Wednesday, 17 May 2023

உண்மை குற்றவாளி யார்?

 

நாட்டில் வட்டி முதலைகளின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது உண்மையில் நமக்குக் கவலையளிக்கிறது.

காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. நடவடிக்கை எடுக்கப்படுகிறது  என்பதாகத்தான் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் கூட ஜொகூர் மாநிலத்தில், கார்களுக்கு வர்ணத்தைக்கொட்டி, அசிங்கப்படுத்தினார்கள்  என்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒரே காரணம் தான். கடன் வாங்கியவர்கள்  கடனைத் திரும்பக் கொடுக்கவில்லை,  என்பதாக வட்டி முதலைகள் அடியாட்களை வைத்து கார்களுக்கு வர்ணத்தைக்கொட்டி அல்லது அவர்களின் வீடுகளில் வர்ணங்களைக் கொட்டி அசிங்கப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.  

நமது நாட்டில் இது ஒரு தொடர்கதையாகத்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் இதனை ஒழிக்க முடியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் இதனை ஒழிக்கவே முடியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது!

ஆமாம்! ஒழிக்கவே முடியாது தான்! ஒரே காரணம் காவல்துறை வட்டி முதலைகளின் அடியாட்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கிறதே தவிர  வட்டி முதலைகள் யார் என்று ஆழமாகப் போவதில்லை. யார் அந்த அடியாட்களை ஏவி விடுகிறார்கள், யாரிடமிருந்து பணம் வெளியாகிறது போன்ற விபரங்களைக் காவல்துறையினர் தேடிப் போவதில்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லாத விஷயம் என்பதாக நினைக்கிறார்கள். ஆனல்  அந்தத் தேவை இல்லாத விஷயம் தான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஓர் அடியாட்கள் குழு இவ்வளவு துணிவுடன்  செயல்படுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு துணிவுடன் செயல்பட  யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்குத் தெரியும். ஆனால் அவர்களால் செயல்பட முடியவில்லை!  இப்போது கைது செய்யப்பட்டவர்கள் கூட  எந்த அளவுக்குத் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை!

கடுமையான தண்டனை இந்த அடியாட்களுக்குக் கொடுத்தால்  அவர்கள் மீண்டும் இந்த தொழிலுக்கே வரமாட்டார்கள் என்பது உண்மை. நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தக் கைது நடவடிக்கையே சும்மா கண்துடைப்பு வேலை என்பது தான். இவர்கள் தொடர்ந்து இதனையே தொழிலாக செய்வதைப்  பார்த்தால்  அப்படித்தான் தோன்றுகிறது.

வட்டி முதலைகளின் மீது நடவடிக்கை எடுக்காதவரை இது தொடரத்தான் செய்யும்.  இது ஒரு பயங்கரவாத அமைப்பு போன்று  நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதுவரை இது தொடரத்தான் செய்யும்!

No comments:

Post a Comment