், இந்தியர்களும் ஆன்மீகம் அறியாத ஒரு கூட்டம். அவார்களைப் பார்த்து மலாய்க்காரர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பது தான் இவருடைய குற்றச்சாட்டு!
இவர்கள் இருவருமே மலாய்க்காரர்கள் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களை பிற இனத்தவர்கள் தான் கெடுக்கிறார்கள் என்பது தான் இவர்களது அபிப்பிராயம்!
இவர்களுக்கு சீக்கிரம் ஒரு முடிவு தெரியும்!
Wednesday, 17 May 2023
உண்மை குற்றவாளி யார்?
நாட்டில் வட்டி முதலைகளின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது உண்மையில் நமக்குக் கவலையளிக்கிறது.
காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதாகத்தான் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
சமீபத்தில் கூட ஜொகூர் மாநிலத்தில், கார்களுக்கு வர்ணத்தைக்கொட்டி, அசிங்கப்படுத்தினார்கள் என்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒரே காரணம் தான். கடன் வாங்கியவர்கள் கடனைத் திரும்பக் கொடுக்கவில்லை, என்பதாக வட்டி முதலைகள் அடியாட்களை வைத்து கார்களுக்கு வர்ணத்தைக்கொட்டி அல்லது அவர்களின் வீடுகளில் வர்ணங்களைக் கொட்டி அசிங்கப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நமது நாட்டில் இது ஒரு தொடர்கதையாகத்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதனை ஒழிக்க முடியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் இதனை ஒழிக்கவே முடியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது!
ஆமாம்! ஒழிக்கவே முடியாது தான்! ஒரே காரணம் காவல்துறை வட்டி முதலைகளின் அடியாட்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கிறதே தவிர வட்டி முதலைகள் யார் என்று ஆழமாகப் போவதில்லை. யார் அந்த அடியாட்களை ஏவி விடுகிறார்கள், யாரிடமிருந்து பணம் வெளியாகிறது போன்ற விபரங்களைக் காவல்துறையினர் தேடிப் போவதில்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லாத விஷயம் என்பதாக நினைக்கிறார்கள். ஆனல் அந்தத் தேவை இல்லாத விஷயம் தான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஓர் அடியாட்கள் குழு இவ்வளவு துணிவுடன் செயல்படுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு துணிவுடன் செயல்பட யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்குத் தெரியும். ஆனால் அவர்களால் செயல்பட முடியவில்லை! இப்போது கைது செய்யப்பட்டவர்கள் கூட எந்த அளவுக்குத் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை!
கடுமையான தண்டனை இந்த அடியாட்களுக்குக் கொடுத்தால் அவர்கள் மீண்டும் இந்த தொழிலுக்கே வரமாட்டார்கள் என்பது உண்மை. நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தக் கைது நடவடிக்கையே சும்மா கண்துடைப்பு வேலை என்பது தான். இவர்கள் தொடர்ந்து இதனையே தொழிலாக செய்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
வட்டி முதலைகளின் மீது நடவடிக்கை எடுக்காதவரை இது தொடரத்தான் செய்யும். இது ஒரு பயங்கரவாத அமைப்பு போன்று நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதுவரை இது தொடரத்தான் செய்யும்!
Tuesday, 16 May 2023
இது நியாயமல்ல!
மித்ரா அமைப்பு ஒரு சில புதிய திட்டங்களை அறுவித்திருப்பதில் நமக்கு மகிழ்ச்சியே.
அதே சமயத்தில் டயாலிஸிஸ் என்று சொல்லும் போது ஏதோ இரண்டு மாதத்திற்கு மட்டும் உதவி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பி.40 மக்கள் அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று மித்ரா எதிர்பார்க்கிறது என்பது தெரியவில்லை!
எனினும் அது பற்றி இங்கே நாம் பேசப் போவதில்லை.
மித்ராவின் தலைமத்துவத்தில் இருப்பவர்கள் பேசும் போது மிகவும் சாமர்த்தியமாக ஒரு சில விஷயங்களைக் கடந்து செல்லுகிறார்கள். நமக்கே அதனைக் கேட்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நம்மால் பதில் சொல்ல இயலாதவாறு அவர்கள் பேசுகிறார்கள்! ஒன்றும் செய்ய இயலவில்லை!
மித்ரா அல்லது செடிக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ம.இ.கா.வினர் மீது தான் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விழுகின்றன. பொது மக்களும் பல குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டனர். நம் கண்முன் தான் அனைத்தும் நிகழ்கின்றன ஆனால் திருடர்கள் தப்பித்துவிடுகின்றனர். காரணம் எல்லாமே 'அவர் சொன்னார்! இவர் சொன்னார்!' என்கிற பாணியில் தான் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன! அதனை வைத்து யார் என்ன செய்ய முடியும்?
மித்ரா தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லுவது என்ன? அது தான் அவர்களின் சாமர்த்தியம். நமக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நம்மிடம் கேட்கின்ற ஒரே கேள்வி நம்மை அடித்து நொறுக்கி விடுகிறது. "உங்களிடம் ஆதாரம் இருந்தால் போலிஸுக்குத் தகவல் கொடுங்கள்!" என்பது தான் நம்மைப் பேச முடியாமல் செய்து விடுகிறது. அவர்கள் சொல்லுவதும் நியாயம் தான். அவதூறுகளை அள்ளி வீசலாம். ஆதாரம் இல்லாமல் பேசுவதால் என்ன பயன்?
ஆனால் ஒரு விஷயத்தில் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் கூடவே வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு தான் அவர்களின் லீலைகளை ஆரம்பிக்கிறார்கள்! அதிலும் ஒரு சிலர் இன்னும் ஒரு படிமேல். தமது பிள்ளைகளையே அல்லது உறவுகளை வழக்கறிஞர்களாக்கி விடுகிறார்கள்! அவர்கள் ஆலோசனைப்படியே வெற்றிகரமாக கொள்ளையடிக்கிறார்கள்!
மித்ரா பண மோசடியில் எத்தனையோ பேர் மீது குற்றம் சாட்டினாலும் ஒரு தலைவனைக் கூட எதுவும் செய்ய முடியவில்லையே! அதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே!
ஆக, இன்றைய நிலையில் எந்தத் திருடனையும் கைது செய்வது அவ்வளவு எளிதல்ல. நான் சொன்னது போல கூடவே ஒரு திருடனை வைத்துக் கொண்டே கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்!
ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்லுகிறார்களே அதிலே உண்மை உண்டு. யாரும் யாரையும் ஏமாற்றிவிட முடியாது.
பாரதியார் சொன்னாரே: படித்தவன் சூதும் வாதும் புரிந்தால் ஐயோ! ஐயோ! என்று போவான்! என்பது முற்றிலும் உண்மை.
Monday, 15 May 2023
நாங்களும் வரவேற்கிறோம்!
Sunday, 14 May 2023
புதிய திட்டங்களை வரவேற்கிறோம்!
மித்ரா அமைப்பின் தலைவர் டத்தோ ரமணன் மித்ரா அமைப்பின் சார்பில் பல புதிய திட்டங்ளை அறிவித்திருக்கிறார்.
வரவேற்கிறோம். வாழ்த்துகள். ஆனாலும் இது போன்ற புதிய திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் நாங்கள் கேட்பது ஒன்றும் முதல் முறையல்ல. இதெல்லாம் சர்வ சாதாரணம். யாராவது ஒருவர் மித்ராவின் தலைவர் என்று வந்துவிட்டால் இது போன்ற அறிவிப்புகள் என்பது சாதாரண விஷயம்! நாங்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டோம்!
இது முதல் முறையா, இரண்டாவது முறையா மறப்பதற்கு? பலமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம்! தலைமத்துவ பீடத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் மக்களை மனசாட்சியில்லாமல் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு எல்லாமே அத்துப்படி! சமயங்களில் "என்னடா! படிக்காத காட்டுப்பயல்கள் மாதிரி நடந்து கொள்கிறார்களே!" என்று நாமும் முணுமுணுப்பது உண்டு!
சரி, போனது போனது தான்! கொள்ளையடித்தவன் கொள்ளையடித்தவன் தான்! கொள்ளையடித்ததை அவன் திரும்ப கொடுக்க போவதில்லை! கூடவே ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொண்டு நிதானமாகத் திருடுகிறான்! இப்போதெல்லாம் தனது வீட்டுப்பிள்ளைகளையே கொள்ளையடிப்பவன், வழக்கறிஞனாக மாற்றிவிடுகிறான்! என்ன செய்ய?
இப்போது மித்ராவின் மூலம் நமக்கு என்ன உதவிகள் தேவை என்பதை மட்டும் கவனிப்போம். முதலில் பொருளாதார வளர்ச்சி அடுத்து கல்வி. இதில் இரண்டிலும் எது முதல் எது இரண்டாவது என்கிற பேச்சுக்கு இடமில்லை. உயர் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகம் அனைத்திலும் நமது பி.40 மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். இதில் நமக்கு எந்த சமரசமும் இல்லை.
அடுத்து மேற்படிப்பைத் தொடர வழியில்லாமல், கல்வியில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மிக மிக அவசியம். இப்போது நமது இளைஞர்கள் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் சும்மா தான் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். அடுத்து நாம் பார்க்கும் இடம் என்றால் அவர்களைச் சிறையில் தான் பார்க்க முடியும். இது வருத்தத்திற்குரிய ஒரு செய்தி. எந்த வேலையும் தெரியாமல் சும்மா சுற்றுபவன் அடுத்து என்ன செய்வான்? அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதனால் எப்பாடுப்பட்டாவது அவர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சிஎன்பது மிக மிக முக்கியம். இதனை மித்ரா மிகவும் கடுமையான பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும்.
இனி நமக்கு எந்த ஒரு காரணமும் சொல்லத் தேவையில்லை. செயல்படுத்த வேண்டும். சமயங்களில் தவறாகக் கூடப் போகலாம். ஆனால் ஒவ்வொன்றொக்கும் பயந்து கொண்டு செயல்பட முடியாது. செயல்பட்டால் தான் புரியும் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பது.
மித்ரா இனி நமக்கு எது தேவை, எது முக்கியம் என்று முடிவு எடுக்கிறதோ அதனைச் செயல்படுத்த வேண்டும். நமது வருங்காலத்தை நோக்கி எது நல்லதோ அதனை நோக்கி கவனத்தைச் செலுத்து வேண்டும்.
அதனால் எதனைச் செய்தாலும், சமுதாயத்திற்கு நல்லதைச் செய்தால் நாம் வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!
Saturday, 13 May 2023
மித்ராவின் உதவிகரம்!
"அக்கா நாசிலெமாக்" என்றாலே சமீப காலங்களில் மிகவும் புகழ்வாய்ந்த ஒரு கடையாக மாறிவிட்டது! தெருக்கடை தான் என்றாலும் மக்களின் நெருக்கமான ஒரு கடை என்று அக்கா பெயர் வாங்கிவிட்டார்.
அக்கா அனைத்து மலேசியர்களின் மனங்கவர்ந்தவராகி விட்டார். நாசி லெமாக் என்பது மலாய்க்கரர்களின் பாரம்பரிய உணவு. இந்தியர்களுக்குச் சம்பந்தமில்லாத ஒர் உணவு. அதில் பெயர் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல.
இப்போது மித்ரா எனப்படும் - இந்தியர்களின் வியாபார வளர்ச்சிக்காக - அமைக்கப்பட்ட அரசாங்க அமைப்பு - அக்கா எனப்படும் சங்கீதாவுக்குச் சில உதவிகளைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதற்கு முன்னும் அவர்கள் பலருக்கு உதவிகள் செய்திருக்கலாம். ஆனால் நாம் அறிந்ததோ இது ஒன்று தான்.
இன்று பலருக்கு மித்ரா போன்ற அமைப்புகளிலிருந்து உதவிகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் தங்களது வியாரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இயலாதவர்கள் பலர் இருக்கின்றனர். காரணம் எல்லாமே பணம் தான். வங்கிகளும் இந்தியர்கள் என்றால் கடன் கொடுக்காததற்குப் பல காரணங்கள் சொல்லுகின்றன.
நமக்கு மட்டும் அல்ல மலாய்க்காரர்களுக்கும் அதே நிலை தான். ஆனால் மலாய்க்காரகள் தப்பித்துக் கொண்டனர். கடன் உதவி செய்ய அவர்களுக்கு ஏகப்பட்ட அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன. நமக்கு விளங்காத, புரியாத அரசாங்க அமைப்புகள் பல அவர்களுக்குத் தொழில் செய்ய உதவிகரம் நீட்டுகின்றன. நமக்கும் அரசாங்கம் மித்ரா என்னும் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனாலும் அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தால் இந்தியர்கள் யாரும் பயன் பெற முடியாமல் போயிற்று! இது நமது கதை.
இப்போது ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. நல்லது நடக்கும் என்று தெரிகிறது. இங்கும் அரசியல்வாதிகள் தான் கோலோச்சுகிறார்கள்! அரசியல்வாதிகளை நம்புவது கஷ்டம் தான். கடவுளுக்கு அவர்கள் பயப்படுவதில்லை. பிரதமருக்கு மட்டும் தான் அவர்கள் பயப்படுவார்கள்! ஈன ஜென்மங்கள்!
எது எப்படியிருந்தாலும் மித்ரா மீது நமபிக்கை கொள்வோம். இந்த முறை ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
தெரு ஓரங்களில் கடைகளை வைத்துக் கொண்டு பல பெண்கள் கஷ்டத்தில் தான் ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பண வசதி இருந்தால் இன்னும் சிறப்பாகவே செயல்படுவார்கள். அவர்களிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டால் யாருக்கும் எந்த உதவியும் கிடைக்காமல் போய்விடும். அதற்கான வழிவகைகளைத் தான் மித்ரா கண்டறிய வேண்டும். எளிமையான முறையில் கொடுக்கல் வாங்கும் இருக்க வேண்டும்.
சங்கீதா அக்காவுக்கு உதவிகள் கிடைத்ததில் நமக்கு மகிழ்ச்சியே. இன்னும் பலர் உதவிகள் கிடைக்க வரிசையில் நிற்கின்றனர். இந்த முறை மித்ரா இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தராமல் எதிர்பார்க்கும் மனமாற்றத்தை தரும் எனறே நாங்கள் நம்புகிறோம்.
சங்கீதா தொழிலில் சிறந்து விளங்க மனமாற வாழ்த்துகிறோம்; பாராட்டுகிறோம்!
Friday, 12 May 2023
நம்பிக்கை அளிக்கிறது!
Thursday, 11 May 2023
இது வேண்டாத வேலை!
பினாங்கில் திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம்
Wednesday, 10 May 2023
அடி! அடி! சாகும்வரை அடி!
தேரை இழுக்கும் காளைகள் - சித்ரா பௌர்ணமி,தெலுக் இந்தான்
சித்ரா பௌர்ணமி கொண்டாட்டம் என்றால் அதற்குப் பெயர்பெற்ற இடம் தெலுக் இந்தான் என்பது நாம் அறிந்ததுதான்.
ஆனால் இந்த ஆண்டு திருவிழா நாடெங்கிலும் புகழ்பெற்று விட்டது, தவறான காரணங்களுக்காக!
நம்மால் ஒரு சில விஷயங்களைப் புரிந்த கொள்ள முடியவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் எப்போதும் நடப்பது தான். காளைகள் வைத்து தேர்களை இழுப்பார்கள். அதற்கும் காளைகள் பழக்கப்பட்டவைகள் தான்.
கோவிட்-19 தொற்று கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திய தாக்கத்தினால் தேர் இழுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போயின. அதன் பின்னர் தேர் இழுக்கும் காளைகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படவில்லை. அதன் விளைவு தான் மேற் கூறப்பட்ட மனிதாபிமானமற்ற அந்த நிகழ்ச்சி.
ஒரே ஒரு பக்தரின் செய்கையினால் தேர்விழாவின் நோக்கமே மாறிப்போய்விட்டது. கௌரவமாக பக்தர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் கௌரவமற்ற முறையில் ஒருவர் நடந்து கொண்டது தேர்த்திருவிழாவையே திசை திருப்பிவிட்டது.
கோயில் திருவிழா சிறப்பாக நடந்தால் அந்தக் கோயில் நிர்வாகத்திற்கு நமது பாராட்டைப் பொழிகிறோம். ஆனால் கோயில் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் "அடி! அடி! சாவும்வரை அடி!" என்று ரௌடிகளில் ஓருவர் போல் பேசினால் அதனை என்னவென்று சொல்லுவது? கோயில் நிர்வாகம் ரௌடிகளின் கையில் மாற்றப்பட்டு விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றும்.
நடந்தது நடந்தது தான். பேசிப்பயனில்லை. நாம் பொதுவான ஒரு கருத்தைச் சொல்லுகிறோம். இனி எந்தவொரு கோவில் நிர்வாகமாக இருந்தாலும் காளைகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இப்போதெல்லாம் தேர்களை இழுக்க பலவித வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இனி அனைத்து கோயில் நிர்வாகங்களும் நவீன முறையில் எது சரியோ அதன்படி மாறிக்கொள்ளுங்கள். அதைத்தான் நாம் சொல்ல முடியும்.
அன்று மட்டும் அந்த காளைகள் தடுமாறி விழுந்து, தேரும் கவிழ்ந்து - அப்படி ஓர் அசாம்பாவிதம் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நாட்டுக்குக் கோளாறு, உலகத்திற்குக் கோளாறு என்று கதை கட்டியிருப்பீர்கள். தவறு செய்வது நீங்கள். பழியோ அந்த காளைகள் மேல் போயிருக்கும். நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.
வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களுக்கு இறைவன் நல்வழி காட்டட்டும்!
Tuesday, 9 May 2023
நாம் குடிகார கூட்டமா?
ஒர் இந்தியப்பெண் வேலை முடிந்து வீடு திரும்ப 'கிரேப்' கார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்.
Monday, 8 May 2023
இந்தியனா? வேல இல்லே!
இப்போதெல்லாம் மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி கேட்கிறோம்!
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமானால் "நீங்கள் மலாய்க்காரராக இருக்க வேண்டும்!" என்று இப்படி ஒரு பதிலை ஓர் இந்தியப் பெண்ணுக்குச் சொன்னார் அந்த நிறுவனத்தின் வரவேற்பாளராக இருந்த ஒரு மலாய்ப் பெண். இத்தனைக்கும் அந்த நிறுவனமோ ஓரு மலாய்க்காரர் நிறுவனம் அல்ல! இத்தனைக்கும் அந்த மலாய்ப் பெண்ணோபெரிய பதவி ஏதும் வகிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு அப்படிப் பேசுவதற்கு துணிச்சலைக் கொடுத்தது யார் என்றும் புரியவில்லை.
பொதுவாக இப்போதெல்லாம் பல இடங்களில் இந்திய இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் பல பிரச்சனைகள் எழுகின்றன. நிறுவனங்களின் கொள்கை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இடையே உள்ள சிலர் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வாசலைக்கூட மிதிக்க விடாமல் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பொதுவாக பேசப்படுவது என்னவென்றால் இந்தியர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுப்பதில்லை என்பது தான். உண்மையோ பொய்யோ அது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நேரத்தில் நாம் ஒருசில ஆலோசனைகளைக் கூறலாம். ஏற்க முடிந்தது தான். எல்லா நிறுவனங்களிலும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுப்பதை நிறவனங்கள் விரும்புவதில்லை. எது எப்படியிருப்பினும் குறிப்பிட்ட விழுக்காடு இந்தியர்களின் எண்ணிக்கை நிறுவனங்களில் இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். சில இடங்களில் ஆறு விழுக்காடு, ஏழு விழுக்காடு அல்லது எட்டு விழுக்காடு கூட இருக்கலாம். விழுக்காட்டிற்கு ஏற்ப வேலைகள் தரப்பட வேண்டும்.
இதற்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் இன்று இந்தியர்களின் நிலைமை தான் மோசமாக இருக்கின்றது. மலாய்க்காரர்களுக்கு எப்படியோ வேலைகள் கிடைத்து விடுகின்றன. இந்தியர்களின் நிலைமை தான் பரிதாபம். ஆனால் வெறும் பரிதாபம் மட்டும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு விடாது. நடவடிக்கைகள் வேண்டும்.
இந்தியர்களுக்கு வேலை கிடையாது என்று சொல்லுவதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கிடையாது என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லையென்றால் சிறு தொழில்கள் செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்கும் ஒரு பக்கம் கதவடைப்பு. இப்படி எங்குப் பார்த்தாலும் கதவடைத்தால் அப்புறம் இந்தியர்களின் நிலைமை என்னாவது?
ஒருசில விஷயங்களில் நமது தலைவர்கள் நமது உரிமைகளைப்பெற வாய்திறந்து பேச வேண்டும். ம.இ.கா. வினரைப் போல பட்டும் படாமலும் போய்க் கொண்டிருந்தால் இந்த ஒற்றுமை அரசாங்கத்திலும் நாம் எந்தவித பயனையும் அனுபவிக்க முடியாது.
எல்லா மலேசியர்களும் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும். அதில் இந்தியர்களும் அடங்குவர்.
Sunday, 7 May 2023
'மனி' பிரச்சனையால் ஆட்டம் காண்கிறதா?
மனிதவள அமைச்சு தள்ளாட்டம் ஆடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அமைச்சர் சிவகுமாருக்கு ஏனோ இப்படி ஒரு சோதனை என்று அனைவரும் தான் கேட்கிறார்கள்! என்ன பதில் சொல்ல?
பதவியேற்று ஒரு சில மாதங்களிலேயே இந்த அளவுக்கு வேறு யாரும் எந்த சோதனைகளையும் சந்திக்கவில்லை என்றே சொல்லலாம்.
அமைச்சில் என்ன தான் பிரச்சனை என்பது முழுமையாகத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை எந்த அமைச்சாக இருந்தாலும் வழக்கமாக பணிபுரிபவர்கள் அங்கு பணியில் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு தான் அமைச்சின் பணிகளை அமைச்சரும் தொடர வேண்டும். அமைச்சரும் இவருக்கு வேண்டியவர்களைப் பணியில் அமர்த்திக்கொள்ள வாய்ப்பு இருக்கலாம். ஆனாலும் திடீரென்று ஒருவரைக் கொண்டு வருவதும் போவதும் யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம்.
இந்த அமைச்சில் ஏன் இந்த அளவுக்குப் பிரச்சனைகள் என்பது வெளியே உள்ள நமக்கு அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள சாத்தியமில்லை. நம்முடைய கேள்விகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அமைச்சர் சிவக்குமார் ஏன் இப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டார் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.
அதெப்படி ஒரு சில மாதங்களிலேயே அமைச்சருக்கு இந்த நிலைமை? எங்கே தவறு நடந்தது?
பொதுவாக மனிதவள அமைச்சு பணம் தாராளமாக புழங்கும் ஓர் அமைச்சு என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர் என்றாகே வாயில் எச்சில் ஊறுபவர்கள் இருக்கிறார்கள்.! அந்த அளவுக்கு வருமானம் கொட்டுவதாகத் தெரிகிறது!
அனேகமாக வருங்காலங்களில் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று கணிக்கப்படுகின்றது. உள்நாட்டுத் தொழிலாளர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் வேண்டும் என்று முதலாளிகள் அடம் பிடிக்கிறார்களாம். அதற்காக எந்த எல்லைக்கும் போக அவர்கள் தயாராய் உள்ளனர்.
ஆனால் உள்நாட்டுத் தொழிலாளர்களோ "எங்கள் எல்லையை விட்டு எங்களைத் துரத்தாதீர்கள்" என்று குமுறுகிறார்கள். ஆனால் இவர்களால் அமைச்சில் உள்ளவர்களுக்கு என்ன இலாபம் என்று இலாப-நட்ட கணக்கைப் பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்! அதனால் எல்லாமே ஒரே குழப்பம்.
ஊழல் தடுப்பு ஆணையம் தனது பணிகளை இப்படி "வழ வழ கொழ கொழ" என்று இழுத்துக் கொண்டு போவதால் நாமும் குழம்பிப் போகிறோம்! இப்படி இழுத்துக் கொண்டு போவதால் அமைச்சின் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னைக் கேட்டால் "வெட்டு ஒன்னு துண்டு இரண்டு" என்று ஊழல் தடுப்பு ஆணையம் செயல்பட வேண்டும். ஆனால் என்ன செய்ய? அரசியல் என்று ஒன்று இருப்பதால் நின்று நிதானமாகத் தான் அரசாங்கம் செயல்பட வேண்டியுள்ளது!
மனிதவள அமைச்சு மீண்டும் சுறுசுறு வென இயங்க வேண்டும்! அதுவே நமது வேண்டுகோள்!
Saturday, 6 May 2023
நேரம் தவறாமை முக்கியம்!
இங்கு நான் திண்டுக்கல் லியோனியைப் பற்றி பேசவில்லை. அவரும் அவரது பட்டிமன்ற குழுவினரும் தாமதமாகியதற்கு ஏற்பாட்டாளர்களே காரணம். அவர்கள் தான் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தவறானவர்கள் மீது கல்லெறியப்பட்டது என்பது தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த தவறு. ஆனால் அவர்கள் ஏற்பாட்டாளரைக் குறிவைக்கவில்லை. லியோனி என்கிற கிறிஸ்துவர் மீது வைத்த குறி அவர்களுக்குச் சாதகமாகி விட்டது! அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள், அவர்களுக்கு அது போதும்! அதற்கு மேல் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது. அது தான் அவர்களது சிகரம்! தொட்டு விட்டார்கள்! மகிழ்ச்சியே!
காலதாமதம் என்பதைப் பொதுவாக நான் ஏற்றுக் கொள்வதில்லை. நான் எல்லாகாலத்திலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன். ஆனால் எனது நண்பர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் நேரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள்! யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு அந்த பழக்கமில்லை!
நேரத்தை வீணடிப்பவர்கள் மீது எனக்குக் கோபம் உண்டு. யாருக்கும் அந்த உரிமை இல்லை. இந்த பட்டிமன்றத்தையே எடுத்துக் கொள்வோம். இரண்டு மணி நேர தாமதம் என்பது சாதாரண விஷயம் அல்ல. சுமார் 300 பேர் நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்தால் வீணடிக்கப்பட்ட மொத்த மனித நேரம் என்பது 600 மணி நேரம்!
தமிழர்களின் முன்னேற்றம் ஏன் தடைபடுகிறது என்றால் நமது நேரத்தை நம் முன்னேற்றத்துக்காக செலவழிப்பதில் மிகவும் கஞ்சத்தனம் காட்டுகின்றோம்! தேவையற்றதற்காக எவ்வளவோ செலவழிப்போம். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோம். நாம் என்ன வேலை செய்கிறோமோ அது பற்றி தான் நமக்குத் தெரியும். மற்றபடி அந்த நிறுவனத்தைப் பற்றி அதற்கு மேல் நமக்குத் தெரிந்து கொள்வது நமக்கு அவசியம் இல்லை என நினைக்கிறோம். நிறுவனத்தைப்பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். பதவி உயர்வு எப்படிக் கொடுக்கப்படுகின்றது, நிறுவனத்தின் கொள்கைகள் என்ன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நாமும் அவர்களோடு தொடர வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நமது தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
பகுதி நேர தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அது பகுதி நேரமாக இருந்தாலும் அந்தத் தொழிலைபற்றியான முழு விபரங்களைத் தெரிந்து கொள்ள நேரத்தை செலவழித்தால் தான் முடியும். இல்லாவிட்டால் அரைகுறை என்கிற பெயர் தான் வரும்.
நம்முடைய குறைபாடு எல்லாம் நமது நேரத்தை தேவையானவற்றுக்கு நாம் செலவழிப்பதில்லை. எது நம்மைப் பின் நோக்கித் தள்ளுமோ அதற்குத்தான் தாராளமாக நேரத்தை நாம் செலவழிக்கிறோம்.
நேரம் தவறாமை, நேரக் கவனக்குறைவு, நேரத்தை வீணடித்தல் - இப்படி எந்தப்பெயரில் சொன்னாலும் நட்டம் என்னவோ நமக்குத்தான்!
Friday, 5 May 2023
இது நல்லதொரு தொடக்கம்!
டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் விளக்குகிறார்
மித்ரா, இந்திய சமூக உருமாற்றத்திட்டப்பிரிவு, தனது பணிகளை இன்று ஆரம்பித்தது.
ஏற்கனவே இல்லையோ என்று கேட்டால் அதை விட்டுவிடுவோம்! அதனை நோண்டினால் கண்ட கசடைகளின் மீது கழிவுகளைக் கொட்ட வேண்டி வரும்.
இன்று புதிதாய் பிறந்தோம் என்பது போல இன்றிலிருந்து மித்ராவை புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.
இன்று செய்தியாளர் கூட்டத்தில் மித்ராவின் சிறப்புக்குழுவின் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் முக்கியமான மூன்று திட்டங்களை அறிவித்திருக்கிறார். அனைத்தும் பி40 மக்களுக்கானது.
இடைநிலைப்பள்ளிகளில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2000 ரிங்கிட் உதவித் தொகை. இரண்டு: தமிழ் பாலர் பள்ளிகளுக்கான நிதியுதவியாக 200 ரிங்கிட் மூன்று; டைலிசீஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் உதவிதொகையாக 200 ரிங்கிட் மாதத்திற்கு நான்கு முறை கொடுக்கப்படும்.
இதன் முழு விபரங்களும் மித்ரா வெளியிடும். கல்விக்கான தொகை போதுமா என்பது நமக்குத் தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஒரு முடிவுக்கு வரமுடியாது. இடைநிலைக்கல்வி, பாலர்பள்ளிகளுக்கு உதவுவது உயர்ந்த நோக்கம் உடையது. அதே போல உயர்கல்வி நிலையங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு - கடன் உதவி கிடைக்காத மாணவர்களுக்கு - உதவுவது மிகவும் தேவையானது. எஸ்.பி.எம். முடித்த மாணவர்களில் கலவியைத் தொடர முடியாத மாணவர்கள் கைத்திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் தவிர்க்க முடியாதது.
எப்படியோ மித்ரா சரியாகவே அடி எடுத்து வைத்திருக்கிறது.
இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றையும் நாம் மித்ராவின் கவனத்திற்குக் கொண்டு வரத்தான் வேண்டும். ஆரம்பகாலத்தில் இப்படி ஒர் அமைப்பை ஏற்படுத்தியதற்கான காரணமே இந்தியர்கள் வியாபாரத்துறையில் ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். இப்போதும் அதுவே மித்ராவின் பிரதான இலட்சியமாக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் வியாபாரிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் பெரும் வியாபாரிகள். நாம் அவர்களுக்கு எதிரிகள் அல்ல. சிறு, குறு வியாபாரிகளுக்கான உதவிகள் பெருக வேண்டும் என்பதே நமது விருப்பம். வியாபாரிகளுக்கென குறைந்தபட்சம் ஐந்து கோடி வெள்ளியாவது ஒதுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் அதிகம் பயன்பெற வேண்டும்.
கடன் பெறுவதற்கான வழிமுறைகள் வியாபாரிகளுக்கு விளக்கப்பட வேண்டும். திடீரென்று நேற்று முளைத்த காளான்களுகெல்லாம் உதவிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. எத்தனை ஆண்டுகள் வியாபாரத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள், கணக்குவழக்குகள் எப்படி இருத்தல் வேண்டும் போன்றவை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
கடன் கேட்கும் இடங்களில் மலாய்க்காரர்களைப் போட்டால் எதுவும் நடக்காது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒருவர் தோல்வியுற்றால் அவருடைய தவறுகளை விளக்கி மீண்டும் அடுத்த ஆண்டு எப்படி மனு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டாமல் 'தகுதி இல்லை' என்று ஒரே வார்த்தையில் அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். இது நமது ஆலோசனை. அவ்வளவு தான்.
இது ஒரு நல்ல தொடக்கம். மித்ரா தொடர்ந்து பீடு நடை போட வேண்டும். சமுதாயத்திற்கு, தலைவர்களுக்கு அல்ல, நல்ல சேவைகளைக் கொடுக்க வேண்டும்.
Thursday, 4 May 2023
மறைந்தார் மனோபாலா!
நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைந்தார் அவர் கல்லிரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது மகன் அறிவித்திருக்கிறார்.. அவருக்கு வயது 69. அவரின் இயற்பெயர் பாலசந்தர்.சினிமாவுக்காக அவரது பெயர் மாற்றப்பட்டது.
நடிகர் மனோபாலா சினிமா பயணம் என்பது 1970 களில் தொடங்குகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சிபாரிசினால் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளராகச் சேர்ந்தார். அதன் பின்னர் பல பரிணாம வளர்ச்சிகள்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் - இப்படி பன்முகத்திறமுடைய மனோபாலா நமக்கென்னவோ நகச்சுவை நடிகர் என்பது தான் அதிகப் பரிச்சையம். சுமார் இருபது படங்களையும் இயக்கிள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்கள் என்பதால் இப்போது நாம் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இவர் இயக்கிய படங்களில் ஒன்று "ஊர்க்காவலன்" என்று ரஜினி நடித்த படமும் அடங்கும்.
திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லலாம். ஏதோ ஓரிரு காட்சிகளிலாவது வந்து சிரிப்பு மூட்டிவிட்டுத்தான் போவார்! சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நல்ல நகைச்சுவையாளர்.
இன்னொரு கூடுதல் செய்தி: அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பதாகும்.
மனோபாலா மறைந்துவிட்டார். சினிமாவில் ஒரு நல்ல மனிதராக அவர் இறந்து போனார். சினிமாவில் நல்ல மனிதர் என்று சொல்லுவது சாதாரணம் விஷயம் அல்ல. ஒரு சிலருக்குத் தான் அது பொருந்தும்.
நல்லவர்கள் என்றென்றும் நல்லவர்கள் தான்.
Wednesday, 3 May 2023
ஐயா! திண்டுக்கல் லியோனி வருந்துகிறோம்!
நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் முதன் முதலாக மலேசியாவில் ஓர் அசாம்பாவிதத்தைச் சந்தித்தார் என்று தாராளமாய்ச் சொல்லலாம். பல உலக நாடுகளுக்குச் சென்றவர். இந்த உபசரிப்பு இங்குத் தவிர வேறு எந்த நாடுகளிலும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை!
தமிழ் நாட்டில் அவருக்கு அது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் மலேசியாவில் அதுவும் பினாங்கில் இது நடந்திருக்கக் கூடாது; ஆனால் அது நடந்து விட்டது.
இரண்டு மணி நேரம் தாமதம் என்பதற்காக இப்படி ஒரு அசாம்பவிதம் நடக்க வ்ழியில்லை. இந்நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட நேரத்தில் நடந்ததாகச் சரித்திரம் இல்லை! அதனால் நேரம் தான் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு காரணமாக இருக்க நியாயமில்லை.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்தவை திட்டமிட்டு நடந்ததாகத்தான் தெரிகிறது. நேரத்திற்காக யாரும் இந்த அளவுக்குக் குரல் எழுப்பப் போவதில்லை. மலேசியாவில் நம்மைவிட பொறுமைசாலிகள் யாரும் இல்லை என்பது தெரியும். நாசிலெமாக் வாங்குவதற்கு விடிய விடிய காத்திருந்து வாங்கியவர்கள் நாம்!
நம் நாட்டில் நடப்பதெல்லாம் ஏறக்குறைய தமிழ் நாட்டை ஒட்டித்தான் இருக்கும். ஒன்று: இவர்கள் திராவிடர்களாக இருக்க வேண்டும். இரண்டு: அண்ணா தி.மு.க. வின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும். மூன்று: பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கான விளக்கம் என்னவென்றால்: தமிழர்களை எதிர்க்கின்ற திராவிடர்கள் எப்போதும் நம்மிடையே இருக்கின்றார்கள். இரண்டு: அண்ணா தி.மு.க. ஆதரவாளர்களாக இருக்க வேண்டும். லியோனி தி.மு.க. வைச் சேர்ந்தவர். மூன்று: இந்துத்துவா அமைப்பினராக இருக்க வேண்டும். லியோனி கிறிஸ்துவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் கிறிஸ்துவ எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டும்.
இவர்களைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யாரென்று தெரியவில்லை. இதில் அதிசயம் என்னவென்றால் ஒரு பெண்மணி கூட வாரிச்சுருட்டுக் கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றார்! அட ஒரு நல்ல காரியத்திற்காக "வாங்க தாயே!"என்று கெஞ்சினால் கூட வரமாட்டார்கள்! சீரியல் நாடகங்களில் மூழ்கிப் போயிருப்பார்கள்!
நடந்தது தமிழ் மக்களுக்குத் தான் வெட்கக்கேடு. தமிழர்களைத் தாக்கினால் பலருக்குச் சந்தோஷம். அதுதான் நடந்திருக்கிறது. இருந்தாலும் இது நடந்திருக்கக் கூடாது. நடந்துவிட்டது. இவர்களையெல்லாம் மீறி தான் தமிழன் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறான். அது தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஐயா திண்டுக்கல் லியோனி, இதனையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு மேடைகளில் பேசி சிரிக்க வைப்பார்! அது தான் அவரது இயல்பு. ஆனால் மலேசியாவுக்கு இனி வரமாட்டார் என்பது மட்டும் உறுதி!
இப்படி ஒரு நிகழ்வுக்காக வருந்துகிறோம், வருந்துகிறோம், வருந்துகிறோம்!