ஒருசில தினங்களுக்கு முன்னர் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ம.இ.கா.வினர் சமீபத்தில் பிரதமர் அன்வாரைச் சந்தித்த போது பிரதமர், ம.இ.கா.வினருக்கு மகிழ்ச்சியடையும்படியான நல்ல செய்திகளை தெரிவித்ததாக ம.இ.கா. தலைவர் கூறியிருக்கிறார்.
அந்த நல்ல செய்திகளை நாமும் வரவேற்கிறோம். முக்கியமாக கவனிக்க வேண்டியது "நாட்டின் முன்னேற்றப் பாதையில் இந்திய சமூதாயம் பிந்தங்கிவிடக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டை பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் பிரதமரும் இந்திய சமுதாயத்திற்கு ம.இ.கா.வின் அரசியல் ஈடுபாடும் சேவையும் தேவை" என்று கூறியதை ம.இ.கா.விற்குப் பிரதமர் கொடுத்த அங்கீகாரம் என்பதாகவும் அந்த செய்தியாளர் கூட்டத்தில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.நிச்சயமாக இந்திய சமுதாயமும் பிரதமர் கூறியதை வரவேற்கத்தான் செய்கிறது. ம.இ.கா. இந்திய சமுதாயத்திற்குச் சுயநலமின்றி சேவை செய்ய விரும்பினால் அதனைத் தடுக்க யாரால் முடியும்?
எப்படி இருந்தாலும் ம.இ.கா.வினர் "நாங்கள் சேவை செய்யத் தயார்" என்று கூறும் போது அவர்களுக்கு நிச்சயம் யாரும் தடையாயிருக்க வழியில்லை. அதைத்தானே பல ஆண்டுகளாக இந்திய சமுதாயம் ம.இ.கா.வினருக்குச் சொல்லி வருகின்றனர்! இந்த சமுதாய அக்கறையை அவர்கள் முன்னமையே காட்டியிருந்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனாலும் எதுவும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது சமுதாயத்தின் மீது அக்கறை பிறந்திருக்கிறதே என்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!
இப்போதும் கூட சமுதாய சேவைக்குப் பல வழிகள் காத்துக் கிடக்கின்றன. எளிதான வழிகள் எல்லாம் இனி இல்லை. உழைக்காவிட்டால் இனி எதுவும் கிடைக்காது! அதனைத் தெரிந்து கொண்டால் போதும். பழைய காலம் போல் ஏதாவது செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தால் அது இனி எடுபடாது. அதனை முக்கியமாகப் புரிந்து கொண்டால் போதும்.
பிரதமர் அன்வார் ம.இ.கா.வினரை எப்படி வரவேற்றாரோ நாமும் அப்படியே அவர்களை வரவேற்கிறோம். நம் மீது அவர்கள் அக்கறை காட்டினால் நாமும் அவர்கள் மீது அக்கறை காட்டத்தான் செய்வோம்.
ம.இ.கா.வினருக்கு நமது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment