Saturday 6 May 2023

நேரம் தவறாமை முக்கியம்!

பொதுவாகவே நேரம் தவறாமை என்பது முக்கியம். அது யாராக இருந்தாலும் சரி நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

இங்கு நான் திண்டுக்கல் லியோனியைப் பற்றி பேசவில்லை.  அவரும் அவரது பட்டிமன்ற குழுவினரும் தாமதமாகியதற்கு ஏற்பாட்டாளர்களே காரணம். அவர்கள் தான் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தவறானவர்கள் மீது கல்லெறியப்பட்டது என்பது  தான் ஆர்ப்பாட்டக்காரர்கள்  செய்த தவறு.  ஆனால் அவர்கள் ஏற்பாட்டாளரைக் குறிவைக்கவில்லை.  லியோனி என்கிற கிறிஸ்துவர் மீது வைத்த குறி அவர்களுக்குச் சாதகமாகி விட்டது!  அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள்,  அவர்களுக்கு அது போதும்! அதற்கு மேல் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது. அது தான் அவர்களது சிகரம்! தொட்டு விட்டார்கள்! மகிழ்ச்சியே!

காலதாமதம் என்பதைப் பொதுவாக நான் ஏற்றுக் கொள்வதில்லை. நான் எல்லாகாலத்திலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன். ஆனால் எனது நண்பர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் நேரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள்!  யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு  அந்த பழக்கமில்லை!

நேரத்தை வீணடிப்பவர்கள் மீது எனக்குக் கோபம் உண்டு. யாருக்கும் அந்த உரிமை இல்லை. இந்த பட்டிமன்றத்தையே எடுத்துக் கொள்வோம். இரண்டு மணி நேர தாமதம் என்பது சாதாரண விஷயம் அல்ல. சுமார் 300 பேர்  நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்தால் வீணடிக்கப்பட்ட  மொத்த மனித நேரம் என்பது 600 மணி நேரம்!  

தமிழர்களின் முன்னேற்றம் ஏன் தடைபடுகிறது என்றால் நமது  நேரத்தை  நம் முன்னேற்றத்துக்காக  செலவழிப்பதில் மிகவும் கஞ்சத்தனம் காட்டுகின்றோம்! தேவையற்றதற்காக எவ்வளவோ செலவழிப்போம். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோம்.  நாம் என்ன வேலை செய்கிறோமோ அது பற்றி தான் நமக்குத் தெரியும். மற்றபடி அந்த நிறுவனத்தைப் பற்றி அதற்கு மேல் நமக்குத் தெரிந்து கொள்வது நமக்கு அவசியம் இல்லை என நினைக்கிறோம்.  நிறுவனத்தைப்பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். பதவி உயர்வு எப்படிக் கொடுக்கப்படுகின்றது, நிறுவனத்தின் கொள்கைகள் என்ன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நாமும் அவர்களோடு தொடர வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நமது தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

பகுதி நேர தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  அது பகுதி நேரமாக இருந்தாலும் அந்தத் தொழிலைபற்றியான முழு விபரங்களைத் தெரிந்து கொள்ள நேரத்தை செலவழித்தால் தான் முடியும்.  இல்லாவிட்டால் அரைகுறை என்கிற பெயர் தான் வரும்.

நம்முடைய குறைபாடு எல்லாம் நமது நேரத்தை தேவையானவற்றுக்கு நாம் செலவழிப்பதில்லை.  எது நம்மைப் பின் நோக்கித் தள்ளுமோ அதற்குத்தான் தாராளமாக  நேரத்தை நாம் செலவழிக்கிறோம்.

நேரம் தவறாமை, நேரக் கவனக்குறைவு, நேரத்தை வீணடித்தல் - இப்படி எந்தப்பெயரில் சொன்னாலும் நட்டம் என்னவோ நமக்குத்தான்!

No comments:

Post a Comment