Tuesday 2 May 2023

நண்பா! உங்களுக்கு ஒரு சபாஷ்!

 

வட்டி முதலைகளின் அட்டகாசம் அடங்காத அளவிற்குப் போய்க் கொண்டிருக்கிறது! 

யாராலும் அவர்களை அடக்க முடியவில்லை என்பது தான் நிஜம். யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகள் என்றால் யாராலும் அவர்களை அடக்க முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். காவல்துறையே அவர்களைப் பார்த்துப் பயப்படுகிறது, அவ்வளவு தான் சொல்ல முடியும்!

இவர்களால் பாதிக்கப்பட்டவர்ளில் ஒருவர் தான் விக்ரம் நாயுடு. ஏதோ ஆபத்து அவசரத்துக்காக வட்டி முதலைகளிடமிருந்து இரண்டாயிரம் வெள்ளி கடன் வாங்கினார். அதற்காக அவர் அவர்களுக்குத் திரும்பக்கட்டிய தொகை இருபதனாயிரம் வெள்ளி!  அவர்கள் எப்படி வட்டியைக் கணக்குப் பண்ணுகிறார்கள் என்றால் வட்டி ஒரு மணி நேரத்திற்கு இருபத்தினான்கு (24) வெள்ளியாம்! அவர்களின் தொல்லைகளில் இருந்து மீள்வதற்காக, அவர்கள் கேட்ட தொகையைக்கட்டி,   அவர்களின் பிடியிலிருந்து விடுபட்டுவிட்டார்.

இப்போது யாரும் எதிர்பாராத விதமாக  தனி ஆளாக நின்று வட்டி முதலைகளின்  சட்டபூர்வமற்ற விளம்பரங்களை  அகற்ற ஆரம்பித்துவிட்டார்! பாராட்டுகிறோம்!

ஆனால் அவர் இப்படி தனி ஆளாகச் செய்வதைவிட அரசாங்கமே இதனைச் செய்ய வேண்டும் என்பதே நமது ஆலோசனை. மூக்கியமாக காவல்துறை இது போன்ற சட்டபூர்வமற்ற விளம்பரங்களை வைப்போர் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்பது அவசியம்.

காவல்துறை இவர்களைக் க்ண்டுபிடிக்க பல்வேறு வழிகளைக் கையாள்வது நமக்குத் தெரியும். அந்த வழிகளில் இதுவும் ஒரு வழியாக இருக்கட்டும்.  காவல்துறை எச்சரிக்கைக் கொடுத்தால் இந்த விளம்பரங்கள் வருவதற்கு வழியில்லை. எப்போதோ செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை. அப்படியே செய்திருந்தால் வட்டிமுதலைகள் காவல்துறையை மதிக்கவில்லை என்பது பொருள்.

வட்டி முதலைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பது தான்  இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இன்னும் எத்தனையோ  சம்பவங்கள் மக்களின் பார்வைக்கு வராமல்  தப்பித்து விடுகின்றன. அதற்குப் பயம் தான் காரணம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புகார் செய்தவருக்குத் தான் பிரச்சனை. அதனாலேயே பலர் இதனைக் காவல்துறைவரைக் கொண்டுப் போவதில்லை.

காவல்துறை ஒன்று மட்டுமே இதற்குச் சரியான தீர்வைக் காணமுடியும். அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அவர்களைத்தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது.

நண்பா! விக்ரம் நாயுடு, உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.  ஆனால் தனி ஒரு மனிதனாய் செய்ய முடியாது. காவதுறையால் தான் செய்ய முடியும். சீக்கிரம் அதற்கான ஒரு முடிவை காவல்துறை காணும் என நம்புகிறோம்!

No comments:

Post a Comment